UAE யின் பல்வேறு இடங்களில் எஸ்.எம் பாக்கரின் உரை!

  ஷார்ஜாவில் மார்க்க விளக்க கூட்டம்.
  அல் ஐய்னில் இஸ்லாமிய சொற்பொழிவு.
  புகைப்படங்களுடன் செய்தி...

 

ஷார்ஜாவில்...

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சகோ. எஸ். எம். பாக்கர் மற்றும் மாநிலச் செயலாளர் சகோ. கோவை ஜாஃபர் அவர்களும் அமீரகம் வந்திருப்பதையொட்டி அமீரகம் முழுவதும் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் பயான்கள் கலந்துரையாடல்கள் அலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


அதைத் தொடர்ந்து ஷார்ஜாவிலும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 29-02-08 அன்று ஷார்ஜா ரோலா மர்கஸில் வைத்து நிகழ்ச்சி நடந்து முடிந்தது.


கூட்டத்திற்கு ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் தலைவர் சகோ. ஷிஹாபுத்தீன் கோயா தலைமை வகித்தார்.


தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மாநிலச் செயலாளர் சகோ. கோவை ஜாஃபர் அவர்கள் 'சமுதாயமும் நாமும்' என்ற தலைப்பில் தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்னென்ன பணிகளை எவ்வாறு செயல்படுத்தி வருகின்றது என்பதையும், தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் எவ்வாறிருக்கும் என்பதையும் தெளிவாக மக்களுக்கு விளக்கிப் பேசினார். அவர் அளித்த அந்த செய்தியும், ஊக்குவிப்பும் வந்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருந்ததை நம்மால் உணர முடிந்தது.


தொடர்ந்து 'பாதை மாறாத பயணங்கள்' என்ற தலைப்பில் மாநிலப் பொதுச் செயலாளர் சகோ. எஸ். எம். பாக்கர் அவர்கள் உரையாற்றத் துவங்கினார். தமிழகத்தில் தவ்ஹீத் முளைவிட்டது முதல் தனது பசுமையான ஞாபகங்களை படிப்படியாக எடுத்துதுரைத்தார். இன்றைய தவ்ஹீத் ஜமாஅத்தினர் தாங்கள் கொண்ட கொள்கையின் உறுதியின் காரணமாக அவ்வப்போது அனுபவித்த அல்லல்கள், ஊர் ஊராக நடத்தப்பட்ட கொடுமைகள் எவற்றையும் கண்டு கலங்காமல் அவர்கள் தொடர்ந்த பாதைகள், மனதை மயக்கும் கூட்டங்களை கண்டதும் மறுமையை மறந்துவிடாமல் கர்வம் கொள்ளாமல் இறைவனின் பாதைiயில் மட்டும் செயல்பட்டு வருவதை தனக்கே உரிய பாணியில் விவரித்தார்.

 


மேலும் எதிர்வரும் மே மாதம் தஞ்சையில் நடைபெறவிருக்கும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் நோக்கம் என்ன? அதில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன? அதற்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன? அதில் நமது பங்கு என்ன? என்பனவற்றையெல்லாம் விரிவாக எடுத்துரைத்தார்.

 


இறுதியில் ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் பொதுச்செயலாளர் சகோ. ஹபீபுர்ரஹ்மான் நன்றியுரை கூறினார்.


ஷார்ஜாவின் பல பகுதிகளிலிருந்தும் எதிர்பாராவண்ணம் தவ்ஹீத் சகோதரர்களின் வருகை அமைந்திருந்தது. உள் அரங்கில் தொலைகாட்சி வசதி செய்யப்பட்டு அனைவரும் நிகழ்ச்சியைக் கண்டு பயன்பெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தது பாராட்டத்தக்கது. எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்.

அல்ஐனில்...


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். எம். பாக்கர் மற்றும் மாநிலச் செயலாளர் கோவை ஜாஃபர் ஆகியோரது அமீரக வருகையையொட்டி கடந்த 27-02-08 புதன் அன்று இரவு 9-00 மணிக்கு அல் அய்ன் மண்டலத்தில் ஒரு சிறப்பு சொற்பொழிவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு அல் அய்ன் ஜமாஅத்துத் தவ்ஹீதின் தலைவர் ஆறாம்பண்ணை முஹம்மதுசலீம் அவர்கள் தலைமை தாங்கினார். ஏகத்துவ எழுச்சி என்ற தலைப்பில் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். எம். பாக்கர் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் எதிர்வரும் மே மாதம் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் அவசியம் பற்றியும்; விரிவாக விளக்கினார். தொடர்ந்து சிறப்புரையாற்றிய மாநிலச் செயலாளர் கோவை ஜாஃபர் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் கடந்தகாலப் பணிகளையும் எதிர்காலக் கடமைகளையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு ஏராளமான சகோதரர்கள் வருகை தந்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.

 

 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005