ஷார்ஜாவில் முதல் முறையாக நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

 நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்!
 புகைப்படங்களுடன் செய்தி..

ஷார்ஜாவில் முதன்முறையாக கடந்த 11-04-08 அன்று ஒரு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மார்க்கப்பணிகளுடன் தொய்வின்றி சமுதாயப்பணிகளையும் செய்துவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமின்றி கடல் கடந்து வாழும் தமிழ் முஸ்லிம்களிடத்திலும் அப்பண்பை வளர்த்து வருவது நாம் அறிந்த ஒன்று. அதன் தொடர்ச்சியாக கடந்த 11-04-08 அன்று ஒரு மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஷார்ஜா முஸல்லா பகுதியிலிருக்கும் அல் அஹலியா மருத்துவமனையில் வைத்து நடைபெற்றது.

ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீத் மற்றும் அல் அஹலியா மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாம் துபை ஜமாஅத்துத் தவிஹீதின் மருத்துவ அணி செயலாளர் சகோ. சாதிக் அலி அவர்கள் மேற்பார்வையில் நடந்தது.

முகாமை அஹலியா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் திருமதி. வினு ஜனார்தன் மற்றும் பல் மருத்துவர் டாக்டர் திருமதி. ஜீனா அவர்களும் பொறுப்பேற்று நடத்தினர்.



குறிப்பிட்டபடி துவங்கிய மருத்துவ முகாமில் முதலில் அனைவருக்கும் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதிக்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பெண்கள் உட்பட 62 பேர் பொது மருத்துவத்திலும், 22 பேர் பல் மருத்துவத்திலும் 19 பேர் கண் மருத்துவத்திலும் சிகிச்சை பெற்றனர்.

முகாமில் கலந்து கொண்டு சிசிச்சை பெற்றவர்களில் ஏழு பேருக்கு சர்க்கரை வியாதியும் ஐந்து பேர் உயர் இரத்த அழுத்த வியாதியும் உடையவர்கள் என கண்டறியப்பட்டு மேற்படி சிகிச்சைக்கான பரிந்துரையும் வழங்கப்பட்டது.




இம்முகாம் குறித்து அஹலியா மருத்துவமனை நிறுவனர் டாக்டர். திருமதி. வினு ஜனார்தன் நம்மிடம் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அயல் நாடுகளிலும் அயராமல் பணியாற்றுவதை வெகுவாக பாராட்டியதோடு பிழைப்பு தேடி வந்தவர்களில் பலரும் தம்மையும் அறியாமல் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து கொள்வதற்கு இது போன்ற சேவைகள் உறுதுணையாக அமையும் என்றும் மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுமாயின் கட்டணத்தில் 40 சதவிகிதம் தள்ளுபடி செய்வதோடு மருந்து வகைகளிலும் தள்ளுபடிக்கான பரிந்துரை செய்யப்படும் என்றார். மேலும் வெள்ளிக்கிழமை அல்லாத விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரை இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்கள் நடத்த உதவுவதாகவும் கூறினார்.



முகாமுக்கு தேவைப்பட்ட மருந்து மாத்திரை வகைகளை ஃபார்மா கேர் நிறுவனத்தாரும் டோலர் ஜெய்ட் - ல் பணிபுரியும் ஃபார்மசிஸ்ட் சகோ. பாலாஜி அவர்களும் தந்து உதவினார்கள்.

 

மேலும் இம்முகாமுக்கு ஷார்ஜாவில் அமைந்திருக்கும் அல் நஹ்தா ஃபார்மஸி உரிமையாளர் சகோ. கபீர் அவர்கள் வருகை தந்து இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதிக்கான பரிசோதனையும் மேற்கொண்டதுடன் மருந்துகளை தம் சார்பாகவும் வழங்கினார். அவருடன் துபை கல்பான் ஃபார்மஸி - ரஃபீ மற்றும் சகோ. இஸ்மாயீல் மற்றும் சகோ. இல்யாஸ் ஆகிய ஃபார்மசிஸ்ட்களும் உடனிருந்து சேவையாற்றினார்கள். ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் தொண்டர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளில் பல அனுபவசாலிகளை மிஞ்சும் வண்ணம் செயல்பட்டு நிகழ்ச்சியை சிறப்படையச் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005