முஸ்லிம்களுக்குரிய 3.5 சதவீத இடஒதுக்கீட்டை சரியான முறையில் அமுல்படுத்தக் கோரி முதல்வருக்கு கடிதம்!

  மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் எழுதினார்.

  கடிதத்தின் நகல்...

 

தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலத் தலைவர்
பி. ஜைனுல் ஆபிதீன் எழுதும் கோரிக்கைக் கடிதம்:


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எழுதிக் கொள்வது. தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக.


தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கியதற்காக எங்கள் சார்பிலும், சமுதாயத்தின் சார்பிலும் தங்களை நேரில் சந்தித்து நன்றியையும், ஆதரவையும் தெரிவித்திருந்தோம்.


ஆனால் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வந்த பின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்லாயிரம் பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது பற்றி நளிதழ்களில் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.


முஸ்லிம்களை பி.சி.எம் (bcm) எனவும், கிறிஸ்தவர்களை பி.சி.சி. (BCC) எனவும் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கான பணியிடங்கள் எத்தனை என்பதும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் கிடைப்பதற்குப் பதிலாக ஒன்றரை சதவிகிதம் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மூன்றரை சதவிகிதம் கிடைத்துள்ளது. உதாரணத்துக்குச் சில விஷயங்களை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.


விளம்பர எண்: 135


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளம்பர எண்: 135லில் டைப்பிஸ்டுகள் பணிக்கு 3368 பேர் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றில் கிறித்தவர்களுக்கு 124 இடங்களும், முஸ்லிம்களுக்கு 54 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதே விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதே விளம்பரத்தில் ஸ்டெனோ கிராபர்கள் பணிக்கு 507 பேர் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றில் கிறித்தவர்களுக்கு 6 இடங்களும், முஸ்லிம்களுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


அரசு ஆணையின் படி மூன்றரை சதவீத இடஒதுக்கீடு கணக்கின் படி முஸ்லிம்களுக்கு 135 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்திருப்பதோ 59 இடங்களே. (ஆதாரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)


விளம்பர எண்: 142


6-12-2007 தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விளம்பர எண்: 142ல் இளைநிலை உதவியாளர்கள் பணிக்கு 75 பேரும், வரி தண்டலர்கள் பணிக்கு 256 பேரும், இளநிலை உதவியாளர்கள் (பிணையற்றது) பணிக்கு 3434 பேரும், நிதியமைச்சுப் பணிகளுக்கு 338 பேரும் ஆக மொத்தம் 4103 ஆட்கள் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.


இவற்றில் கிறித்தவர்களுக்கு 140 இடங்களும், முஸ்லிம்களுக்கு 78 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதே விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதில் தமிழக அரசின் மூன்றரை சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருந்தால், கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது போன்றே முஸ்லிம்களுக்கும் 140 இடங்கள் கிடைத்திருக்கும். (ஆதாரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)


விளம்பர எண்: 149


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 29-01-2008 தேதியிட்ட விளம்பர எண்: 149லில் துணைப் பேராசிரியர் (சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் சைகாலாஜிஸ்ட்) ஆகிய பொறுப்புகளுக்கு 18 பேர் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றில் கிறிஸ்தவர்களுக்கு ஒரு இடம் முஸ்லிம்களுக்கு பூஜ்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதாரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)


விளம்பர எண்:150


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 30-01-2008 தேதியிட்ட விளம்பர எண்:150லில் தீயணைப்பு மற்றும் மீட்பு சார்நிலைப் பணிகள் துறையில் நிலைய அலுவலர், தொழில் மற்றும் வணிகத் துறையில் பண்டகக் காப்பாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்து துறையில் பண்டகக் காப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு 29 பேர் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் முஸ்லிம்களுக்கு ஒரு இடமும் வழங்கப்படவில்லை.


விளம்பர எண்:153


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 09-02-2008 தேதியிட்ட விளம்பர எண்:153லில் துணை இயக்குநர் டவுன் மற்றும் கண்ட்ரிபிளானிங்கில் 15 பேரும், டிராப்ட்ஸ் மேன் டவுன் மற்றும் கண்ட்ரிபிளானிங்கில் 9 பேரும் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் முஸ்லிம்களுக்கு ஒரு இடமும் வழங்கப்படவில்லை. இங்கும் பூஜ்யம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் மிகக் குறைவானதே. இன்னும் அதிகமான காலியிடங்களில் இவ்வாறே அதிகாரிகளால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.


முஸ்லிம்களுக்கு ஏன் மூன்றரை சதவிகிதம் கிடைக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டால் அரசின் உத்தரவு அப்படித் தான் உள்ளது எனக் கூறுகிறார்கள். இதை ரோஸ்டர் முறை என்று சொல்லி மழுப்புகின்றனர்.


மற்ற எல்லா சமுதாயத்துக்கும் அவர்களின் பங்கு கிடைத்துவிட முஸ்லிம்களுக்கு மட்டும் ஒன்றரை சதம் கிடைக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டு அதை ரோஸ்டர் என்று கூறி நியாயப்படுத்துவது முஸ்லிம்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


எனவே ரோஸ்டர் முறை தான் காரணம் என்றால் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் வகையில் ரோஸ்டர் முறையை மாற்றியமைப்பது தான் சமூக நீதியாகும் என்று முஸ்லிம்கள் கருதுகிறோம்.


எனவே இடஒதுக்கீடு அமுலுக்கு வந்த பின் செய்யப்பட்ட, செய்யப்படவுள்ள நியமனங்கள் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், அதிகாரிகள் செய்யும் தவறைச் சரி செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு தமிழக முதல்வருக்கு எழுதிய தனது கடிதத்தில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.




 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005