(உரிமை 10 : குரல் 44 - 07/07/2006 ) உணர்வு வார இதழில்...

குஜராத் அக்ஷர்தம் கோவில் தாக்குதல்: தீர்ப்புகள் திருத்தப்படுமா?


2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதியன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள அக்ஷர்தம் சுவாமி நாராயண் கோவிலில் புகுந்த இரண்டு பேர் அங்கிருந்த பக்தர்கள் மீது குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 29 பக்தர்கள், 2 தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், 2 மாநில கமாண்டோக்கள் உட்பட 33 பேர் இறந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளும் அதே இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த கோவில் தாக்குதலை இந்திய நாடே ஒன்றுபட்டு கண்டித்தது. இந்த கண்டிப்பில் முஸ்லிம்கள் முன்னணியில் நின்றனர்.


நாமும் உணர்வு குரல் 7:04 (2002 அக்டோபர் 04-10) இதழில் நமது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளோம். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர் முர்துஷா ஹபீப் யாசின், அஷ்ரப் முஹம்மது ஃபரூக் என்னும் இவர்கள் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் பிரிவான தரீக்கே காசால் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் குஜராத் போலீஸார் அறிவித்தனர்.


மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் பற்றி பொடா சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து இதற்குத் தூண்டுதலாக இருந்ததாகச் சொல்லி 32 பேரை குஜராத் போலீஸ் தேடியது. இப்படி காவல்துறையினால் தேடப்பட்ட அனைவரும் முஸ்லிம்களாவர்.


குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி நடைபெறுகிறது. இவருக்கு கீழ் செயல்படும் காவல்துறையிடம் பிடிபட்டால் - பிடிபட்டவர்கள் சாக வேண்டியதுதான். அதனால் உயிருக்குப் பயந்து 26 பேரும் கண்காணாத இடத்துக்குப் போய் தலை மறைவாகிவிட்டனர். இன்று வரை இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.


உண்மையில் இவர்கள் தலைமறைவாகி விட்டார்களா? அல்லது குஜராத் காவல்துறை இவர்களை கொன்று புதைத்து விட்டு, தலைமறைவாகி விட்டார்கள் என்று கதை கட்டுகிறதா? என்று தெரியவில்லை. இந்தச் சந்தேகம் மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.


இந்நிலையில் சஜ்ஜாத் கான், முஃப்தி அப்துல் கய்யூம் மன்சூரி, ஆதம் சுலைமான் அஜ்மீரி, அஹ்மது சலீம் ஷேக், முஃப்தி அப்துல் மியான் காதிரி, அல்தாப் ஹுஸைன் மாலிக் ஆகிய 6 பேரை குஜராத் காவல்துறை கைது செய்து, பொடா நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியது. இந்த 6 பேரில் இரண்டு பேர் ஆ-ம்கள் (மதகுருக்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விசாரித்த பொடா நீதிபதி சோனியா கோகனி - குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்து, சஜ்ஜாத்கான், முஃப்தி அப்துல் கய்யூம், ஆதம் சுலைமான் அஜ்மீரி ஆகிய மூவருக்கு மரண தண்டனையும் முஹம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், முஃப்தி அப்துல் மியான் காதரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அல்தாப் ஹுஸைன் மாலிக்கிற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
கோவில் தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் கோயிலுக்குள் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். இந்த 6 பேரும் தாக்குதலில் ஈடுபடாதவர்கள். அப்படி இருக்கும் போது மரண தண்டனையும் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொடா சட்டத்தின் 32வது பிரிவின்படி குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரிடம் கொடுக்கும் வாக்குமூலம் செல்லும். ஆனால் கிரிமினல் சட்டத்தில் அது செல்லாது. போலீஸார் நிர்பந்தித்து வாங்கும் வாக்கு மூலங்களும், ஜோடனைகளும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் அடித்து துன்புறுத்தி வாங்கிய இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் நீதிபதி இந்த அளவுக்கு கடுமையான தண்டணையை வழங்கியுள்ளார்.


நேரிடையான தாக்குதலில் ஈடுபடாத - சம்பவ இடத்திலும் இல்லாத இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை நீதித் துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவர்களை நிரபராதிகள் என்றும், கோவில் தாக்குதலுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அடித்துச் சொல்கின்றனர். தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது இவர்களின் கூற்றை நம்பாமல் இருக்க முடியவில்லை. முஸ்லிம் மத குருக்கள் அவர்களின் பாடசாலைகளில் கோழைகளாக உருவாக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இவ்வளவு பெரிய தாக்குதலில் நிச்சயம் சம்பந்தப்பட்டிருக்க முடியாது. இது ஒருபுறமிருக்க ஒருவரை சிறையில் பிடித்து அடைத்துவிட்டு 'நீ நிரபராதி என்று நிரூபி' என்று சொன்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பொடா சட்டம் அப்படித்தான் சொல்கிறது. அதோடு காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடுகள் இருப்பதால்தான் பொடா சட்டமே வேண்டாம் என்று மனித உரிமை அமைப்புகள் போராடி - மத்திய அரசு இந்தச் சட்டத்தை நீக்கி விட்டது.


அரசுக்கு எதிரானவர்களை கொடுமைப்படுத்த பொடா சட்டம் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தது. இந்த அச் சத்தை இந்த தீர்ப்பு உண்மைப்படுத்தி விட்டது என்று பலரும் நம்புகின்றனர். எனவே இந்த 6 பேர் மீதான வழக்கை சாதாரண கிரிமினல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வாதத்தை வைப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதற்குப் பிறகு இவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபணமானால் அவர்களை கிரிமினல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கு யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.


இப்படித்தான் பாராளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லி டெல்லி பேராசிரியர் ஜிலானி உள்ளிட்ட பல பேருக்கு பொடா சட்டத்தின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்களின் வழக்கை மிகவும் கவனமாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ''பாராளுமன்றத் தாக்குதலுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை'' என்று சொல்லி விடுதலை செய்துவிட்டது. இந்த 6 பேரின் கதையும் அது போல்தான் முடியும் எனத் தெரிகிறது.


பொடா சட்டத்தின்படி குற்றம் செய்யாத எவரையும் குற்றம் செய்ததாக சொல்லி தண்டிக்க முடியும். அதற்கான அவ்வளவு வாய்ப்புகளும் அந்தச் சட்டத்தில் உள்ளன. இந்த குறைகளோடு கூடிய சட்டத்தைக் கொண்டு அப்பாவிகள் எவரும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது.


குஜராத்தில் இப்போதும் மோடியின் ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. முஸ்லிம்களை கருவறுப்பதை முதல் கொள்கையாகக் கொண்ட அவருடைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவது சகஜம். தண்டனை விதிக்கப்பட்ட இந்த 6 பேர் விவகாரத்தி லும் அதுதான் நடந்துள்ளது என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.


இந்திய குற்றவியல் சட்டம் - ''நூறு குற்றவாளிகள் தப்பலாம்; ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது'' என்ற தத்துவத்தை உள்ளடக்கியது. பொடா சட்டம் இதற்கு நேர்மாறானது. எனவே பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிகோலும் இந்திய குற்றவியல் சட்டத் தின் கீழ் இந்த 6 பேரின் வழக்கையும் விசாரித்து நீதி வழங்க நீதிமான்களும், ஆள்வோரும் முன்வர வேண்டும். அது சட்டத்தின் மீதான மதிப்பை மக்களிடம் அதிகரிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனத்தில் கொள்வார்களா?
 

- ஜாஹிர் ஹுஸைன்
 


மேலும் கூடுதல் விவரங்கள் அறிய உணர்வு வார இதழை (உரிமை 10, குரல் 44) பார்வையிடுக!

 

வரதட்சணை ஒழிப்பு! வழிகாட்டும் பரங்கிப்பேட்டை!!
 

பெண்களுக்கு எதிராக நடக்கும் அனேக கொடுமைகளில் ஊர் ஜமாஅத்துக்களின் அங்கீகாரத்துடன் நடக்கும் பெருங்கொடுமை வரதட்சணையா கும். ஆண் என்ற ஒரு தகுதி மட்டுமே ஆணைப் பெற்ற குடும்பத்திலும் (குறிப்பாக பெற்ற தாய்) ஊர் ஜமாஅத்துக்களிலும் உயர்வாகப் பார்க்கப்படுகிறது. பெண் இவர்களின் பார்வையில் கேவலமான பிறவி. அதனால்தான் திருமணம் என்ற பெயரில் ஒரு அடிமை சாசனம் எழுதப்பட்டு மணமகன் என்ற பெயரில் ஒரு அடிமையை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வது போன்ற எண்ணத்தில் அவளிடமிருந்து லட்சக்கணக்கில் சுரண்டப்படுகிறது.


ஆணைப் பெற்றவர்களுக்குத்தான் இந்த தலைத்திமிர் தாண்டவமாடுகிறது என்றால் அதற்கு வக்காலத்து வாங்கும் மனசாட்சியற்ற ஊர் பஞ்சாயத்து (ஜமாஅத்து)க்களை எந்த லிஸ்டில் வைப்பது என்று தெரியவில்லை.


இந்த வன்சுரண்டலுக்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும் சில புகார்கள் காவல் நிலையங்களில் பதியப்பட்டாலும் ஊர் ஜமாஅத்துக்களும் பஞ்சாயத் துக்களும் இதற்கு எதிராக முடிவெடுக்காத வரை வரதட்சணைக் கொடுமை சுனாமியாய் பெண்களை சுருட்டிக் கொண்டு தான் செல்லும்...


சமீபகாலமாக சில ஊர் ஜமாஅத்துக்கள் வரதட்சணைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அத்தகைய ஜமாஅத்துக்களை நல்லுள்ளங்கொண்ட அனைவரும் மனமார பாராட்டத்தான் செய்வார்கள். அந்த வகையில் வரதட்சணைக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மற்றொரு ஊர் பரங்கிப்பேட்டை. அங்கு நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரசுரங்களாக ஊர் முழுவதும் வினியோகிக்கப் பட்டுள்ளது. அந்த பிரசுரம் நம் பார்வைக்கு வந்தது. அந்த தீர்மானங்களில் வரதட்சணை மட்டுமின்றி திருமணத்தின்போது நடக்கும் பல்வேறு அனாச்சாரங் களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது மேலும் பாராட்டத்தக்க அம்சமாகும்.


அதே சமயம் அத்தீர்மானங்களில் உள்ள ஒரு குறையையும் நல்ல நோக்கத்துடன் நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
பெண் வீட்டார் பெண்ணுக்கு மனமுவந்து கொடுக்கும் நகை, சீதன விவரம் மற்றும் மாப்பிள்ளையால் பெண்ணுக்கு கொடுக்கப்படும் மஹர் ஆகியவை மட்டுமே திருமண பதிவுப் புத்தகத்தில் பதியப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹர் தொகையை பதிவுப் புத்தகத்தில் பதிவது என்பது சரியே. ஆனால் பெண் வீட்டாரால் பெண்ணுக்குத் தரப்படும் நகை, சீதனம் போன்றவையும் பதியப்படும் என்று கூறுவதால் வரதட்சணையை கொல்லைப்புறமாக வாங்க நினைக்கும் சிலர் இந்த அனுமதியை தவறாக பயன்படுத்த முனைவார்கள்.


பெண் வீட்டாரிடம் நிர்பந்தித்து நகை, சீதனங்களை வாங்கி விட்டு, அது மனமு வந்து பெண்ணுக்கு அளிக்கப்பட்டது என பொய்யாக உறுதிமொழி அளிக்கும் வாசலைத் திறந்து விடுவதாகும்.


எனவே பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் இந்த விஷயத்தை மறு பரிசீலனை செய்வது சாலச் சிறந்தது. (எதிர்காலத்தில் திருமணங்களில் இன்னும் சில சீர்திருத்தங்களை இந்த ஜமாஅத்தார்கள் செய்வார்கள் என்று நம்புகிறோம்).


வாசகர்களே... உங்கள் ஊர்களில் வரதட்சணைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆதாரத்துடன் எங்களுக்கு எழுதினால் அவற்றையும் உலக பார்வைக்கு வைப்போம். இன்ஷா அல்லாஹ்.
 

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய உணர்வு வார இதழை (உரிமை 10, குரல் 44) பார்வையிடுக!

 

முஸ்லிம் இளைஞர் மீது கொலை வெறித் தாக்குதல்! : TNTJ முயற்சியால் தீவிர சிகிச்சை

 

திங்கட்கிழமை மதியம் 2.30 மணி டிஎன்டிஜே தலைமை அலுவலகத்தின் தொலைபேசி அலறியது....


தொலைபேசியை எடுத்தவர் திகிலடையும் செய்தி ஒன்றை எதிர்முனையில் பேசியவர் தெரிவித்துள்ளார். டிஎன்டிஜே மூலம் உணர்வுக்கு செய்தி வர உடனடியாக விசாரணையில் இறங்கினோம். அந்த திகில் செய்தி இதுதான்...


முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவரது நண்பர்களாலேயே கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகி உள்ளார். முகமெல்லாம் வீங்கிய நிலையில், கழுத்தில் பலத்த வெட்டுக் காயத்துடன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிப்பதற்கு பெரும் தாமதம் செய்யப்பட்டுள்ளது.


இது பற்றி தகவல் வர... உடனடியாக சென்னை ஜி.ஹெச்சு.க்கு விரைந்தோம்.


அவசர சிகிச்சை வார்டில் ஓர் ஓரமாக கிடத்தப் பட்டிருந்த அந்த இளைஞரின் முகமெல்லாம் வீங்கி - பார்க்கவே படுகோரமாக இருந்தது. உடலெங்கும் ரத்தம் வழிந்து உறைந்து கிடந்தது. கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக் காயத்தால் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மிகவும் மயக்கமான நிலையில் கிடந்த அந்த இளைஞர் குறித்தும், நடந்த சம்பவங்கள் குறித்தும் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம்.


சக்திவேல் என்ற யாசிர்:
கொலை வெறித்தாக்குதலுக்குள்ளான அந்த இளைஞரின் பெயர் யாசிர். விழுப்புரம் மாவட்டம் பூங்காபாளையத்தைச் சேர்ந்த அரி கிருஷ்ணனின் மகனாக சக்திவேல் என்ற பெயருடன் இருந்தவர் - இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையால் கவரப்பட்டு, தனது வாழ்வை இஸ்லாமிய நெறியில் அமைத்துக் கொள் ளும் நோக்கத்துடன் முஸ்லிமாக மாறி, தனது பெயரை யாசிர் என்று மாற்றியுள்ளார்.


'தனது கையால் உழைத்து சாப்பிடுபவரே உன்னதமான மனிதர்' - என்ற நபி பெருமானார் (ஸல்) அவர்களின் அமுத மொழியால் ஈர்க்கப்பட் யாசிர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஏ.சி. மெக்கானிக்காக தொழில்புரிந்து வந்துள்ளார்.


நண்பர்களுடன் ஒரே அறையில்:
தனது தொழிலின் காரணமாக சென்னை சூளை மேட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார். அவருடன் அவரது நண்பர்களான சதிஷ், சரவணன் விஜயகாந்த் என்பவர்களும் தங்கி இருந்துள்ளனர்.


செக் மோசடி:
அன்றாடம் தனது தொழில் மூலம் கிடைக்கும் வருவாயில் தனது செலவு போக மீதியுள்ள பணத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளார். தொழி லின் காரணமாக தினமும் பலருக்கு வங்கி செக் கொடுப்பது - வாங்குவது என வரவு செலவில் ஈடு பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு 1,500 ரூபாயை வங்கியிலிருந்து எடுப்பதற்காக செக்கை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு வைத்துள்ளார்.


இந்நிலையில் 'செக்' தொலைந்து போயுள்ளது. சரி வீட்டில்தான் எங்கேயாவது மறந்து வைத்திருப் போம் என நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர் 'செக்' தொலைந்து போனதை மறந்தே போயுள்ளார்.


இச்சம்பவம் நடந்து சில நாட்களுக்குப்பின்னர் தனது அவசரத் தேவைக்கு பணம் எடுக்கும் பொருட்டு வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் அவரது கணக்கில் 1,500 ரூபாய் குறைவாக இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிய யாசிர், தனது பணத்தை எடுத்தது யார்? என்ற விசாரணையில் இறங்கி உள்ளார்.


நண்பர்களின் கைங்கர்யம்:
அவரது விசாரணையில் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள்தான் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவர, அவர்களிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். இதனால் யாசிருக் கும், அவரது நண்பர்களான சரவணன், விஜய காந்த் ஆகியோருக் கும் இடையே தக ராறு ஏற்பட்டுள் ளது.


இறுதியில் தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்கள், அந்தப் பணத்தை விரை வில் திருப்பித் தந்து விடுவதாக கூறியுள்ளனர்.


கொலை வெறித் தாக்குதல்:
அவர்கள் கூறியபடி பணத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றிவிடுவார்கள் என்று கருதிய யாசிர், அவர்களிடம் எழுதிக் கேட்டுள்ளார். எழுதி தராவிட்டால் போலிசில் புகார் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை 3ந் தேதி 10 மணி அளவில் விஜயகாந்த், சரவணன் உட்பட 3 பேர் யாசிரை கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் கூரிய ஆயுதத்துடன் யாசிரின் கழுத்துப் பகுதியில் வெட்டி உள்ளனர். இதனால் யாசிர் அலறித் துடித்துள்ளார்.


அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனைக் கண்டதும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியுள்ளனர். யாசிர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையி னர், அவரிடம் வாக்குமூலம் பெற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


டிஎன்டிஜே உதவி:
யாசிர் தெரிவித்த தகவலின்படி அமைந்தக்கரை டி.என்.டி.ஜே. நிர்வாகிகளை தொடர்பு கொண்ட காவல் துறையினர் - யாசிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிவித்துள்ளனர். உடனடியாக அமைந்தக்கரை டிஎன்டிஜே தலைவர் யூனூஸ் மற்றும் நிர்வாகிகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு யாசிருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்துவதை உணர்ந்து - டிஎன்டிஜே தலைமையை தொடர்பு கொண்டுள்ளனர்.


டிஎன்டிஜே மாநிலச் செயலாளர்கள் சம்சுல்லுஹா, சையத் இக்பால் ஆகியோர் உடனடியாக அரசு மருத்து வமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவரை பார்த்தனர்.


மருத்துவமனையின் உயர் மருத்துவ அதிகாரிகளை சந்தித்து பாதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர். அதன் பிறகு யாசிருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இச்சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய யூனுஸ்:
''தாக்குதலுக்குள்ளான சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இஸ்லாத்தில் இணைந்தார். முஸ்லிமாக மாறிய பின்னர், தனது வாழ்க்கை முறையை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தி வந்தார். முஸ்லிம்களிடம் குறிப்பாக டி.என்.டி.ஜே. சகோதரர்களிடம் நெருக்கமான நட்புறவுடன் பழகி வந்தார். திடீரென அவர் தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தாக்கு தலுக்கு பண விவகாரம் காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் மதம் மாறியது பிடிக்காததால் இந்தச் சம்பவம் நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. போலிசார் முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்'' என்றார்.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் சூளைமேடு காவல் நிலையத்தை அணுகினோம். சப்-இன்ஸ்பெக்டர் நம்மிடம்..


''ஒரே அறையில் தங்கி இருந்த நண்பர்களுக்கிடையே பணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்ததை அறிந்தவுடன் பாதிக்கப் பட்டவரிடம் வாக்குமூலம் பெற்று அவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம். அவர் தெரிவித்த தகவலின்படி குற்றவாளிகளைத் தேடி வருகி றோம். அவர்களை பிடித்த பின்னர்தான் தாக்குதலுக்கான உண்மையான காரணங்கள் தெரியவரும்'' என்றார்.


- ஹமீது

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய உணர்வு வார இதழை (உரிமை 10, குரல் 44) பார்வையிடுக!


அரபுலகச் செய்திகள்:
 

இராக் மஸ்ஜித் குண்டு வெடிப்பு : தேடப்பட்ட நபர் கைது!
ராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கும் ஸன்னி முஸ்லிம்களுக்கும் இடையில் அவ்வப் போது கலவரங்கள் நிகழ்வதுண்டு. கடந்த பிப்ரவரி மாதம் ஷியா மசூதி ஒன்றின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்நாட்டுக் கலவரம் இராக்கில் அதிகரித்து விட்டது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய அல்காயிதா போராளி ஒருவரைக் கைது செய்துள்ளதாக இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 'முவர்ஃபாக் அல்லிருபை' என்பவர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட போராளி துனீசியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் யுஸ்ரிஃ பக்கீர் முகம்மது அலி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வெளியேறினால் தான் தாக்குதலை நிறுத்துவோம் : இராக் போராளிகள் அறிவிப்பு
 

2001 செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, 'பயங்கரவாத எதிர்ப்புப் போர்' என்ற பெயரில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியது அமெரிக்கா.


அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை களால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல் லப்பட்டதன் காரணமாக - இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரி வருகின்றன.


இராக் அரசுக்கு எதிரான போராளி இயக்கங்கள் - அமெரிக்க படைகளின் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றால், அமெரிக்க படைகள் இராக்கி லிருந்து வெளியேற இரண்டு ஆண்டுகள் காலவரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. சில நடுவர்கள் மூலமாக இவ்வாறு கோரியுள்ள இந்த போராளி இயக்கங்கள் இந்த காலவரம்பை, இராக் அரசும் அமெரிக்க அரசும் சேர்ந்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளன.

பாலஸ்தீன் அமைச்சர்களைக் கைது செய்த இஸ்ரேல் படைகள்

ஸ்ரேல், பாலஸ்தீன் இவ்விரு நாடுகளுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கடந்த வார உணர்வில் எழுதியிருந்தோம்.


ஆனால் சமாதான முயற்சி களைப் பாதிக்கும் விதத்தில் - கடந்த வியாழன் அன்று (ஜூன் 29) காஸாவின் வட பகுதியில் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் பாலஸ்தீன் கேபினட் அமைச்சர்கள் பலரும், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த சட்ட நிபுணர்கள் முப்பது பேரும் மேற்குக்கரை பகுதியில் கைது செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக - பாலஸ்தீன் போராளிகள் அமைப்பு ஒன்று, 'நாங்கள் 18 வயது யூத இளைஞர் ஒருவரைக் கொன்று விட்டோம்...' என்று அறிவித்துள்ளது.


பாலஸ்தீன் பாதுகாப்பு அதிகாரிகள் கூறிய தகவலின்படி - இஸ்ரேலிய படைகள் - பாலஸ்தீன் துணைப் பிரதமர் நாஸர் ஸயீர், மூன்று கேபினட் அமைச்சர்கள் மற்றும் நான்கு சட்ட நிபுணர்கள் ஆகியோரை ரமல்லா என்ற இடத்தில் கைது செய்துள்ளது. மற்றும் பலர் 'ஜெனின்' என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.


ஜெரூஸலத்தில் மற்ற இடங்களிலும் ஹமாஸ் சட்ட நிபுணர்கள் கைது செய்யப்பட்டதை இஸ்ரேலிய மீடியாக்கள் அறிவித்துள்ளன.


இஸ்ரேலியரால் கைது செய்யப்பட்ட மற்ற முக்கிய பிரமுகர்கள் - மேற்குக்கரையில் உள்ள 'கல்கிலியா' என்ற நகரத்தின் மேயரும் துணை மேயரும் ஆவர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.


இந்த கைது சம்பவங்கள் பற்றி இஸ்ரேல் ராணுவம் எதுவும் கருத்து சொல்ல மறுத்துவிட்டது.


ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்ட சம்பவம் : சதாம் மீது இன்னொரு வழக்கு
ராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் மற்றும் அவரது சகாக்கள் ஏழுபேர் மீது கிரிமினல் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. 1982-ம் ஆண்டில் துஜைல் என்ற கிராமத்தில் 148 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இவ்வழக்கில் சதாம் உசேனுக்கும் அவரது சாகாக்களுக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிராஸிகியூஸன் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் மாத மத்தியில் வழங்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்நிலையில் - 1980களில் 'குர்த்' என்ற இனத்தைச் சேர்ந்த 1,00,000 பேரைக் படுகொலை செய்ததாக முன்னாள் அதிபர் சதாம் உசேன் மீது இன்னொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி அன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இவ்வழக்கில் சதாம் உசேன் மற்றும் அல்-மஜித் (இவரை கெமிக்கல் அலி என்றும் அழைப்பர்) என்ற நபருடன் சேர்த்து சதாம் உசேன் சகாக்கள் 6 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


1987-ருந்து 1989 வரை குர்த் இன மக்கள் மீது பெரும் தாக்குதல்கள் நடந்தன. இதனை 'அன்ஃபால்' நடவடிக்கை என்று அழைத்தனர். இதனை குர்த் இன மக்களின் படுகொலை என்று பிராஸிகியூஸன் தரப்பு கூறியபோதிலும் - முன்னாள் இராக் அரசு (சதாம் உசேன் அரசு) இது யுத்த காலத்தில் போராளிகளுக்கு எதிரான ஒரு அத்தியாவசியமான எதிர்ப்பு நடவடிக்கைதான் என்று கூறுகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அல்-மஜித் (கெமிக்கல் அலி) என்பவர் விஷ வாயுக்களைக் கொண்டு குர்த் இன மக்களைக் கொல்ல உதவியவர் என்று கூறப்படுகிறது.

எகிப்து கோர்ட்டுக்கு மனித உரிமை அமைப்பு கண்டனம்
கிப்து நாட்டின் அதிபர் ஹுஸ்னி முபாரக். இவர், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கிய போது, ஊழல் புரிந்ததாக - 'சையித் முஹம்மத் அப்துல்லா சுலைமான்' என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'அல்-தஸ்தர்' என்ற பத்திரிகை செய்தியாக வெளியிட்டது.


கெய்ரோ அருகில் 'அல்-வராக்' என்ற கிராமத்தில் உள்ள நீதிமன்றம், அதிபர் முபாரக்கை பத்திரிகையாளர்கள் அவமதித்து விட்டதாக கூறி தண்டனை விதித்துள்ளது.


'அல்-தஸ்தர்' பத்திரிகையைச் சேர்ந்த இப்ராகிம் இஸா, ஸகர் ஜாகி என்ற இருவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அதிபர் முபாரக் மீது வழக்குத் தொடர்ந்த நபருக்கும் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


''இது பத்திரிகை சுதந்திரத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு...'' என்று மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது. இந்த அமைப்பின் துணை இயக்குநர் ஜோய் ஸ்டோர் என்பவர் ''...இப்ராகிம் இஸா கைது செய்யப்பட்டது - தீவிரமான அரசாங்க விமர்சகர் (அரசாங்கத்தின் தவறுகளை இடித்துரைப்பவர்) ஒருவரைத் தண்டிக்கும் முயற்சி என்றும் மேலும் இதுபோல் யாரையும் வெளிப்படையாக பேசவிடாமல் தடுக்கும் நோக்கமும் இதில் உள்ளது...'' என்றும் எகிப்து கோர்ட்டைக் கண்டித்துள்ளார்.
 

இஸ்ரேலை அங்கீரிக்க ஹமாஸ் மறுப்பு!
டந்த செவ்வாய் கிழமை அன்று (ஜூன் 27) பாலஸ்தீன் பிரதமர் முஹமது அப்பாஸ் உடன் ஒரு அரசியல் ஒப்பந்தம் ஏற்பட்டி ருந்தாலும், இஸ்ரேலை அங்கீகரிக்க நாங்கள் சம்மதிக்கமாட்டோம் என்று ஹமாஸ் இயக்கம் அறிவித் துள்ளது.


ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய கொள்கையே யூத அரசை (இஸ்ரேலை) அழிப்பதுதான். பாலஸ்தீன் அதிபர் அப்பாஸ் - இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் கையெழுத்திட்ட ஒரு ஆவணத்தை ஏற்கும்படி ஹமாஸ் இயக்கத்தினரைக் கோரினர். இந்த ஆவணம் ஆட்சேபனையின்றி இஸ்ரேலை அங்கீகரிக்கிறது.


ஆனால் ஹமாஸ் இயக்கம் 'இஸ்ரேலிய எதிர்ப்பு' என்ற தன் கொள்கையில் உறுதியுடன் - சில மாற்றங்களுடன் தான் இந்த ஆவணத்தை ஏற்றுக் கொண்டது.
 

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய உணர்வு வார இதழை (உரிமை 10, குரல் 44) பார்வையிடுக!


சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணிக்காக டி.என்.டி.ஜே.யின் பிரச்சாரம் மிகவும் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்ததாகவும் இவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் நமக்குத் தேவையற்றது என்றும் சிலர் கூறுகிறார்களே? விளக்கம் தரவும். - அபு நதீர், அல் ஜூபைல்
 

தேர்தல் பிரச்சாரத்தின்போது மற்ற முஸ்லிம் இயக்கங்களை விட தனித்தன்மை யுடனும் இஸ்லாமிய மரபை மீறாத வகையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரம் அமைந்திருந்தது. மாலை மரியாதைகள் இல்லை, தனி நபர் துதி பாடல்கள் இல்லை, பிறரது மேடைகளில் ஏறவில்லை, இப்படி எல்லாம் இஸ்லாமிய நெறியை மீறாமல் நமது பிரச்சாரங்கள் இருந்தாலும் சில நேரங்களில் சிலரது பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தது என்பதை நாம் மறுக்கவில்லை.


மதுரையில் நடந்த செயற்குழுவில் இது சுட்டிக்காட்டப்பட்டு அந்த தவறுகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. இதை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தில் இன்னும் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவோம் என்று உறுதிமொழியும் அளிக்கப்பட்டது.


அரசியலில் கருத்துச் சொல்வது சில நேரங்களில் அவசியமானதாக ஆகி விடுகிறது. ஆனாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் செயல்படாவிட்டால் நம் தூய்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இன்னும் தெளிவாக உணர்கிறோம். தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் அதை ஒருக்காலும் நியாயப்படுத்த மாட் டோம்.

தற்பொழுது டி.என்.டி.ஜே. பயன்படுத்தும் கொடி சில வருடங்களுக்கு முன்னால் அக்ரம்கான் என்பவர் தன்னுடைய ஐ.ஜே.பி. என்ற அமைப்பிற்காக பயன்படுத்தப்பட்டது என்பதைப் பற்றி விளக்கம் தேவை. - ஏ. பஷீர்கான், தொண்டி
 

கொடியை முடிவு செய்து அறிவித்த பின்னர்தான் இந்த விபரம் தெரியவந்தது. ஒரே கொடியை இரண்டு இயக்கங்கள் பயன்படுத்துவதால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் அக்ரம்கான் அவர்களை அழைத்துப் பேசினோம். அவரும் மனப்பூர்வமாக டி.என்.டி.ஜே. அந்தக் கொடியை பயன்படுத்திக் கொண்டால், நாங்கள் வேறு கொடியை உருவாக்கி கொள்கிறோம் என்று கூறியதுடன் எழுத்து மூலமும் எழுதிக் கொடுத்தார். சமுதாயத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இது பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது. இப்போது எந்தக் குழப்பமும் இல்லை.
 

TNTJ தேர்தல் பிரச்சார நிலைப்பாட்டில் கூட குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்ட அதே நேரத்தில் தங்களது பிரச்சார மேடையில் பதர் சயீத் அவர்களை அமர வைத்து பிரச்சாரம் செய்தது ஏற்றுக் கொள்ளக் கூடியதா இல்லையே? விளக்கம் தரவும். - எஸ்.ஏ. பஷீர், கே.எஸ்.ஏ

மது பிரச்சார மேடையில் வேட்பாளர்கள் விரும்பினால் அவர்களை மட்டும் ஏற்றலாம் என்ற முடிவு சேலம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. அவ்வாறு மேடையில் ஏற்றப்படும் வேட்பாளர்கள் நமது மரபைப் பேண வேண்டும், கும்பிடக்கூடாது, சால்வை போடக்கூடாது, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது அவர்கள் எழுந்து வாக்கு கேட்டு சில வார்த்தைகள் பேசலாம் என்றும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.


அந்த அடிப்படையில்தான் சில வேட்பாளர்கள் மேடையில் ஏறினார்கள். அவர்களில் பதர் சயீத்தும் ஒருவர். அந்த மேடையில் கூட அவர் வழக்கமாக அணியும் ஆடையுடன் அமராமல் முகம், கைகள் மட்டும் தெரியும் வகையிலான ஆடைகளையே அணிந்து அமர்ந்திருந்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இது பதர் சயீத்துக்காக மட்டும் அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகையல்ல.

 

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய உணர்வு வார இதழை (உரிமை 10, குரல் 44) பார்வையிடுக!


கல்விச் செய்திகள்

 

போட்டோ கிராபி படிப்பு
வி
த்தியாசமான சில ஆற்றல்களை இயற்கையிலேயே சிலர் பெற்றிருப்பார்கள். அதில் ஒன்றுதான் புகைப்படக்கலை! கலைந்து கிடக்கும் கூரையைக் கூட கவித் துவமாகக் காட்டக்கூடிய ஆற்றல் மிக்க துறை, போட்டோ கிராஃபி என்றழைக்கப் படும் இக்கல்வி டிப்ளமோ படிப்பாகவும் சான் றிதழ் படிப்பாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.


இத்துறையில் ஏராளமானோர் ஆர்வமாக இருந்தாலும் சரியாக ஒத்துழைப்பும், வழிக்காட்டலும் இல்லாமையால் சாதனைப் படைக்க வேண்டிய பலர் இதன் ரசிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.


புல்லின் தலையில் மகுடம் சூட்டியிருக் கும் பனித்துளியை அதன் அச்சு அசலோடு கேமராவில் பதிவு செய்து அதைப் புகைப் படங்களாக வெளியிடும்போது அது பணமா கக் குவிகிறது. இயற்கைக் காட்சிகளை அதன் நேர்த்திக் குறையாமல் படம் எடுக்க எல்லோராலும் முடியும் எனக் கருதலாம். ஆனால் அது தவறு. முடியாது.


அதற்கான ரசனை மட்டும் இருந்தால் போதாது. தொழில்நுட்பம் மிகுந்த கேமராவும், அதனைக் கையாளும் நுட்பமும் மிக மிகத் தேவை. அதில் தேர்ச்சியடைந்த வர்கள் பத்திரிகை துறை மட்டுமின்றி சுற்றுலாத் துறைக்கும் அதிகம் தேவைப் படுகிறார்கள். சுயமாக இயற்கைக் காட்சிகளை அபூர்வ நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து ஏராளமாக சம்பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இதனை ஊக்குவிக்க தமிழகத்தில் பெரிய அளவில் முயற்சிகள் இல்லை. ஆனால் வட இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் அதன் முக்கியத்து வத்தை உணர்ந்துள்ளன. மனதில் அழகும், விழிகளில் தேடல் ஆர்வமுள்ள கலைஞர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு டழ்ர்ள்ல்ங்ஸ்ரீற்ன்ள் - ஐ பெற்றுக் கொள்ளலாம்.


1. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜாமியா நகர், புது டெல்லி. 2. மகாத்மா காந்தி காசி வித்யா, வாரணாசி, உ.பி. 3. எம்.ஜே.பி. ரோகில் கண்ட் யுனிவர்சிட்டி, பரேலி, உ.பி. 4. அலகாபாத் யுனிவர்சிட்டி, அலகாபாத். 5. வெங்கடேஷ்வராƒயுனிவர் சிட்டி, திருச்சி. 6. தீன்தயாள் உபாத்யாயா யுனிவர்சிட்டி, கோரத்தூர். 7. ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிகல்ஸ் யுனிவர்சிட்டி, ஹைதராபாத்.


வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புள்ள இப்படிப்பு திறமையானவர்களுக்கு விருதுகளையும், முன்னேற்றங்களையும் பெற்றுத்தரக்கூடியது.
 

வருங்கால அமைச்சர்களே வருக! வருக!!
 

பொருளாதாரம்!


இந்த வார்த்தைதான் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கிறது. சோம்பலை முறிக்கிறது. தனி மனிதன், குடும்பம், அமைப்பு, சமூகம், தேசம் என எல்லாம் சார்ந்து நிற்கும் அத்தியாவசியமான துறை இது!


காலங்கள் மாறினாலும் மாறாத செல்வாக்கு பெற்றிருக்கும் பொருளாதாரம் பற்றிப் படிப்பதற்காக அயல்நாடுகளுக்குச் செல்வது இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


பொருளாதாரம் சம்பந்தப்பட்ட படிப்புகள் ஆறு மாத சான்றிதழ் படிப்பு, ஓராண்டு டிப்ளமோ படிப்பு என பலவகை இருந்தாலும், தமிழக கல்லூரிகளில் பி.ஏ. எகனாமிக்ஸ் என்ற பட்டப்படிப்புதான் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.


பல கல்லூரிகளில் எகனாமிக்ஸ் படிப்புக்கு பெரிய போட்டா போட்டியே நடக்கிறது. பி.ஏ. எகனாமிக்ஸ் முடித்து அதில் டாக்டர் பட்டம் பெறுபவர்கள் நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களாகத் தலைநிமிரும் வாய்ப்புகள் உள்ளது.


முன்னாள் மத்திய நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும், இன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமும் இத்துறையிலிருந்து தான் பொதுவாழ்வுக்குப் புறப்பட்டார்கள்! அவர்கள் மட்டுமா...? உலகின் பெரும்பாலான நிதியமைச்சர்கள், பொருளாதாரத் துறையில் ஆய்வுகளை முடித்துதான் இன்று உலகின் பொருளாதாரத்தை இயக்கிக் கொண்டிருக் கிறார்கள்.


இத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை ஈர்ப்பதற்காகவே 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' காத்துக் கொண்டிருக்கிறது.


பொருளாதாரப் படிப்புகளுக்குச் சிறந்த மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை கோட்டூர்புரத்தில் 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' கல்வி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா பல்கலைக் கழகத் தின் ஒத்துழைப்புடன் இங்கு பொருளாதாரத்தில் எம்.எஸ்.சி. பட்டம் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுப் படிப்பில் தற்போது 15 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வரும் கல்வியாண்டிலிருந்து இந்த எண்ணிக்கை 20 ஆக உயரும்.


கணிதம், ƒபுள்ளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல் போன்ற அறிவியல் பாட மாணவர்களும் பி.ஏ. பொருளாதாரம், பி.காம்., பி.பி.ஏ. போன்ற பட்டம் படித்த மாணவர்களும் இதில் சேரலாம். பிளஸ் டூ நிலையில் கணிதத் தை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும்.


இதற்குத் தனியே நுழைவுத் தேர்வு நடத்தப் படுகிறது. மாணவர் சேர்க்கைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர் களுக்கு தலா ரூ. 15,000/- வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.


பி.எச்.டி. பட்ட ஆய்வை மேற்கொள்வதற்கான மையமாக இக்கல்வி நிலையத்தை அண்ணா பல்கலைக் கழகமும், சென்னைப் பல்கலைக் கழகமும் அங்கீகரித்துள்ளன.


பொறியியல் துறையினருக்கான எம்.டெக். இன்டஸ்ட்ரியல் எக்னாமிக்ஸ் (3 செமஸ்டர் படிப்பு) கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கவுன்சிலின் அனுமதி கிடைத்ததும் இப்படிப்பு தொடங்கப்படும். மேக்ரோ பைனான்ஸ், பைனான்சியல் அனாலிஸில், ரிஸ்க் மேனேஜ் மெண்ட போன்ற துறைகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளைத் தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய உணர்வு வார இதழை (உரிமை 10, குரல் 44) பார்வையிடுக!


தகவலறியும் சட்டமும் பயன்படுத்த வேண்டிய அவசியமும்!
 

த்திய மாநில அரசுகள் மூலம் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. அந்தத் திட்டங்களில் முறை கேடு, மோசடி போன்றவற்றின் மூலம் அத்திட் டங்களின் பயன்பாடுகள் முடங்கிவிடுகின் றன. அந்த திட்டங்கள் குறித்தும் அதன் பயன் பாடு குறித்தும் மக்கள் அறியாததும், அவற்றில் அக்கறைக் காட்டாததும் இந்நிலைக்கு காரணம்.
இந்நிலையை மாற்றியமைக்க, மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் பொது அறிவிப்பு மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். அந்த திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக் கவும், அவைப் பற்றி அறிந்து கொள்ளவும் பொதுமக்களை ஆர்வமூட்டும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்தியுள்ளது.


அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் அறிந்துகொள்ள வகை செய்யும் இச்சட்டத் தை தீவிரமாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக தமிழ்நாடு தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழக தகவல் ஆணையர்கள் ஜி. ராமகிருஷ்ணன், ரத்தினசாமி ஆகியோர் இச்சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து மாநிலம் முழுவதும் பயணம் செய்து கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தகவல் அறியும் சட்டம் குறித்தும் அவற்றை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமாகும்


தகவல் என்றால் என்ன?
தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் என்பது ஓர் ஆவணமாக (Document) இருக்கலாம், தெரிவிக்கப்பட்ட எண்ணங்களாக (Opinions) இருக்கலாம். கொடுக்கப்பட்ட அறிவுரையாக (Advice) இருக்கலாம், பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்ட செய்திகளாக (Press Release) இருக்கலாம், வெளியிட்டப்பட்ட ஆணைகளாக (Orders) இருக்கலாம், குறிப்பு புத்தகங்களாக (Log Books) இருக்கலாம், ஒப்பந்த அறிக்கை களாக (Contracts) இருக்கலாம், எழுதப் பட்ட தாள்களாக (Reports) இருக்கலாம், முன்மாதிரி பொருள்களாக (Samples) இருக்கலாம். மாதிரிகளாக (Models) இருக்கலாம், குறிப்புகளாக (Memo) இருக்கலாம், முடிவாக (Decision) இருக்கலாம், கணினி மூலம் அனுப்பட்ட தகவல்களாக (E-mails) இருக்கலாம், வேறு மின் தகவல் முறைப்படிவ தகவல்களாக (Electronics Form) இருக்கலாம். எந்த வகையில் இருந்தாலும் தகவல்தான்.


தகவல்களை கேட்கும் முறை
தகவல் தேவைப்படுவோர் வேண்டிய விண்ணப்பங்களை எழுத்து மூலமாக அல்லது கணினி மூலமாக தகவல் கேட்டு உதவி பொது தகவல் அதிகாரிக்கோ (Assistant Public Information Officer) அல்லது பொது தகவல் அதிகாரிக்கோ (Public Imformation Officer) விண்ணப்பித்து மனு செய்ய வேண்டும். ஆவண நகல்கள், குறிப்பு நகல்கள் வேண்டுமெனில் அவற்றையும் கோரலாம். ஆவணங்களை, குறிப்புகளை பார்வையிட அனுமதி கேட்கலாம்.


தகவல்கள் எதற்காக தேவைப்படுகின்றது என்ற காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு கேட்கப்படும் தகவல்களை, தடையில்லா தகவல்கள் எனில் அவற்றை 30 நாட்களுக்குள் பெற்று பொது தகவல் அதிகாரி கொடுக்க வேண்டும். பார்வையிட கோரப்பட்ட ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் பார்வையிட அனுமதிக்க வேண்டும். நகல் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். கேட்கப்படும் தகவல் வாழ்வு அல்லது சுதந்திரம் (Life or Liberty) பற்றியது என்றால் உடனடியாக தகவல் கோரி விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுக்கவில்லை என்றால் தகவல் கொடுக்க மறுத்துவிட்டதாக கருதப்படும்.


கட்டணம் உண்டு
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் அறிய ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ரூ.50/- கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய அரசு தகவல் பெற ரூ.10/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆவண நகல்களை பெற ஒரு பக்கத்துக்கு ரூ.2-ம், வரைபடங்களாக இருந்தால் அதற்கான தனிக்கட்டணமும் செலுத்த வேண்டும்.


ஒளி-ஒலி நாடாவாக தகவல் பெற ரூ.50/- கட்டணமாக செலுத்த வேண்டும். ஆவணங்களை பார்வையிட முதல் ஒரு மணிநேரத்திற்கு கட்டணம் கிடையாது. மேற்கொண்டு போகும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ரூ.5/- கட்டணம் செலுத்த வேண்டும்.


கட்டணத்தை பணமாக கட்டி ரசீது பெற்றுக் கொள்ளலாம். வங்கி டி.டி.யாகவும், காசோலையாகவும் தகவல் கேட்கும் விண்ணப்பத்தை இணைத்து, கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் தபால் மூலமும் அனுப்பலாம்.


கொடுக்க முடியாத தகவல்களுக்கு காரணம் சொல்ல வேண்டும். நாம் கேட்கும் தகவல்களை, தகவல் ஆணையத்தால் கொடுக்க இயலாது என்றால் தடைசெய்யப்பட்ட தகவல் என்றால் காரணத்தை தெரிவிக்க வேண்டும். தகவல் கொடுக்காதது பற்றி யாருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும். மேல் முறையீடுக்கான காலவரம்பையும் குறிக்க வேண்டும்.


புகார் கொடுக்கலாம்
தகவல் கேட்டும் கொடுக்கப்படவில்லை என்றால், காரணம் சொல்லப்படவில்லை என்றால், தகவல் கேட்பவர், தகவல் ஆணையத்தில் (Information Commission) புகார் செய்யலாம். சரியான தகவல் கொடுக்கவில்லை என்றாலும், முழுமையற்ற தகவல் என்றாலும், ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க மறுப்பது, நகல்களை தற மறுப்பது அதிக கட்டணம் வசூலிப்பது குறித்தும் புகார் செய்யலாம்.


மேல்முறையீடு செய்யலாம்
தகவல் கொடுக்க மறுக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அதிகாரிகளின் மேல் முறையீடு செய்யலாம்.


- பாபா


மேலும் விரிவான செய்திகளுக்கு உணர்வு இதழை வாங்கிப் படியுங்கள்!

 

 

இத்தனை விவரங்களையும் தாங்கி வெளிவந்து விட்டது,
இவ்வார (உரிமை 10 : குரல் 44 -  07/07/2006 ) உணர்வு வார இதழ்!
படிக்கத் தவறாதீர்கள்!!!

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005