தேர்தல் ஆணையம் மூலம் NRCயை கொண்டு வர துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

இறைவனின் திருப்பெயரால்…

சுற்றறிக்கை : 51/2025
தேதி : 09.07.2025

கண்டன அறிக்கை.

தேர்தல் ஆணையம் மூலம் NRCயை கொண்டு வர துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க, பாஜக சூழ்ச்சி வலையை பிண்ண ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு நகர்வாக, பிஹாரில் சட்டவிரோதமாக பங்களாதேஷை சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளார்கள் என வதந்தியை பரப்பி, அம்மாநில தேர்தலுக்கு முன்பு அனைத்து வாக்காளர்களும் இந்தியர்கள் தானா என்பது நிரூபிக்கப்பட வேண்டுமென்ற கருத்தை விதைத்து வருகிறது.

பிஹாரிலுள்ள 7.73 கோடி வாக்காளர்களும், ஜூலை 26 ஆம் தேதிக்குள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்களிக்க தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்களில் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அட்டை இல்லை.

தேர்தல் ஆணையத்தின் உதவியோடு சிறும்பான்மையினர், தலித், பழங்குடியினர் என 3 கோடி வாக்காளர்களை நீக்கும் சதி திட்டத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது.

ஒவ்வொரு குடிமகனும் தனது வாக்குரிமையை உறுதிப்படுத்த பல கட்ட சட்டப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அளவிற்கு இதற்கு விதிகள் போடப்பட்டுள்ளது.

  •  ஜூலை 1, 1987க்கு முன் பிறந்தவர்கள் தனது பிறந்த தேதி அல்லது பிறந்த ஊருக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
  • ஜூலை 1, 1987 முதல் டிசம்பர் 12, 2004 வரை பிறந்தவர்கள் தனது பிறந்த தேதி அல்லது பிறந்த ஊருக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். மேலும், பெற்றோரில் ஒருவரின் ஆதாரத்தையும் காட்ட வேண்டும்.
  • டிசம்பர் 12, 2004க்கு பின் பிறந்தவர்கள் தனது பிறந்த தேதி அல்லது பிறந்த ஊருக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். மேலும், பெற்றோர் இருவரின் ஆதாரத்தையும் காட்ட வேண்டும்.
  • பெற்றோரின் ஆவணங்கள் இல்லாத அனாதைகள், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு கணக்கெடுப்பு படிவத்தில் எவ்வாறு பதிவிட வேண்டும் என எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.

உண்மையில் இந்தியாவில் பிறந்து வளர்ந்த பலருக்கு மேற்கூறப்பட்ட ஆதாரங்களை காட்ட இயலாத சூழலில் தான் சமூகத்தின் நிலை உள்ளது. பெற்றோரின் ஆதாரங்களை சமர்ப்பிக்க பல வாக்காளர்களால் இயலாது. பிஹாரிலுள்ள 7.73 கோடி வாக்காளர்களில், குறிப்பிட்டவர்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித்திட்டமாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.

7.73 கோடி வாக்காளர்களிடம் இந்த தகவலை ஜூலை 26 ஆம் தேதிக்குள் பெறவே இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அரைகுறையாக இந்த வேலையை செய்து, பல குளறுபடிகளை அரங்கேற்றி தங்களுக்கு வேண்டாத வாக்காளர்களை கழித்து, குறிப்பிட்ட சாராரை மட்டும் சேர்ப்பதற்காகவே தேர்தல் ஆணையத்தின் மூலம் பாஜக இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இந்த வேலையை முடிக்கும் போது, குறிப்பிட்ட சில மக்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது மட்டும் அறிவிப்பாக வெளிவராது. கூடுதலாக, அவர்கள் இந்தியர்களே இல்லை என்ற அறிவிப்பும் வெளிவரும். இதன் பின், அவர்களை சட்டரீதியாக நசுக்கும் வேலையை அடுத்தகட்டமாக ஒன்றிய அரசு துவங்கும். இதைத்தான் அஸ்ஸாமில் கடைபிடித்தார்கள்.

பிஹாரிலுள்ள சிறுபான்மை சமூகத்தின் வாக்குரிமையையும், வாழ்வுரிமையையும் சட்டத்தின் வழியே அபகரிக்கும் முயற்சியாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தேர்தல் ஆணையம் விதித்த புதிய நிபந்தனைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

பீஹார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளையும், ஐயங்களையும் எழுப்புவதாக உள்ளது.

அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும், பொது மக்களும் ஜனநாயக முறையில் இதை எதிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

சிஏஏ சட்டத்தை நடைமுறைப் படுத்த உள்ள சிக்கலை மறைத்து இது போன்று தேர்தல் ஆனையத்தின் வழியாக பாஜக NRC ஐ நடைமுறை படுத்த முன் வந்தால் இந்தியா கடுமையான ஜனநாயக வழி போராட்டங்களை சந்திக்கும் என்பதை ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
முஜீபுர் ரஹ்மான்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.