2002 ஆம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த நேரத்தில் இஸ்லாமியர்களுக்கெதிரான மிகப்பெரிய கலவரம் அங்கு கட்டவிழ்க்கப்பட்டது.
பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் உட்பட ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஈவு இறக்கமின்றி கொல்லப்பட்டார்கள். கோடிக் கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வரலாற்றில் இந்த நிகழ்வை உலகம் என்றும் மறவாது.
இந்த கலவரத்தின் போது நடைபெற்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் தான் பல்கீஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம்.
அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்தவர் தான் பல்கீஸ் பானு 2002 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி இவரையும் இவரது குடும்பத்தாரையும் இந்துத்துவ வெறியர்கள் கடுமையாகத் தாக்கி, இவரது குடும்பத்தினர் ஏழு பேர்களை படுகொலை செய்தனர். 5 மாத கர்ப்பிணியாக இருந்த பல்கீஸ் பானுவை கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.அவரின் நான்கு வயதுக் குழந்தை தரையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டது. கேட்பவரின் இரத்தத்தை உறையச் செய்கின்ற இதயத்தை நடுங்கச் செய்கின்ற சம்பவங்கள் இவை.
மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற இவ்வழக்கில் 2008 ஆம் ஆண்டு 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றமும் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.
2004 முதல் 2022 வரை சிறையில் இருந்த இக்குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்பிறகு தான் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு விடுவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப் பட்டவர்களின் நெஞ்சங்களில் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளது குஜராத் அரசு.
குஜராத் அரசு விடுவித்துள்ள இக்குற்றவாளிகள் சாதாரண குற்றவாளிகள் அல்ல. சிறையில் வாழ்வதற்கே தகுதியற்றவர்களும் மரண தண்டனைக்குரியவர்களுமான இந்த மனித மிருகங்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய தேசத்திற்கே அவமானகரமான செயலாகும்.
பெண்களின் நலம் நாடும் அரசு என மார்தட்டிக் கொள்ளும் மோடி அரசுக்கு பல்கீஸ் பானு பெண்ணாகத் தெரியவில்லையா? அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் கொடுமைகளாகத் தெரியவில்லையா? சிறுமி ஆஷிபா விஷயத்திலும் இவர்களின் உண்மை முகம் வெளிப்படத்தானே செய்தது.
விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆரத்தி எடுத்து வரவேற்கப் படுவதும், இனிப்புகள் வழங்கி இவ்விடுதலையைக் கொண்டாடுவதும் நம் தேசத்திற்கே தலைகுனிவாகும்.
இவர்கள் ஆயுள்தண்டனைக்குரியவர்கள் அல்ல. இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்தால் இனி இது போன்ற குற்றங்களைச் செய்ய எவரும் துணிவு பெற மாட்டார்கள்.
ஆனால் இவர்களை விடுவித்திருப்பதினால் இனியும் கொலை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றை செய்யலாம் என்ற நிலைக்கே குற்றவாளிகள் வருவார்கள். இதனால் குற்றங்கள் பெருகும். இத்தகையவர்களை அடக்கத் தவறிய நீதிமன்றங்கள் மீதும் அரசுகள் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை பறிபோகும்.
குஜராத்தில் இவர்களை விட குறைவான குற்றம் புரிந்தவர்கள் கூட இன்னும் விடுவிக்கப்படாமல் சிறையில் வாழும் சூழலில் ஈவு இறக்கமற்ற முறையில் நடந்து கொண்ட இக்கயவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இப்படிக்கு.
ஆர். அப்துல்கரீம்.
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்