மகளிர் வெள்ளத்தில் மூழ்கிய மண்ணடி பொதுக்கூட்டம்
மண்ணடியில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை கடந்த 27.03.2022 அன்று நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டிருந்தது. பொதுக்கூட்டம் என்பதைக் கடந்து அது மாநாடாக நடந்தது என்று சொன்னால் மிகையல்ல.
மாற்றி எழுதப்பட்ட மண்ணடி வரலாறு!
மண்ணடி வரலாற்றில் இப்படி ஒரு கூட்டம் இதுவரை கூடவில்லை என்ற ஒரு புது அத்தியாயம் இதில் எழுதப்பட்டுள்ளது.
கூட்டம் மண்ணடி தெருவை அடைய வேண்டும் என்று தம்புச் செட்டித் தெருவில் பள்ளியின் கேட் அருகில் மேடை அமைப்பார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூட்டம் என்றால் பெண்கள் கூட்டமே அதிகம் வரும். மண்ணடி தெரு வரைக்கும் பெண்களுக்கு மட்டும் தனி இட வசதி செய்து தர மேடையை மிகவும் பின்தள்ளி அமைப்பது வழக்கம்.
கடந்த காலங்களில் அப்படி திட்டமிட்டும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்து மண்ணடி தெருவையும் கடந்து ஆண்களை எழுப்பி பின்னால் அனுப்பி விட்டு, பெண்களை அமர வைக்கும் நிலை இருந்தது. இந்த முறை ஆண்கள் அமர இருந்த அனைத்து இடத்தையும் பெண்களே ஆக்கரமித்து பெண்கள் மாநாடாக இந்தப் பொதுக்கூட்டம் மாறி விட்டது.
திட்டமிட்ட இடத்தையும் கடந்து வெகு தொலைவில் இருட்டான இடங்களில் ஆண்களுக்கு இருக்கை அமைத்துக் கொடுத்து புதிதாக ஸ்பீக்கர்கள் அமைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. ஆண்கள் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
நிகழ்ச்சி நிரல்
வடசென்னை மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பொதுகூட்டத்தில் மாவட்டத் தலைவர் பெரோஸ்கான் தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் முபாரக் அறிமுக உரையுடன் மாநாடு போன்ற பொதுக்கூட்டம் துவங்கியது.
மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் அவர்கள், பறிக்கப்படும் இஸ்லாமிய உரிமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மாநிலத் தலைவர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள், அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்.
மாவட்ட துணைத் தலைவர் காஜா தீர்மானம் வாசிக்க, துணைச் செயலாளர் அன்சாரி நன்றியுரைடன் மாநாடு போன்ற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.
சத்திய முழக்கம் புதிய மாத இதழ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாத இதழ் சத்திய முழக்கம் முதல் பிரதி இந்தப் பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மாநில துணைத் தலைவர் இ.ஃபாரூக் தொகுத்து வழங்க மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ். சுலைமான், அப்துல்கரீம், இ.முஹம்மது, அப்துல் ரஹீம், காஞ்சி இப்ராஹிம், யாசிர், காஞ்சி சித்திக், ஐ.அன்சாரி ஆகியோர் வெளியிட வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, செங்கை மேற்கு, செங்கை கிழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் புதிய இதழை பெற்றுக் கொண்டனர்.
பறிக்கப்படும் இஸ்லாமிய உரிமைகள்
பொதுச் செயலாளர் அப்துல் கரீம் அவர்களின் உரையில் முஸ்லிம்கள் யார்? இந்திய தேசத்தின் மீது அவர்களுக்கு உள்ள உரிமைகள் என்ன என்று துவங்கி இந்நாட்டில் பாசிச பயங்கரவாதிகளால் அரங்கேற்றப் பட்டு வரும் அநியாயங்களைப் பட்டியலிட்டார்.
சட்டத்தின் பெயரால் அரங்கேற்றபட்டு வந்த சில சம்பவங்களை சுட்டிக் காட்டி இஸ்லாமிய உரிமைகள் பறிக்கப்படுவது இப்படித்தான் என்பதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறினார்.
கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லிம்கள் எதிர்பார்த்தது சட்டப்படியான தீர்ப்பு தான் என்பதையும், வழங்கப்பட்ட தீர்ப்பு அரசியல் சாசன சட்டதிற்கு எதிரானது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
டெல்லியில் கலவரத்தை ஏற்படுத்திய கபில் மிஸ்ரா சம்பந்தமாக வந்த வழக்கில் சிரித்துக் கொண்டுப் பேசினால் குற்றமாகாது என்று வந்த தீர்ப்பை எடுத்து கூறி எவ்வளவு இயலாமையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என்பதையும் விளக்கினார்.
இறுதியாக ஹிஜாப் விவகாரத்தில் கைது செய்யபட்டவர்களை மீட்க சட்ட ரீதியான சட்டப் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் சட்டத்திற்கு புறம்பாக நடந்தால் தமிழகத்தில் மிகப்பெரும் ஜனநாயக போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கை செய்தார். இதை ஆமோதிக்கும் விதமாக அனைத்து மக்களும் அல்லாஹு அக்பர் என்ற கோஷங்களை எழுப்பினர்.
அநீதி இழைக்கபட்ட முஸ்லிம் சிறைவாசிகள்
மாநிலத் தலைவர் எம்.எஸ். சுலைமான் அவர்களின் உரையில், சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் காட்டப்படுகிறது; முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காகவே இந்த நிலையை அவர்கள் சந்திக்கிறார்கள்; அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கான விடுதலை கோரிக்கை இல்லை என்பதை தெளிவாக விளக்கினார்.
அவர்களை வெளியிட மறுக்க சொல்லப்படும் காரணங்களும் ஏற்புடையதாக இல்லை என்பதையும் விளக்கினார்.
ஏழு தமிழர்களின் விடுதலையில் காட்டிய ஆர்வத்தை அரசு ஏன் முஸ்லிம்கள் விஷயத்தில் எடுக்க வில்லை என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை முன் வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன வாக்குறுதியை நினைவு படுத்தி அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.
இறுதியாக, அசத்திய வாதிகளின் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் முஸ்லிம்கள் தங்களுடைய பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி விளக்கினார்.
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (திருக்குர்ஆன் 41:34)
ஏக இறைவனின் மகத்தான உதவியால் மாநாடு போன்ற இந்தப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் சமுதாய விழிப்புணர்வு பெற்று மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்
திக்கெட்டும் ஒலிக்கட்டும் சத்திய முழக்கம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்திய முழக்கம் எனும் புதிய மாத இதழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
பெயரில் தான் இது புது இதழ். 2003 முதல் 2020 வரை வெளிவந்த ஏகத்துவ மாத இதழின் மறு வடிவமும், மறு ஆக்கமும் தான் இந்த இதழ்.
தமிழகத்தில் ஏகத்துவ கொள்கையை உயிர் துடிப்புடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் வெளிகொண்டு வந்த மாத இதழ் ஏகத்துவம் என்றால் அது மிகையல்ல. இந்த பத்திரிகையின் கொள்கைப் பிரச்சாரத்தால் கவரப்பட்டு கொள்கைக்காக களமாடியவர்கள் ஏராளம்.
தங்களுடைய ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு என்சைக்ளோபிடியாவாக (தகவல் களஞ்சியமாக) இந்தமாத இதழை தான் பல பேச்சாளர்கள் பயன்படுத்தி வந்தனர். ஏகத்துவ எதிரிகள் வைக்கும் அனைத்து வாதங்களையும் இதன் மூலம் தவிடு பொடியாக்கினார்கள்.
சத்திய முழக்கம் எதை சாதிக்க போகிறது
அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை சுமந்து கொண்டு, இறைவனின் தூய வஹீ தான் மார்க்கம் என்ற முழக்கத்தோடு இறை அருளால் தொடர்ந்து வெளி வர இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.
அசத்தியத்தின் அடி நாதங்களை தகர்த்து எறிந்து சத்தியத்தை நிலை நாட்டும் அறிவு ஆசானாக இது செயல்பட இருக்கிறது.
இணை வைப்பிற்கு எதிரான ஏவுகணையாக, ஷிர்க் ஒழிப்பிற்கு பெரும் பங்காற்றும் ஆற்றலாக இது செயல்பட இருக்கிறது.
நபிவழியை மறந்து செயல்படும் சமுதாயத்திற்கு நேர்வழி எது என்பதைக் காட்டும் கலங்கரை விளக்கமாக செயல் பட இருக்கிறது.
ஒழுக்கமான சமுதாயத்தை வார்த்தெடுக்கும் ஒழுக்கப் போதனைகளை சுமந்து வர இருக்கிறது.
பித்அத் எனும் அனாச்சாரங்களில் மூழ்கி, நரகில் விழச் செய்யும் நாசகார சக்திகளிடம் இருந்து இஸ்லாமிய சமுதாயத்தை மீட்டெடுக்க புது பரிணாமத்துடன் வர இருக்கிறது.
ஏகத்துவத்திற்கு எதிரான பிரச்சாரங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிய இருக்கிறது.
ஆமை போல அல்ல, அசத்திய வாதிகளின் செவிப்பறைகளை கீறிக் கிழிக்க மின்னல் வேகத்தில் வர இருக்கிறது.
நாம் என்ன செய்ய வேண்டும்
இந்த மாத இதழ் தொய்வில்லாமல் தொடர ஏக இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
நம்முடைய நண்பர்கள், உறவினர்களுக்கு இதைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
தங்கு தடை இல்லாமல் வெளிவர நம்முடைய சந்தாக்களையும், விளம்பரங்களையும் அனுப்பித் தர வேண்டும்.