கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக ஐஐடி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் இறப்பதற்கு முன்பாக தனது மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசியர்தான் என்று தனது மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்தார்.
ஆறு பக்கங்கள் கொண்ட மற்றொரு பதிவில் தன்னைத் தொந்தரவு செய்தவர்களின் பட்டியலையும் பாத்திமா லத்தீப் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த சமயத்தில் பல ஊடகங்களும் இந்த செய்திகளை வெளியிட்டது.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்த போதும் கூட அவரது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என சிபிஐ கூறியிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
உத்திரப் பிரதேசம் மாநிலம் பனாரஸில் உள்ள ஐஐடியில் அவருக்கு இடம் கிடைத்த போதும் வட மாநிலங்களில் இந்துத்துவவாதிகளின் கும்பல் தாக்குதல்கள் நடந்து வருவதால் அமைதிப் பூங்காவான தமிழகத்தை தேர்ந்தெடுத்தார் பாத்திமா லத்தீப்.
தமிழகத்திலும் இவ்வகையறாக்களின் பிடியிலிருந்து அவர் தப்ப முடியவில்லை.
சுதர்சன் பத்மநாபன் என்ற இந்துத்துவ சிந்தனை கொண்ட ஒரு பேராசியர் தொடர்ச்சியாக அவருக்கு மதரீதியிலான தாக்குதல்களையும் , மற்றும் பல உளவியல் தாக்குதல்களையும் கொடுத்து வந்துள்ளார் என்பது பாத்திமா லத்தீபின் மொபைல் பதிவுகள் மூலம் உறுதியானது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்ற போதும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இந்துத்துவ சிந்தனை கொண்ட பேராசிரியரே காரணமாக இருந்துள்ளார்.
மற்ற மாணவ மாணவியரும் அந்த சமயங்களில் சுதர்சன் பத்மநாபன் குறித்து அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்,
இந்நிலையில் பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார்.
பின்பு இவ்விவகாரம் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தி வந்தது. பாத்திமா லத்தீபின் தந்தையிடமும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ விசாரணை நடத்தியது
ஒரு கட்டத்தில் இவ்வழக்கு சீராகப் போய்க் கொண்டிருப்பதாக பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் கூறி வந்த நிலையில் அவர் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது சிபிஐ .
பாத்திமா லத்தீபின் மரணத்திற்கு யாரும் காரணமல்ல. வீட்டு நினைவு அதிகமாக இருந்த காரணத்தினால் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி சிபிஐ இவ்வழக்கை முடித்து வைத்துள்ளது.
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து இறுதி வரை போராடுவோம் என அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
பாத்திமா லத்தீபின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த சுதர்சன் பத்மநாபன் என்பவர் மீது ஒரு சிறிய அளவிலான சட்டப்பூர்வ நடவடிக்கையோ அல்லது துறை ரீதியிலான நடிவடிக்கையோ கூட எடுக்கப்படவில்லை என்பது ஒருஅவமானகரமான செயலாகும்.
சமீப காலமாகவே சிபிஐ இந்துத்துவ சக்திகளின் கைப்பாவை போன்று செயல்பட்டு வருகிறது.
அவர்களின் சில விசாரணை முடிவுகள் அபத்தங்கள் நிறைந்த புரட்டுகளாக உள்ளன.
சங்பரிவாரங்களுடன் சங்காத்தம் வைத்திருக்கும் பலரும் எத்தகைய குற்றங்கள் செய்த போதும் , அதற்கு தகுந்த ஆதாரங்கள் கிடைத்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வருகின்றனர். அதற்கு சிபிஐயும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு விவகாரத்தில் சிபிஐ வந்தால் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்று ஒரு காலம் இருந்தது.
தற்போது அந்த நற்பெயரை இழந்து நிற்கின்றது சிபிஐ.
சமீபத்தில் மக்கள் கண்காணிப்பகத்தில் ரெய்டு நடத்திய காரணத்தால் சிபிஐ மக்களின் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
இத்தகைய செயல்பாடுகளால் சிபிஐ யின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
சிபிஐ யின் இத்தகைய செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழக அரசும் , நீதித்துறையும் பாத்திமா லத்தீபிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
இப்படிக்கு:
ஆர். அப்துல் கரீம்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.