ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய சட்டத்திற்கு புறம்பான, அநியாய தீர்ப்பை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று பேசிய சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்களான ஜமால் உஸ்மானி, மற்றும் கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கோவை ரஹ்மத்துல்லாஹ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தேடப்படும் குற்றவாளி என்பது போல சித்தரித்த காரணத்தால் தான் தேடப்படும் நிலையில் இல்லை. நானே நேரில் வந்து கைதாகிறேன் என்று கைதாகியுள்ளார்.
அமைதி வழியில் போராடும் நபர்கள் மீது கடுமையான வழக்கு தொடுப்பதும் கைது நடவடிக்கையை மேற்கொள்வதும் ஜனநாயகத்தின் குரலை நெறிக்கும் செயலாகும்.
வன்முறைப்பேச்சை எப்போதும் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிப்பதில்லை.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சாலை மறியலில் கூட தவ்ஹீத் ஜமாஅத் ஈடுபடுவதில்லை.
குறிப்பிட்ட பேச்சு தவறாக புரிந்து கொள்ளும் படி அமைந்து விட்டது. எனினும் சங்பரிவார கும்பல் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மத வெறுப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
சங்பரிவார கும்பல்களின் அரசியல் அழுத்தத்திற்கேற்ப அரசின் புறத்திலிருந்து இத்தகைய கைது நடடிவக்கைகள் ஏற்புடையதல்ல.
இது முஸ்லிம்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் நீண்ட காலம் தடை செய்யப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்க ஆதரவாளர்கள் தவ்ஹீத் ஜமாத்ததை குற்றம் சொல்லி குரலெழுப்புவது நகைப்பிற்குரியது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேய பணிகள், இரத்த தானம், பேரிடர் கால பொதுச் சேவைகள் உள்ளிட்டவை மக்கள் அறிந்ததே.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார கும்பல்களின் இரத்தக்கறை படிந்த வரலாற்றையும் மக்கள் அறிவார்கள்.
லாவண்யா மரணத்தை வைத்து தமிழகத்தில் அவர்கள் நகர்த்திய அரசியலை மக்கள் புரிந்து கொண்டதால் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வைத்து கேவலமான அரசியல் செய்யும் பாஜகவின் தந்திரம் தமிழகத்தில் பலிக்கப்போவதில்லை.
நீதிமன்றத்தை கொச்சை வார்த்தையில் விமர்சித்த எச்.ராஜா, மற்றவர்களின் காலைப் பிடித்து தான் நீதிபதிகள் உயர் பொறுப்புகளுக்கு வருகிறார்கள் என்று பேசிய துக்ளக் குருமூர்த்தி, பெண் பத்திரிக்கையாளர்களை ஆபாச வார்த்தையில் பேசிய எஸ்.வி சேகர் போன்றவர்களை போல் வரம்பு மீறிய செயல்களில் நாம் ஈடுபடுவதில்லை.
தமிழக பாஜக தலைவர்கள் இந்த பிரச்சனையை கையிலெடுத்து பரபரப்பு தேடுவதிலிருந்து அவர்களுக்கு இங்கு வேறு அரசியல் இல்லை என்பதை காட்டுகிறது.
இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், கோட்சேவிற்கு ஆதரவாகவும் ஈடுபடும் சங்க பரிவாரங்கள் போன்று வெறுப்பு அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இல்லை.
கைது நடவடிக்கைகளை கண்டு தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் அஞ்சாது. சட்டத்தின் அடிப்படையில் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஆர். அப்துல் கரீம்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.