பீஸ்ட் திரைப்படம் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

பீஸ்ட் திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் மக்களிடம் கருத்து கணிப்பு எடுக்கபடுகிறது. அனைத்து மனித நேய பணிகளை செய்யும் முஸ்லிம்களை திரும்ப, திரும்ப தீவிரவாதிகளாக சித்தரிப்பது முகம் சுலிக்க கூடிய வகையில் உள்ளதாக பொது மக்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.

மக்களை மடையர்களாக ஆக்கும் இந்த சினிமாக்களை சமூக சிந்தனை உள்ளவர்கள் பார்ப்பது இல்லை என்றாலும், முழுக்க, முழுக்க முஸ்லிம்களை திவிரவாதிகளாக சித்தரித்து இந்த படம் எடுக்கபட்டுள்ளது என்று அவர்களும் பேசி வருகின்றனர்.

மணிரத்தினம், விஜயகாந்த், அர்ஜூன், கமலஹாஸன் போன்றவர்கள் ஓய்வு பெற்று, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பழக்கம் முடிவிற்கு வந்து விட்ட நிலையில் அதை மீண்டும் தூசி தட்டும் வேலையில் விஜய் இறங்கியிருக்கிறார்.

கடந்த காலங்களிலும் கூட விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் ஸ்லிப்பர் செல்களாக ஒவ்வொரு கடைத் தெருவிலும் ஊடுருவி இருக்கிறார்கள் என்ற விஷ விதையை தூவி விட்டார்.

பீஸ்ட் படத்தில் விஜய் ஆப்கானிஸ்தான் சென்று மக்களை மீட்டு வருவதாக சில தகவல்கள் சொல்கின்றனர். உக்ரைனுக்கு இவரை அனுப்பி இருக்கலாமே என்றும் கோரிக்கையும் வைக்க ஆரம்பித்துள்ளனர்.

காவிக் கொடியை கிழித்து டிரைலர் வந்த போது சங்பரிவாரங்கள் ஏன் எதிர்க்கவில்லை என்று விளங்கி கொள்ளும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாகவும், மோடி இதற்கு விளம்பரம் செய்வார் என்று சொல்லும் அளவிற்கு முஸ்லிம் விரோத போக்குடன் இந்த படம் எடுக்கபட்டுள்ளது.

நிஜ வாழ்வில் எந்த சமூக பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளாதவர் இந்த விஜய். அரசை எமாற்ற, வரி ஏய்ப்பு செய்ய அறக்கட்டளை மூலமாக மட்டும் சில உதவிகள் செய்பவர். சினிமாவில் மட்டும் கதைக்கு ஏற்றவாறு மக்களின் மீது அக்கறை உள்ளவர் போன்று கூலி வாங்கி நடித்து கொண்டு இருக்கிறார்.

சமூகத்தில் நடக்கும் அனைத்து துயரங்களிலும், மக்களுக்கு உதவ களத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்கள். களத்திற்கு வந்திருந்தால் இதை அவர் சந்தித்து இருப்பார்.

உணவு அளிப்பதிலும், இரத்த தான உதவி செய்வதிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும், கல்வி பணியாற்றுவதிலும், ஆம்புலன்ஸ் உதவி செய்வதிலும், பேரிடர் காலங்களில் உடனே களத்திற்கு வருவதிலும் முன்னோடியாக முஸ்லிம்கள் உள்ளனர்.

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் புண் படுத்தும் காரியங்களை தொடர்ந்து விஜய் செய்து வருகிறார்.

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை விஜய் உடனே மாற்றி கொள்ள வேண்டும். இந்த படத்தை குவைத் போன்ற நாடுகள் தடை விதித்து உள்ளது.
வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ள, இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனையை ஊட்டும், இந்த படத்தை தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஆர். அப்துல்கரீம்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here