மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்:
மகாராஷ்டிரா மாநிலம் கஜாபூர் என்கிற கிராமத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்றின் மீது மதவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான அறமற்ற இச்செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
நம் தேசத்தில் மதச்சார்பின்மை அருகி வருகிறது. மதவாதமோ பெருகி வருகிறது. வடமாநிலங்களில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்படுவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல என்ற போதும் ஒன்றிய அரசு தன் மதவெறிப் போக்கை இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதைத் தான் இச்சம்பவம் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.
கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள விஷால்காட் கோட்டை மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் விலங்கு வதையைத் தடைசெய்யக் கோரியும் இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தியதாம்,
மதவெறித் தலைவர்களையும் கொடுங் குற்றங்கள் செய்யும் கிரிமினல்களையும் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட மோசடிப் பேர்வழிகளையும் கண்டு கொள்ளாத இந்த மதவெறிக் கும்பல்களுக்கு பாமர , பாட்டாளி மக்களின் ஆக்கிரமிப்புகள் மட்டும் கண்ணை உறுத்துகிறது
விலங்குகள் வதை செய்யப்படுவதை கண்டித்து போராடினார்களாம் ? . இந்தியாவில் மனிதர்களுக்குக் கிடைக்காத கருணையும் கரிசனமும் மிருகங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறதோ தெரியவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்றப் போராடியவர்கள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலின் மீது ஏன் தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளிவாசல் தாக்கப்பட்டது மட்டுமல்ல அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இஸ்லாமியர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இவர்களின் போரட்டமே பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் தான் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
ஒருவன் பள்ளிவாசலின் மேற்கூரை மீது ஏறி காவிக் கொடியை நாட்டுகிறான். மற்றொருவன் பள்ளிவாசலின் மினாராவைச் சம்மட்டியால் அடித்து உடைக்கிறான் .
இன்னும் பள்ளிவாசலின் பொருட்கள் சூறையாடப்படுகின்றன. இத்தகைய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த இழிசெயலின் பின்னணியில் முன்னாள் ராஜ்யசபா எம்பி சம்பாஜி ராஜே சத்ரபதி இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற முடியாத பாஜக அரசு சிறுபான்மையினரையும் அவர்களது வழிபாட்டுத் தலங்களையும் தாக்கிவிட்டால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என தப்புக் கணக்கு போடுகிறது.
இந்தப்பள்ளிவாசலை இடித்த கயவர்கள் மீது உடனடியாக கடும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களைச் சிறைக் கொட்டத்தில் அடைத்து தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்கும் தாக்கப்பட்ட மக்களுக்கும் தகுந்த சரியான இழப்பீட்டை மகாராஷ்டிரா அரசும் ஒன்றிய அரசும் வழங்க வேண்டும் . நீதித்துறை இவ்விவகாரங்களில் கவனம் செலுத்தி பெருகிவரும் மதவெறிப் போக்கையும் அதில் ஈடுபடும் அயோக்கியர்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு:
அ.முஜிபுர் ரஹ்மான்.
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்