ஜுமுஆ தாயிகளுக்கான தர்பியா – 2022

நாள் : 23 & 24.07.2022

இடம் : ஸ்ரீ கந்த மஹால், பொள்ளாச்சி, கோவை

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதராகவும் இருக்கிறார்கள் என்ற ஒற்றைத் தத்துவமாம் ஓரிறைத் கொள்கையை ஏற்று, மார்க்கத்தின் பெயரால் இணைவைப்பிலும், பித்அத்திலும் மூழ்கிக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் தனது சத்தியப் பிரச்சாரத்தின் மூலம் பெருவாரியான மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுத்து ஏகத்துவக் கொள்கையை நோக்கி அழைத்து வரும் பணியை செய்து கொண்டிருப்பது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம்.

எத்தனையோ எதிர்ப்புகள், சூழ்ச்சிகள் அனைத்தையும் எதிர்கொண்டு இன்று இலட்சக்கணக்கான மக்களை ஏகத்துவத்தை நோக்கி வென்றெடுத்ததோடு, மார்க்கத்தைச் சொல்ல வருடக் கணக்கில் மத்ரஸாக்களில் ஓதிப்படித்த இமாம்கள்தான் தகுதியானவர்கள் என்றிருந்த பிம்பத்தை உடைத்து ஆயிரக்கணக்கான மார்க்கப் பிரச்சாரகர்களையும் இந்த ஜமாஅத் உருவாக்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல்  தாயீக்களின் திறனை வளர்த்துக் கொள்ளத் தூண்டுவதோடு, அவர்களுக்கான மார்க்கப் பிரச்சாரங்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்வது ஜமாஅத்தின் வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இவ்வாறான நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகாலமாக நடைபெறாமல் இருந்த நிலையில் இப்போது தாயீக்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தியது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநில தலைமையின் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ தாயீக்களுக்கான தர்பியா.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 23/7/2022 -24/7/2022 இரண்டு நாட்கள் ஸ்ரீகந்த மஹால் என்ற மண்டபத்தில் ஜும்ஆ தாயீக்களுக்கான தர்பியா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைதியான இயற்கை சூழலிற்கு மத்தியில் அமைந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான  மண்டபத்திற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் மார்க்கப் பிரச்சாரகர்கள் அணியணியாய் வந்தனர்.

அங்கு வந்த தாயீக்களில் பெரும்பான்மையானோர் இளைஞர்கள். ஏகத்துவ பிரச்சாரத்தை வீரியமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல இத்தனை துடிப்பு மிக்க இளைஞர் பட்டாளத்தை இந்த அமைப்பு உருவாக்கியுள்ளதைக் கண்டபோது தவ்ஹீதின் எழுச்சியையும் அதன் வளர்ச்சியையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

முதல் நாள் நிகழ்வுகள்

முதல் நாள் காலை பத்து மணி முதல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முந்தைய நாள் இரவே வந்து சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து வந்தவர்களும் காலை எட்டு மணி முதலே வருகைப் பதிவேட்டை பதிவு செய்து அரங்கத்தினுள் இருந்த ஆயிரக்கணக்கான இருக்கைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்.

திட்டமிட்ட படி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியின் முதல் அமர்வின் துவக்கத்தில் மாநிலச் செயலாளர் முஹம்மது ஒலி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து தாயீக்களுக்குத் தேவையான மார்க்கம் குறித்த வகுப்புகள் எடுக்கப்பட்டன.

மார்க்க அறிஞர்களின் ஆய்வு வகுப்புகள்

மாநிலப் பொதுச்செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் குறித்து வகுப்பு எடுத்தார்கள். நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக வரக்கூடிய செய்திகள் எவ்வாறு குர்ஆனுக்கு முரண்படுகிறது. நமபகமானவர்களும் தவறிழைப்பார்கள் என்பதையும் ஹதீஸ் கலை குறித்த ஹதீஸ் கலை அறிஞர்களின் விளக்கங்கங்களையும் எடுத்துக் கூறியதோடு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே இது போன்ற முரண்படும் செய்திகளை மறுத்துள்ளார்கள் என்பதையும் ஆணித்தரமாக உணர்த்தக்கூடிய விதத்தில் பல ஆதாரங்களுடன் அதனை விளக்கிச் சொன்ன விதம் இது குறித்து எதிரிகளால் எழுப்பப்படும் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ளும் அளவிற்கான தெளிவை தாயீக்கள் அறிந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது.

மத்ஹபு வாதிகளால் எழுப்பப்படும் கேள்விகளையும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் குறித்து அவர்களே ஏற்றுக்கொண்டுள்ள இமாம்களினுடைய நிலைப்பாடு குறித்தும் ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் வகுப்பு எடுத்த விதம் ஹதீஸ் கலை குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தாயீக்களுக்கு எழுப்பக்கூடியதாக அமைந்திருந்தது.   வெறும் பயான் நிகழ்ச்சியைப்போல் அல்லாமல் எடுக்கக்கூடிய பாடங்களின் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தையும் அனைவருக்கும் வழங்கியது கவனிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

புதுப்பொலிவுடன் புதிய தர்ஜுமா

அல்லாஹ்வின் பேருதவியால் நமது ஜமாஅத்தின் அறிஞர்களின் கூட்டு முயற்சி மூலம் உருவாக்கப்பட்ட புதிய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் சொல்லப்பட்டுள்ள பல புதிய தகவல்களையும் அதற்கான இலக்கண ரீதியிலான விளக்கத்தையும் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அப்துந்நாசிர் அவர்கள் விளக்கிச் சொன்னார்கள்.

திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு விபரங்களை எடுத்துச்சொன்ன முறையும், தகவல்களும் ஆய்வுப் பணிக்கு என்றும் ஓய்வே கிடையாது என்பதை விளங்கிக்கொள்ள உறுதுணையாக இருந்தது.

மேலும் இன்றைய காலத்தில் மார்க்க அறிஞர்களின் தேவையையும் மார்க்க ரீதியாக இன்னும் மேற்கொள்ள வேண்டிய பல ஆய்வுகளுக்காக புதிய மார்க்க அறிஞர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அனைவருக்கும் உணர்த்தியது.

இதனைத்தொடர்ந்து மாநில துணைப்பொதுச் செயலாளர் சகோ. முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தாயீக்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில நிர்வாக தகவல்களையும், நடுநிலைச் சமுதாய வார பத்திரிகை, சத்திய முழக்க மாதப் பத்திரிகை, டிவிட்டர் பயன்பாடுகளையும் விளக்கிச் சொன்னார்.

மதிய உணவிற்கான இடைவேளைக்கு பிறகு….

திறனறி சோதனைக்கு ஓர் தரமான தேர்வு முறை

மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு மதிய உணவு முடிந்ததும் அதனைத்தொடர்ந்து அடுத்த அமர்வின் முதல் நிகழ்வாக தாயீக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திறன் ஆய்வுத் தேர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தொழுகைச் சட்டங்கள், ஈமானிய அடிப்படை, இஸ்லாமிய ஒழுங்குகள் என மூன்று பிரிவுகளில் அனைவருக்கும் வைக்கப்பட்ட தேர்வில் அனைவரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தேர்வு எழுதத் தொடங்கினார்கள். ஆயிரக்கணக்கான தாயீக்கள் தேர்வு எழுதிய அந்தக்காட்சி புருவங்களை உயர்த்த வைத்தது. அவ்வளவு கட்டுக்கோப்பாக அமர்ந்து அனைத்து தாயீகளும் தேர்வு எழுதினார்கள்.

தாயீக்களின் கற்றல் திறனையும் ஆர்வத்தையும் அதிகரிக்கத் தூண்டக்கூடிய விதத்தில் அமையப்பெற்ற இந்தத் தேர்வு அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆலிம்கள் மற்றும் விவீsநீ படித்தவர்களுக்கும் தனியான தேர்வு வைத்தது அவர்களுக்கும் மிகவும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.

நினைவூட்டப்பட்ட நிலைப்பாடுகள்-

இந்த ஜமாத்தின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் இதன் சட்ட திட்டங்களும் கட்டுப்பாடுகளும் மார்க்க மற்றும் நிர்வாக நிலைப்பாடுகள்தான். அதனை நினைவூட்டக்கூடிய வகையில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர். இ.முஹம்மது அவர்கள் ஜமாஅத்தின் மார்க்க நிலைப்பாடுகளையும், நிர்வாகத்தின் சட்ட விதிகளையும் ஒழுங்கு நடவடிக்கைக்குரிய நிலைப்பாடுகளையும், அதன் முக்கியத்துவங்களையும் விளக்கிச் சொன்னார்கள்.

சர்ச்சைக்குரிய சட்டங்களும் அறிஞர்களின் விளக்கங்களும்

தவ்ஹீத் ஜமாஅத் எது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு இயங்கி வரும் சில அமைப்புகள் தவ்ஹீத் ஜமாஅத் எந்த ஆய்வை மேற்கொண்டாலும் அதில் குறைகாண்பதும் அதற்கு எதிரான ஃபத்வாக்களைக் கொடுப்பதுமே முழு நேரப்பணியாகக் கொண்டுள்ளனர். இத்தகைய சிலரின் விமர்சனத்திற்கு உரிய பதில்களை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் இஸ்லாமிய கல்லூரி முதல்வர் சபீர் அலி  எம்.ஐ.எஸ்.சி அவர்கள் விளக்கி வகுப்பெடுத்தார்கள்.

  • தொழக்கூடாத பள்ளிகள் எவை, என்ன காரணங்களுக்காக தொழக்கூடாது, அல்லாஹ்வின் வசனங்கள் கூறுவது என்ன என்பதையும்,
  • சூனிய நம்பிக்கை எவ்வாறு இணைவைப்பாகிறது,
  • இணைவைக்கும் இமாமை பின்பறி தொழலாமா,
  • குர்பானி கொடுப்பது எத்தனை நாட்கள், அதற்கான ஆதாரங்கள்,
  • ஒரு நாள்தான் குர்பானி கொடுக்க வேண்டும் எனச் சொல்வோரின் தவறான வாதங்கள், அதற்கான பதில்கள்

என பல சர்ச்சைக்குரிய சட்டங்களையும் அது குறித்த ஆய்வுகளையும் வகுப்பாக எடுத்து தாயீக்களுக்கு தெளிவு ஏற்படுத்தப்பட்டது.

மனதைத் தொட்ட மனன வகுப்பு

முதல் நாள் வகுப்பு மாலையுடன் நிறைவுற்றதும் சிறிது நேர ஓய்விற்குப் பின் மஃக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து முக்கியமான துஆக்கள் மனனம் செய்ய பயிற்சியளிக்கப்பட்டது.

40 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்களின் கண்காணிப்பில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆலிம் நியமிக்கப்பட்டு துஆக் களின் உச்சரிப்பு, முக்கிய துஆக்கள் மனனம்  என சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வகுப்பு முதல் நாள் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பெற்றது.

ஒவ்வொருவரும் ஆசையோடும், ஆர்வத்தோடும் துஆக்களை மனனம் செய்வதிலும் அறிந்திருந்த துஆக்களை நினைவுபடுத்திக் கொள்வதிலும் போட்டி போட்டுக்கொண்டு பங்காற்றினார்கள். நேரம் முடிந்த பின்பும் உறங்கச் செல்லும் நேரத்திலும் சொல்லிக்கொடுக்கப்பட்ட துஆக்களை மனனம் செய்ததையும் காணமுடிந்தது. மனனம் செய்த துஆக்களை பள்ளி மாணவர்களைப்போல் ஒருவருக்கொருவர் மாறி மாறி சொல்லிக்கொண்டு அதில் காட்டிய முனைப்பு தாஃயீக்களின் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.

இரவுத்தொழுகையுடன் இரண்டாம் நாள் துவக்கம்

முதல் நாள் இஷாவிற்குப் பின் முடிந்த வகுப்பு மறுநாள் இரவுத் தொழுகையோடு துவங்கிவிட்டது. இரவுத் தொழுகைக்கான நேரம் வரும் முன்னதாகவே அனைவரும் தயாராகி தொழுகை அரங்கத்திற்கு வரத்துவங்கினர்.

ஆயிரக்கணக்கான தாயீக்கள் ஒரே அரங்கத்தில் அணிவகுத்து நின்று இரவுத்தொழுகையை நிறைவேற்றியதோடு அதனைத்தொடர்ந்து துஆ மற்றும் ஃபஜ்ரு தொழுகையும் நிறைவேற்றப்பட்டது. தஹஜ்ஜத் தொழுகையில் அணிவகுத்து நின்ற மக்களின் கூட்டமும் அவர்கள் காட்டிய ஆர்வமும் இந்த நிகழ்சியின் வெற்றியை உணர்த்துவதாக அமைந்திருந்தது.

தொழுகைக்கு பிறகு கேட்க வேண்டிய துஆ க்கள் குறித்த நேரத்தில் சொல்லி கொடுக்கப்பட்டு வரக்கூடிய காலங்களில் தாயிக்கள் பின்பற்ற வலியுறுத்தியது மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாக சிலர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

தாயிகள் பேண வேண்டிய ஒழுங்குகள்

முதல் வகுப்பாக தாயிக்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் குறித்து மாநில துணைத் தலைவர் இ.ஃபாருக் அவர்கள் விளக்கினார்.

தியாகம், தாயிக்கள் ஆடை ஒழுக்கம், நேரம் பேணுதல், குறிப்பு எடுத்தல், சுய மதிப்பீடு, திறன் மேம்பாடு என்று பல்வேறு பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்கியது தாயிக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

அமல்களில் அலட்சியம் வேண்டாம்

அழைப்புப் பணியின் ஆணிவேராக இருக்கும் அழைப்பாளர்கள் அமல்களின் விஷயத்தில் எவ்வளவு கவனத்தோடும் ஆர்வத்தோடும் இருக்கவேண்டும். அதன் முக்கியத்துவங்கள் என்ன என்பதையும் மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் விளக்கி உரை நிகழ்த்தினார்கள். உபரியான வணக்கங்கங்கள், பாவமன்னிப்பு கோருதல் சிறிய அமல்களை தொடர்ச்சியாக செய்வதன் முக்கியத்துவம் என்பன போன்ற ஆக்கப்பூர்வமான செய்திகளை வழங்கினார்கள்.

இறை உதவியைப் பெற்றுத்தரும் அமல்களில் இருக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளவும், அதனை நடைமுறைப் படுத்தவும் ஆர்வமூட்டக்கூடிய விதத்தில் அமையப்பெற்ற இந்த உரை காலத்தின் தேவையாகவே அமையப் பெற்றிருந்தது.

ஸலஃபிக் கொள்கைக்கு சம்மட்டியடி

அல்லாஹ்வின் வஹி மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதே உண்மையான தவ்ஹீத். நாங்களும் தவ்ஹீத் வாதிகள்தான் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் சிலர்,  தவ்ஹீதின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யக்கூடிய வகையில் சஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்ற நச்சுக்கருத்தை மக்கள் மத்தியில் விதைத்து அப்பாவி முஸ்லிம்களை வழிகேட்டை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள்.

இவர்கள் தங்களை  ஸலஃபிகள்  என அழைத்துக்கொண்டு ஆபத்தான மார்க்க விரோத கருத்துக்களை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான பதிலாகவும் தாயீக்களுக்கான தெளிவாகவும் மாநில பேச்சாளர் வி.மி.சுலைமான் அவர்கள் மிகத்தெளிவான முறையில் ஸலபுகள் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்கள்.

அல்லாஹ்வின் வஹி மட்டுமே மார்க்க ஆதாரம், சஹாபாக்களுக்கு வஹி வருவதில்லை, சஹாபாக்கள் தவறிழைக்கக்கூடியவர்கள். சஹாபாக்களை மதிப்பதும் அவர்களை பின்பற்றுவதும் வேறு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்களைக் கூட வஹியின் அடிப்படையில்தான் பின்பற்ற வேண்டும் என்பதை எளிமையாகவும், வலிமையாகவும் எடுத்துச் சொன்னார்கள்.

பித் அத் என்பதே வழிகேடுதான்

முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் பித் அத் களை ஒழிப்பதற்காக நடைபெற உள்ள மாநாட்டை மையப்படுத்தி நாம் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரத்திற்காக அழைப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல்வேறு செய்திகளை பொதுச் செயலாளர் அப்துல்கரீம் அவர்கள் பொறுமையாகவும் தெளிவாகவும் வகுப்பெடுத்தார்கள்.

பித்அத்திற்கும் நஃபிலுக்கும் உள்ள வேறுபாடு, நபிகளாரின் பித் அத் குறித்தான எச்சரிக்கை, ஒரு காரியம் எப்போது பித்அத் ஆக மாறுகிறது என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் விளக்கமாக கூறப்பட்டன.

தியாகத்தால் உருவான ஏகத்துவ எழுச்சி

தவ்ஹீத் இயக்கம் கடந்து வந்த பின்னணியையும் கடந்த காலத்தில் இந்த ஜமாஅத் எதிர்க்கப்பட்டதால் அதன் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட பல இளைஞர்களின் தியாகத்தையும், நினைவூட்டி நம்மிடத்தில். மாநிலத் தலைவர்  எம்.எஸ். சுலைமான் அவர்கள் விளக்கிச் சொல்லும் போது இந்தக் கொள்கைக்காக இன்று வரை பல போராட்டங்களைச் சந்தித்தாலும் இன்னும் தவ்ஹீதிலேயே பயணிக்கும் அந்தச் சகோதரர்களின் தியாகத்தை நினைத்து விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

குறிப்பாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை விளக்கிச் சொன்ன போது அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்கள் சந்தித்த பல கொடுமைகளும், ஊர் நீக்கமும், குடும்பத்தைப் பிரிந்து, தொழில்களை இழந்து, அடி உதை என பல்வேறு சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டு இறுதியில் இந்த ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதற்காக எதிர்த்த இடத்திலேயே ஒரு பள்ளியைக் கட்டி எழுப்பிய அந்த அசாத்தியமான தைரியமும் ஒட்டு மொத்த ஏகத்துவ வாதிகளுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது.

இந்த தவ்ஹீத் எழுச்சியின் பின்னணியில் ஒரு நபர் அல்ல , ஒவ்வொரு தவ்ஹீத்வாதியின் தியாகம் நிறைந்த வாழ்க்கை தடம்பதித்து நிற்கின்றது. குடும்பத்திலிருந்தும், ஊர் மக்களிடமிருந்தும் பல எதிர்ப்புகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்து ஒவ்வொரு ஏகத்துவவாதியின் இரத்தம் தோய்ந்த  சோக வரலாறு புதைந்து கிடக்கின்றது.

இந்தக் கொள்கைகள் இன்னும் எதிர்க்கப்படும். என்னதான் எதிர்ப்புகள் வந்தாலும் அமைதியாகவும், அறிவுடைமையோடும் பதில் சொல்ல வேண்டியதும், அதனை தைரியமாக எதிர் கொள்வதும் ஒவ்வொரு ஏகத்துவவாதின் கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற புதிய உத்வேகத்தை அனைவருக்கும் இந்த தர்பியா ஏற்படுத்தியது.

பம்பரமாக சுழன்ற தொண்டர் அணியினர்

கொள்கை சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் தொண்டர்களாக செயல்பட்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. மாவட்ட நிர்வாகிகள், மாணவர்கள் என்று நம்முடைய ஜமாஅத்தில் தன்னலம் இல்லாமல் சேவையாற்றும் இந்த நிலையை ஏகத்துவ கொள்கை தான் உருவாக்கியது என்றால் மிகையல்ல…

நன்றியுரை மாநிலச் செயலாளர் சையத் அலி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இறையருளால், தாவாவே இந்த ஜமாஅத்தின் உயிர் மூச்சு என்றும் அதனை உறுதி செய்யும் வகையில் தாயிக்களின் கருத்துக்கள் அடங்கிய கருத்து படிவம் வெளிபடுத்தியுள்ளது.

புத்துணர்ச்சி ஊட்டிய இந்த தர்பியாவில் கலந்து கொண்ட தாயீக்கள் சோர்வில்லாமல் களப்பணியாற்ற இந்த பொள்ளாச்சி தர்பியா உந்து சக்தியாகவே இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

உமக்கு ஏவப்பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பீராக!

அல்குர்ஆன் (15:94)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here