மக்களவை தேர்தல் சொல்லும் பாடம்
மக்களவைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதை உறுதி செய்தாலும் 2014, 2019 போன்று இம்முறை பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் தான் ஆட்சிக்கட்டிலில் அமரும் நிலைக்கு பாஜக ஆளாகியிருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு விழுந்த அடியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மோடியும் அமித்ஷாவும் தேர்தல் பரப்புரைகளின் போது 400 இடங்களுக்கு மேல் வெல்வோம் எனச் சூளுரைத்தனர். 3 கட்ட தேர்தல்கள் முடியும் முன்னே 300 ஐ கடந்து விட்டோம் என மார்தட்டினர். அவர்களின் கனவில் பேரிடி விழுந்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய – பிந்தைய கருத்துக் கணிப்புகள் எனும் பெயரில் தோதான செய்தி நிறுவனங்களின் மூலம் தங்களுக்கு அசுர பலம் இருப்பதாகப் போலி பிம்பத்தைக் கட்டமைத்தார்கள். அனைத்தும் சுக்குநூறாகத் தகர்ந்து விட்டது. மீடியாக்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட மோடியின் பிம்பம் அடியோடு காலியாகிவிட்டது. கடந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மோடி இம்முறை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசம் எனும் அளவில் மோடியின் வெற்றி விகிதம் சரிந்துள்ளது.
இந்தியா டுடே வின் ஊடகவியலாளர் பிரதீப் குப்தா என்பவர் பிஜேபி 400 இடங்களுக்கு மேல் வெல்லும் எனக் கருத்துக் கணிப்பை வெளியிட்டவர். மக்கள் கொடுத்த அதிர்ச்சி முடிவினால் மீடியாக்களுக்கு முன் கதறி அழுகிறார். வெற்றி வாய்ப்பைக் கணித்தவருக்கே இந்தத் தோல்வியைத் தாங்கமுடியவில்லை என்றால் மோடி அமித்ஷாவின் நிலையை எண்ணிப்பாருங்கள். அந்தளவுக்கு பலமான அடி பாஜகவுக்கு விழுந்துள்ளது.
உ.பி, மஹராஷ்ட்ராவில் கணிசமான அளவில் தொகுதிகளைக் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிடம் பாஜக இழந்துள்ளது. ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியைக் கூட கைப்பற்ற இயலவில்லை. ராமர் கோவில் விவகாரத்தை பாஜக அரசியலாக்கியதை மக்கள் ஏற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. உ.பி மாநில மக்கள் கூட ஏற்கவில்லை என்பத்தைதான் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பிஜேபி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் ஐந்தாண்டுக் காலம் நிம்மதியாக ஆட்சி செய்யும் நிலை இல்லை. கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல் பிஜேபியால் ஐந்தாண்டுக் காலத்தைக் கடத்த முடியாது. பிஜேபியின் வெற்றி அப்படியானதே.
இந்த வெற்றி கூட மக்கள் ஜனநாயகப் பூர்வ அடிப்படையில் வழங்கியது அல்ல. தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் பெற்ற வெற்றிதான் இது.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக அத்தனைப் பேச்சுகளை பிஜேபியின் தலைவர்கள் பேசினர். அவை எதற்கும் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தகுந்த ஒரு வழக்குக் கூட பதிவு செய்யவில்லை. இதன் மூலம் மக்களிடையே தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையையே இழந்து விட்டது என்பதுதான் உண்மை.
அதுமட்டுமின்றி உ.பி மாநிலத்தில் 16 வயது சிறுவன் 7 முறை பிஜேபிக்கு வாக்களித்த அவலத்தை நாடே கண்டது. இது போன்று ஆங்காங்கே இவிஎம் குளறுபடிகள் எனத் தேர்தல் ஆணையம் மெத்தனப் போக்கையே வெளிப்படுத்தியது.
இன்னொரு புறத்தில் பிஜேபியில் தற்போதுள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஏதோ உளப்பூர்வாக பிஜேபிக்கு தங்கள் ஆதரவை வழங்கியவர்கள் கிடையாது.
அமலாக்கத்துறை, வருவாய்த்துறை, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை ஏவிவிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களைப் பணியவைத்துப் பெற்ற ஆதரவுதான். மஹராஷ்ட்ராவின் அஜித்பவாரை தேசிய ஊழல்வாதி என்று மோடி விமர்சனம் செய்தார். இப்போது அவர் மோடியின் கூட்டணியில் உள்ளார். அப்படித்தான் இப்போது பல தலைவர்கள் பிஜேபி கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் தள்ளினர். தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கி காங்கிரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருந்தும் பிஜேபியால் பெரியளவு வெற்றியைப் பதிவுசெய்ய முடியவில்லை என்பது மோடி – அமித்ஷா இணைக்குக் கிடைத்த பெருந்தோல்வியாகும்.
என்ன தான் பிஜேபி கூட்டணி ஆட்சி என்றாலும் குறைந்த தொகுதிகள் வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றிருக்கின்றது.
எந்த இந்திய பிரதமரும் இப்படித் தரம் தாழ்ந்து பேசியதில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான விமர்ச்சனத்தை மோடியின் மீது வைத்தார். தன்னைக் கடவுளின் அவதாரம் என்று கூறியது உட்பட மோடி காட்டிய அத்தனை வித்தைகளும் இந்தத் தேர்தல் முடிவின் மூலம் புஷ்வானமாகி விட்டது.
இதன் மூலம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். கடந்த காலங்களைப் போல பிஜேபியால் சர்வாதிகார ஆட்டம் ஆட இயலாது. எப்போது கூட்டணிக் கட்சிகள் பிய்த்துக் கொண்டு ஓடுவார்கள் எனப் பதைபதைப்புடனேயே ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தைத் தள்ள வேண்டியிருக்கும்.
வீதியில் இறங்கி விவசாயிகள் போராடினாலும் அதனைக் கண்டு கொள்ளாமலிருப்பது, மணிப்பூரில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கூற மறுப்பது, சினிமா, விளையாட்டு பிரபல்யங்களுடன் சேர்ந்து கொண்டு செல்ஃபி போடுவது உள்ளிட்ட மோடியின் மன்னர் மனப்பான்மைக்கு மக்கள் சமாதி கட்டிவிட்டார்கள்.
இனி மக்களவைக்கு வந்து விட்டு எதுவும் பேசாமல் டாடா காட்டிவிட்டு செல்வது, மக்களவை பிரதிநிதிகள் எவரையும் கலந்து ஆலோசிக்காமல் விவாதிக்க நேரம் ஒதுக்காமல் அவசரச் சட்டம் இயற்றுவது, விவசாயிகள், வியாபாரிகளை நசுக்கும் வகையில் கருப்பு சட்டம் இயற்றுவது, தடாலடியாக ஐநுறு ஆயிரம் செல்லாது என்று அறிவித்து விட்டு உலக நாடுகள் சுற்றிப்பார்ப்பது உள்ளிட்ட எந்தச் சித்துவேலைகளும் எடுபடாது.
கூட்டணிக் கட்சித்தலைவர்களைத் தக்கவைப்பதிலேயே இவர்களுக்கு ஐந்தாண்டுக் காலம் ஓடிவிடும். நிதீஷ்குமாரையும் சந்திரபாபு நாயுடுவையும் தக்கவைக்கவே பெருமளவு போராட வேண்டியது தான். வேறு வழியில்லை. அவ்வளவு பலவீனமான நிலையில் தான் இருக்கிறார்கள். மொத்தத்தில் பிஜேபியின் சர்வாதிகாரத்திற்கு இந்தத் தேர்தலில் மக்கள் முடிவுரை எழுதி விட்டார்கள்.
பிஜேபியின் இத்தகைய அசுர வீழ்ச்சி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி.
இந்திய மக்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
மோடியும் அமித்ஷாவும் எங்களுக்கு வேண்டாம். மதவாதமும் வெறுப்பு பிரச்சாரமும் வேண்டாம். நாட்டின் வளர்ச்சியும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கூட்டாட்சித் தத்துவமுமே எங்களுக்கு வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் மிக முக்கிய செய்தி அது தான்.
ஆளும் ஆட்சியாளர்கள் அதைக் கவனத்தில் கொண்டு ஆட்சி செய்ய முன்வரவேண்டும்.
இப்படிக்கு.
அ. முஜிபுர் ரஹ்மான்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.