மண்ணடியை மூழ்கடித்த மக்கள் வெள்ளம்
நாள் : 11.11.2018
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வடசென்னை மாவட்டம் சார்பில் கடந்த 11/11/2018 ஞாயிறு அன்று மாபெரும் திருக்குர்ஆன் மாநாட்டு அழைப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சத்தியக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில் எவ்விதமான நெளிவு சுளிவு இன்றி எந்தவிதமான சமரசங்களும் இன்றி நேர்க்கோட்டில் பயணிக்கும் ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே! இந்த ஜமாஅத், பிரச்சாரம் செய்வதில் மட்டுமல்ல! நீதி செலுத்துவதிலும் இறைவனின் கிருபையால் மற்றவர்களை விட தனித்தே நிற்கின்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸை மட்டுமே மார்க்கமாக பின்பற்றி வருகின்றனர். இதில் எந்த விதமான மாறுபாடும் இல்லாமல் இறைவனின் கிருபையால் இன்றுவரைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்ந்து வருகின்றது. தங்களுடைய சுயநலத்திற்காக திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளும் அவலம் தவ்ஹீத் ஜமாஅத்தில் எப்போதும் கிடையாது.
வலியவனுக்கு ஒரு நீதி, எளியவனுக்கு ஒரு நீதி என்ற யூதர்களின் கோட்பாட்டிற்கு எதிரானது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இந்த அமைப்பில் தொண்டன் தவறு செய்தாலும் சரி தலைவன் தவறு செய்தாலும் சரி! இருவருக்குமான தண்டனை ஒன்றுதான். அதற்கான உதாரணங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் வரலாறுகளைப் படிப்பவர்களுக்குத் தெரிந்து இருக்கும்.
சஹாபாக்களை எக்காலத்திலும் பின்பற்றாது தவ்ஹீத் ஜமாஅத், அதேநேரம் அந்த சஹாபாக்கள் இழிவுபடுத்தப்பட்டால் அதைச் செய்வதர்களைக் கடுமையாக கண்டிக்கும் இந்த ஜமாஅத்.
திருக்குரான் மாநாட்டு அழைப்பு
திருக்குர்ஆனை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முக்கியச் செயல்திட்டமான மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாடு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கான அழைப்பாக இந்த மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட இப்பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அபூ அப்துர் ரஹ்மான் தலைமையேற்றார். தம்பு செட்டி தெருவில் நடத்தப்பட்ட இப்பொதுக்கூட்டத்தில் தம்பு செட்டி தெருவின் துவக்கம் முதல் இறுதிவரைக்கும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டது. தெருவின் பாதிப்பகுதி முழுவதும் பெண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள்.
ஏகத்துவவாதிகளின் பண்புகள்
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் மாநிலப் பேச்சாளர் எம்.ஐ.சுலைமான், “ஏகத்துவவாதிகளின் பண்புகள்” என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். அவரது உரையில்..,
அன்றைய மக்கள் வழிகேட்டிற்குச் சென்ற காரணமே மனிதர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தியதே ஆகும். அதன்பிறகு இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தை பிரித்துக்காட்டித்தான் ஏகத்துவம் வளரத் துவங்கியது. மனிதர்களிடத்தில் தவறுகள் உண்டு பிரச்சினைகள் உண்டு, ஆனால் இறைவனிடத்தில் தவறுகள் இல்லை என்பதை அன்றைய கால கட்டத்தில் மக்கள் மனதில் ஆழமாக பதியவைக்கப்பட்டது.
அவ்லியாக்களிடத்திலும் தவறுகள் வரலாம், அறிஞர்களிடத்திலும் தவறுகள் வரலாம், ஆனால் நாங்கள் அபிமானம் கொண்டுள்ள தலைவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற நினைப்பு வந்தால் நாம் மறுபடியும் அறியாமைக் காலத்திற்கே சென்று விடுவோம். அல்லாஹ்விற்கு மட்டும்தான் தவறுகள் வரவே வராது.
நபிமார்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தவறு செய்திருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினார்கள். மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்களே என்ற எண்ணம் தவ்ஹீத்வாதிகளிடம் அழுத்தமாகப் பதிய வேண்டும். அவ்வாறு நினைப்பவர்கள் மட்டும்தான் தவ்ஹீத்வாதியாக இருக்க வேண்டும். அல்லாஹ் மட்டும்தான் பரிசுத்தமானவன் என்பதற்காகத்தான் சுபஹானல்லாஹ் என்ற வார்த்தையைச் சொல்கின்றோம்.
ஒருவர் மீது வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை என்பது இரவு நேரத்தில் விறகு தேடிச் செல்பவனின் நிலையைப் போன்றது, அதுவே ஏகத்துவத்திற்கு எதிரானது. ஒருவனுக்கு முன்னால் புகழ்பாடுவதும் அவர்களை வாழ்த்திப் பாடுவதும் அரசியல்வாதிகளின் பண்பு, தவிர்த்து ஏகத்துவவாதியின் பண்பு அல்ல! ஒருவர் தவறு செய்தால் அவரது தவறைச் சுட்டிக்காட்டி அவரை பாவ மன்னிப்பு தேட வைக்காமல் அவரை வரம்பு மீறி புகழ்ந்தால் அவர் மேலும் மேலும் தவறு செய்வதற்கு இது மிகச்சிறந்த தூண்டுகோலாக அமைந்து விடும்.
ஒருவரை வரம்பு மீறி புகழ்வது, அவன் தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் சொன்னார்கள், யார் வரம்பு மீறி புகழ்கின்றாரோ அவரின் முகத்தில் மண்ணை அள்ளி வீசுங்கள் என்று சொன்னார்கள். அதுவே நபியின் நடைமுறை என்றும் சொன்னார்கள்.
வரம்பு மீறி ஒருவரைப் புகழ்ந்து அவரது தவறை திருத்துவதற்கு பதிலாக அவருக்கு மேலும் ஊக்கம் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவரை விடச் சிறந்தவர் இந்த உலகத்தில் வேறு யாருமில்லை என்று சொல்வது ஒரு ஏகத்துவவாதியின் பண்பே அல்ல! எந்த தனிநபரோ, அல்லது எவ்வளவு பெரிய ஜமாஅத்தோ, யாராக இருந்தாலும் அவர்களிடம் தவறுகள் வரும். அதை சரிகாண்பதே ஏகத்துவவாதியின் பண்பாக இருக்கின்றது.
இன்றைய நிலையில் பேஸ்புக் என்பது மற்றவர்களின் குறைகளைப் பற்றி பேசுவதற்கும் அவர்களின் குறைகளைச் சொல்வதற்கும் மட்டும்தான் பயன்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் எத்தனையோ பொய்யான செய்திகளை நாம் படிக்காமல் கூட பார்வார்டு செய்யும் அவலநிலை நிகழ்ந்து வருகின்றது. நீங்கள் எந்த வார்த்தையை மொழிந்தாலும் அது அத்தனையும் அல்லாஹ்வால் கண்காணிக்கப்படுகின்றது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் பணியைச் செய்வதற்கு யார் எத்தனை இடையூறுகள் செய்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் பணியைச் செய்வோம். தாவா பணியை விட்டு விடலாமா என்று எண்ணும் அளவிற்கு சிலரின் விமர்சனங்கள் இருக்கின்றது. ஆனால் எதற்குமே ஏகத்துவவாதிகள் அஞ்சி விடக்கூடாது. இந்த சத்தியப் பிரச்சாரத்தில் எவ்விதமான தொய்வும் வந்து விடக்கூடாது. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதுதான் உண்மையான ஏகத்துவவாதிகளின் பண்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
திருக்குர்ஆன் மாநாடு ஏன்?
அதனைத்தொடர்ந்து மாநிலச் செயலாளர் அப்துல் கரீம், “திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு?” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில்.,
திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கானது மட்டும் என்ற பார்வை அதிகபட்ச முஸ்லிம்களிடம் இருக்கிறது. ஆனால் திருக்குர்ஆன் உலகத்தில் வாழும் அனைத்து சமுதாய மக்களுக்கும் வழிகாட்டியாகத்தான் திருக்குர்ஆனை இறைவன் இறக்கி வைத்துள்ளான். அதை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் முகமாகத்தான் நாம் திருக்குர்ஆன் மாநாட்டை அறிவித்துள்ளோம்.
திருக்குர்ஆன் என்பது ஏராளமான போதனைகளை உள்ளடக்கிய வேதம். இறைவேதமென்று சொல்லக்கூடிய புத்தகங்களிலே மனிதர்கள் செய்துள்ள மதிப்பீடுகளுக்கு நேர் மாறாக அமைந்திருந்தது, அதனால்தான் நாத்திகர்கள் தோன்றினார்கள். . இறைவேதத்தில் ஆபாசங்கள், அருவருப்புகள், முரண்பாடுகள் இருக்கவே கூடாது. வேதங்களும் என்று சொல்லும் புத்தகங்களில் பிறப்பின் அடிப்படையில் கூடிய பிரிவினைகள் அந்தப் புத்தகங்களில் இருந்ததால்தான் மக்கள் பலர் இறை நிராகரிப்பு கொள்கையே தோன்றியது.
மற்ற புத்தகங்கள் அனைத்தும் என்னை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்று என்னை ஆய்வு செய்யாதே என்று சொல்லிய போது, திருக்குர்ஆன் மட்டும் என்னை ஆய்வு செய் என்று சவால் விடுத்தது. திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை, முகம் சுழிக்கும் கருத்துகள் இல்லை. அல்லாஹ் அல்லாதவர்களிடம் இருந்து வந்திருந்தால் இதில் பல முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள், ஆனால் இது அல்லாஹ்விடம் இருந்து வந்ததால் இதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என திருக்குர்ஆன் அறிவிக்கிறது.
காலம் காலமாக மனித சமூகம் சந்திக்கின்ற பிரச்சினை தீண்டாமை. அறிவியல் வளர்ச்சியடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தீண்டாமை இல்லை என்று சொல்லவே முடியாது. சமீபத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற நிறுவனம் சார்பில் தமிழகத்தில் தீண்டாமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் 1870 கிராமங்களில் 78 வகையான தீண்டாமை வகைகள் இன்னமும் கிராமங்களில் நீடிப்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.
இரட்டக் குவளை முறை, தெருக்களில் நுழையத் தடை என பலவிதமான தீண்டாமைக் கொடுமைகள் இன்னமும் நிலவிக்கொண்டுதான் இருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நீரஜ்குமார் என்ற தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் தன்னுடைய வாகனத்தில் ஒரு தெருவழியாகச் சென்ற போது அவர் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டார். எவ்வளவு பெரிய வேலையில் நீ இருந்தாலும் கீழ் சாதிதான் என்று தாக்குகின்றார்கள்.
மத்தியப்பிரதேசம் மெரினா என்ற பகுதியில் சென்ற ஒரு தாழ்த்தப்பட்ட பெண்மணி அங்கிருந்த ஒரு உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு வீட்டில் இருந்த நாய்க்கு பிஸ்கட் வழங்குகின்றார். உடனே அங்கு வந்த வீட்டுக்காரர் அந்தப் பெண்ணை அடித்து துரத்தி விட்டு, அந்த நாயைக் கொன்று போடுகின்றான். பீஹாரில் முதலமைச்சராக இருந்த ஜித்தன்ராம் மன்ஜி ஒருமுறை அங்குள்ள ஒரு கோவிலுக்குச் சென்று வழிபடுகின்றார். அவர் தாழ்த்தப்பட்டவராக இருந்த காரணத்தால் கோவில் முழுவதையும் கழுவி சுத்தம் செய்கிறார்கள்.
ஆடுமாடுகள், நாய், பன்றிகள் செல்லும் தெருவிற்குள் தாழ்த்தப்பட்ட மனிதர்கள் வரக்கூடாது என்று தடுக்கிறார்கள். இதை விட பெரிய சமூகக் கொடுமை வேறென்ன இருக்கின்றது? தாழ்த்தப்பட்டவன் என்றால் பிறப்பால் தாழ்ந்தவன் என்று முடிவு செய்து வைத்துள்ளார்கள்.
கீழ்வெண்மனி பகுதியில் நடந்த வன்கொடுமையை இன்றைக்கும் டிசம்பர் 25 ஆம் தேதி நினைவுதினமாக கொண்டாடிக் கொண்டுள்ளார்களே! இதற்கெல்லாம் அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் தீண்டாமை ஒழிந்ததா? என்றால் இல்லவே இல்லை. தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் ஏட்டளவில் இருக்கின்றது.
ஆனால் திருக்குர்ஆன் சொல்கின்றது நீங்கள் ஒரு தாய் ஒரு தந்தைக்குப் பிறந்த பிள்ளைகள் என்று சொல்லி தீண்டாமையை அறவே ஒழிக்கின்றது. தீண்டாமை ஒழிப்பிற்கான அருமருந்து திருக்குர்ஆனில் இருக்கிறது என்று அழைப்பதற்காகத்தான் இந்த திருக்குர்ஆன் மாநாடு.
அடுத்து மிகப்பெரிய சவாலாக இருப்பது திருட்டு கொலை போன்ற சம்பவங்கள். இது அத்தனையையும் திருக்குர்ஆன் தடுக்கின்றது. இஸ்லாமிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் குற்றங்கள் முழுமையாகக் குறையும். திருடினால் கையை வெட்டு, கொலைக்கு கொலை என தண்டனை கொடுக்கும் திருக்குர்ஆன் சட்டத்தை அமுல்படுத்தினால் இந்த நாட்டில் குற்றங்களே இருக்காது.
விபச்சாரத்திற்கு சரியான தண்டனையை திருக்குர்ஆன் அறிவிக்கின்றது. கள்ளக்காதல் கொலைகளுக்கு இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தை அமுல்படுத்தினால் கள்ளக்காதல் விபச்சாரம் போன்றவைகள் அறவே குறையும். பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு கற்பை பேணச் சொல்கின்றது திருக்குர்ஆன்.
பின்பற்ற வேண்டியது திருக்குர்ஆனும் நபிகள் நாயகத்தின் போதனைகளையும் மட்டும்தான் என்று உரக்கச் சொல்வதற்காகவும், இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் யாரும் எந்த நபருக்காகவும் இல்லை, அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக மட்டும்தான் இருக்கிறோம் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்வதற்காகவும்தான், வருகின்ற ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விழுப்புரத்தில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்பட இருக்கின்றது. இதில் மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும்.,
இந்த அழைப்பு மாநாட்டிற்கு வந்து செல்வதற்காக மட்டுமல்ல! இந்த மாநாட்டினை முன்னிட்டு உங்களால் இயன்ற அளவிற்கு திருக்குர்ஆனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மீட்சி பெறுமா மீ-டூ இயக்கம்?
அதனைத்தொடர்ந்து மாநிலச் செயலாளர் கோவை.ரஹ்மத்துல்லாஹ், “மீட்சி பெறுமா மீ-டூ இயக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். முதிய பெண்கள் முதல் குழந்தைகள் உள்ளவர்கள் வரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
உறவினர்களாலும், பக்கத்து வீட்டுக்காரர்களாலும், பள்ளி ஆசிரியர்களாலும் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றார்கள். இந்த மீ-டூ இயக்கத்தை கையில் எடுத்து பேசக்கூடியவர்கள் யாரென்று பார்த்தால் அனைவருமே கூத்தாடி நடிகைகள்தான். அனைத்து விதமான பாலியல் சேட்டைகளுக்கும் காரணமாக இருப்பதே சினிமாதான்.
இந்தச் சமுதாயமே நாசக்கேடாகிப் போனதற்கு காரணமே இந்த கூத்தாடிகளின் தொழில்தான்.
சமூக வலைதளங்களில் வரும் செய்தி 2 நாட்களுக்கு பரபரப்பாக இருக்கும் அதன்பிறகு வேறு ஏதாவது செய்தி வந்தால் அது மறந்து விடும். சஹாரா ஊழலில் சிக்காமல் இருக்க 500/1000 ரூ பணம் செல்லாது என அறிவித்தார் மோடி. அதுபோல கர்நாடக மாநிலத்தில் 18 ஆண்டுகள் அங்கம் வகிக்கின்ற பெல்லாரி தொகுதியில் பாஜக படுதோல்வி அடைகின்றது. இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றியடைந்தது. அதை மறைக்கவே சர்க்கார் படத்தை பற்றி பேச வைத்துவிட்டார்கள்.
மீ-டூ இயக்கம் உனக்கு மட்டுமல்ல, எனக்கும்தான் என்று சாதாரணமாக பயணம் செல்கின்றது. நாடகங்கள், செல்போன், விளம்பரம் என அனைத்திலும் ஆபாசமும் அசிங்கமும் கலந்து விட்டது. மக்கள் மனதில் தவறான எண்ண ஓட்டங்களை இது ஏற்படுத்துகின்றது. ஆபாச வீடியோக்களை பார்த்து தன் தங்கையை பலாத்காரம் செய்ய நினைத்து அது கொலையில் சென்று முடிகின்றது. திண்டுக்கலில் ஒருவன் தன் மகளை பலாத்காரம் செய்திருக்கின்றான். இதையெல்லாம் தடுப்பதற்கு இஸ்லாம் சொல்லும் நடைமுறைப்படி வாழ்ந்தால் இதெல்லாம் ஒழிந்து போகும். இறையச்சத்தைக் கூட்டக் கூடிய வகையில் வாழ தொழுகை மிக அவசியம்.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை செய்யப்பட்டாள். பேஸ்புக்கில் தன்னைப் பற்றி அப்டேட் செய்து கொண்டே இருப்பாள், அவள் தனிமையில் இருப்பதாக சொன்னதும் அவள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். பேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் இன்றைய இளைஞர் சமுதாயத்தைக் கெடுக்கக்கூடியவை.
குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் என்னவென்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். பாலியல் தொடுதல் என்பதை அனைவருக்கும் புரிய வையுங்கள். எப்பொழுது பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கின்றதோ அப்போதே சட்டையைப் பிடியுங்கள். அதை விடுத்து தாமதப்படுத்துவதுதான் அவர்கள் உத்தம புருசனாக மாறி விடுவார்கள்.
நாம் ஒழுக்கச்சீலர்களாக ஒழுக்கமான பிள்ளைகளை உருவாக்க வேண்டும். நபி லுக்மான் அவர்கள் எப்படி தன் பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னார்களோ அதைப் போல நம் பிள்ளைகளிடமும் மனம் விட்டுப் பேசி அவர்களுக்கு புரியவைத்தால் நம் சமுதாயத்தை இதுபோன்ற சீண்டல்களில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பான். இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ஏ.சாகுல் நன்றியுரையாற்றினார். இந்தப் பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றித் தந்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
பொதுக்கூட்ட தீர்மானங்கள்
வடசென்னை மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களை மாநிலச் செயலாளர் அன்சாரி வாசித்தார். தீர்மானங்கள் வருமாறு.,
- முத்தலாக் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முஸ்லிம்களின் குடும்ப விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பீகாரில் முதியவர் ஜெய்னுல் அன்சாரி கழுத்தை அறுத்து தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதை இந்தப் பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பாஜக அரசு பதவியேற்ற பிறகுதான் இதுபோன்ற செயல்கள் அதிகம் நடக்கின்றது. இவைகளை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
- திருக்குர்ஆனை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் திருக்குர்ஆன் மாநாட்டில் வட சென்னை மாவட்டம் சார்பாக பல்லாயிரம் மக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை ஆளும் அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றித் தருமாறு இந்தப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கொசுத்தொல்லையால் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மாநகராட்சியை கேட்டுக் கொள்ளப்பட்டது.
- வியாபாரத்தளங்கள் அதிகமுள்ள பகுதியான மண்ணடியில் வாகன நிறுத்த இடமில்லாமல் சிரமப்படுகின்ற மக்களுக்கு சரியான தீர்வு ஏற்படுத்தித் தருவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மண்ணடி பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை மக்களுக்கு இடையூறாக இருப்பதால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது
- பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் எனவும் அதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு லக்னோவில் மசூதி கட்டித்தரப்படும் எனவும் பாஜக முன்னாள் எம்.பி ராம்விலாஸ் வேதாந்தி தெரிவித்துள்ள கருத்தை தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
இனி மண்ணடியில் இடம் இல்லை
வடசென்னை மாவட்டம் சார்பாக மண்ணடியில் நடத்தப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக அணிவகுத்தனர். குறிப்பாக பெண்கள் மிக மிக அதிகமாக இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு ஒதுக்கிய இருக்கை நிறைந்து போக, ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்கள் அமரவைக்கப்பட்டார்கள். ஆனாலும் பற்றாக்குறையாக இருந்தது. ஆண்கள் பலருக்கு தம்பு செட்டித் தெருவின் கடைசி முனை வரைக்கும் இருக்கைகள் போடப்பட்டிருந்தும் இடமில்லாமல் போகவே பல மக்கள் கடைசிவரைக்கும் நின்றவாறு பொதுக்கூட்டத்தைப் பார்த்தனர். அனைவராலும் கூட்டத்தை பார்க்க முடியாத காரணத்தால் பெரிய டிஜிட்டல் திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடையில் வைக்கப்பட்டது.
இதையெல்லாம் கண்ட அதிகாரிகள், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து, உங்கள் அமைப்பில் இருந்த மிக முக்கியமான தலைவரை நீக்கி விட்டீர்கள், அதனால் இந்தக் பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அவ்வளவாக வரமாட்டார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததை விட பல மடங்கு கூட்டம் வந்துள்ளது என்று தெரிவித்தார்.
இத்தனை காலம் அந்த குறிப்பிட்டத் தலைவருக்காகத்தான் கூட்டம் வருகிறது என்று நினைத்தோம், ஆனால் அவரை வெளியேற்றிய பிறகும் இவ்வளவு கூட்டம் வருகின்றது என்பது வியக்கத்தக்க விடயம் என்று சொன்னார்கள்.
மிக முக்கியமாக இனி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீங்கள் கூட்டம் நடத்தினால் கண்டிப்பாக மண்ணடியில் இடம் கிடைக்காது, ஏதாவது புறநகரில்தான் இனிமேல் நீங்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் சொன்னார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்திற்கு இறைவனின் அருளால் மிக பிரம்மாண்டமாக மக்கள் திரண்டுள்ளார்கள். இதுவரை மண்ணடியில் வேறெந்த இயக்கமும்., ஏன்? தவ்ஹீத் ஜமாஅத் கூட இவ்வளவு பெரிய மக்கள் திரளை இதுவரை கூட்டவில்லை என்பது ஹைலைட். எல்லாப் புகழும் இறைவனுக்கு மட்டுமே!
நொறுக்கப்பட்ட அவதூறுகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமீப காலத்தில் பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டவர்கள் தங்களின் தவறுகளை மறைக்க கொஞ்சம் கூட இறையச்சம் இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை இன்றுவரை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் சத்தியம் இருப்பதால் மட்டும்தான் அல்லாஹ் இந்த ஜமாஅத்திற்கு அருள் புரிகின்றான். அதனால்தான் இத்தனை அவதூறுகளைத் தாண்டியும் மக்கள் இந்த ஜமாத்தினை நம்புகின்றார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சத்தியத்தில் இருக்கும் வரை அல்லாஹ் பாதுகாப்பான்.
மரண அடி கொடுத்த மண்ணடி பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு தனிநபரை தக்லீத் செய்கிறது என்பது பொதுவான வாதமாகும். அவர் இல்லாவிட்டால் தவ்ஹீத் ஜமாஅத் அழிந்து போகும் என்று நினைத்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தினர் பின்பற்றுவது தனிநபரைத்தான் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.
ஆனால் என்ன நடந்தது? எந்த தனி நபர் இல்லாவிட்டால் இந்த ஜமாஅத் அழியும் என்று சொன்னார்களோ அவர் வெளியே போன பிறகும் தவ்ஹீத் ஜமாஅத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை.
தனிநபர் வெளியே போய் விட்டால் ஜமாஅத் இல்லையென்று சொன்னவர்களுக்கு மரண அடி கொடுத்துள்ளது மண்ணடி பொதுக்கூட்டம். அந்தத் தலைவர் இந்த ஜமாஅத்திற்குள் இருக்கும் போது இந்த ஜமாஅத் தங்கம் வைரம் என்று பாராட்டினார். ஆனால் அவர் தவறு செய்து நீக்கப்பட்ட பிறகு ஜமாஅத் மீது ஆயிரம் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார்.
ஆனால் உண்மை என்னவென்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இறையச்சம் மிகுந்த நிர்வாகிகள் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது வைக்கப்படும் அத்தனை அவதூறுகளையும் புஸ்வாணமாக்கி தனிநபர் தக்லீதை அடித்து நொறுக்கி விட்டது இந்தப் பொதுக்கூட்டம். அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காகவும் இந்த ஜமாஅத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை மண்ணடி பொதுக்கூட்டம் உண்மைப்படுத்தி விட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அல்லாஹ்வின் மறைமுக அருள்!
இறைவனின் பாதுகாப்பு இந்த ஜமாஅத்திற்கு எப்போதும் உள்ளது என்பதற்கு முக்கியமான ஒரு ஆதாரம் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் திமுகவை ஆதரித்தது, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு ஆணையம் அமைத்த காரணத்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தது.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஜெயலலிதாவிடம் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை வாங்கிக் கொண்டு அதிமுகவை ஆதரித்து விட்டார்கள் என்று கடுமையான அவதூறுகள் பரவின. ஆனால் அதிமுக அரசு, பாஜகவை எதிர்க்கவில்லை என்ற காரணத்திற்காக தனது ஆதரவை வாபஸ் பெற்று திமுகவுக்கு ஆதரவைக் கொடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்.
பெட்டி பெட்டியாக பணம் வாங்கியிருந்தால் இது சாத்தியமாக இருக்குமா? அதுவும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் அதுபோல செய்து விடமுடியுமா? என்பதை மக்களே புரிந்து கொண்டார்கள். அவதூறு சொன்னவர்கள் தலை குனிந்தார்கள்.
அதுபோலத்தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் குற்றம் நிருபிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களின் அவதூறுகளையும் இறைவன் அடித்து நொறுக்குகின்றான். அதற்கு உதாரணம் இந்த மண்ணடி பொதுக்கூட்டம்.
எந்த தனி நபருக்காகவும் இந்த ஜமாஅத்தில் உறுப்பினர்கள் இருக்கவில்லை என்பதையும், ஆயிரம் பொய் அவதூறுகளைச் சொன்னாலும் இந்த ஜமாஅத்தில் சத்தியம் இருக்கும் வரை இறைவனின் பாதுகாப்பு நிலைத்திருக்கும் என்பதற்கும் சான்றாகவே மண்ணடி பொதுக்கூட்டம் அமைந்து விட்டது.
சொல்லப்போனால் குறிப்பிட்ட நபர் இந்த ஜமாஅத்தில் இருக்கும் போது கூட இவ்வளவு மக்கள் திரளவில்லை இப்போது இவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள் என்றால், அனைவரும் கொள்கைக்காக வந்த மக்களே தவிர்த்து யாருக்காகவும் எவருக்காகவும் வரவில்லை என்பது தெளிவாகி விட்டது. கொள்கை மட்டுமே தலைவன் என்பதை உரக்கச் சொல்லியது மண்ணடி பொதுக்கூட்டம்.