சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் – திருச்சி

ஜனநாயகத்தை பாதுகாத்திட படை திரண்ட முஸ்லிம்கள்

சர்வாதிகாரத்திற்கு எதிராக சமூகப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

இந்திய நாட்டில் தொடர்ச்சியாக நடந்தேறும் சர்வாதிகாரப் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் வகையில் நடந்தேறும் இந்த நிகழ்வுகள் ஒன்றல்ல இரண்டல்ல. இதை அனைத்தையும் மக்களுக்கு கொண்டு சேர்த்து விழிப்புணர்வு  ஏற்படுத்துவதற்காகவும், நம் நாட்டின் ஜனநாயகம் சிதைக்கப்படும் இச்சூழலில் சர்வாதிகாரப் போக்கை கையில் எடுத்திருக்கும் சனாதன வாதிகளை சரியான முறையில் அடையாளப்படுத்துவதற்கும், வேண்டி “தலைதூக்கும் சர்வாதிகாரம்! அழிவின் விளிம்பில் ஜனநாயகம்!” என்கிற முழக்கத்துடன்  சமூக பாதுகாப்பு பொதுக்கூட்ட பணிகள் துவங்கப்பட்டன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக இந்த பொதுக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளிவந்தவுடன், திருச்சி மாவட்டம் முழுவதும் இதற்கான பிரச்சாரப் பணிகள் மிக வீரியமாக செயல்படுத்தப்பட்டன.

கிளைகள் தோறும் பெண்கள் தஃவா குழுக்களின் மூலம் காலை முதல் மாலை வரை ஒவ்வொரு வீடுகளாக தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்கூட்ட செய்திகளை பொது மக்களிடம் கொண்டு சேர்த்தனர். தவ்ஹீத் பிரச்சார வீராங்கனைகள். அதுமட்டுமல்லாது மக்தப் மதரஸா மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இப்பொதுக்கூட்டம் குறித்த செய்திகளை மக்களிடம் இன்னும் ஒருபடி மேலாக எடுத்துச் சென்றது.

இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருச்சி சுற்றியுள்ள பல லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்ததுதான் இந்த பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றியதில் மிகப் பெரும் பங்காற்றியது.

பொதுக்கூட்ட ஏற்பாடுகளும் ஏற்பட்ட சுவாரஸ்யங்களும்

திருச்சியின் மிக முக்கியமான பகுதி பாலக்கரை, அப்பகுதியில் இப்பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் பரவலாக அனைத்து மக்களுக்கும் பொதுக்கூட்டத்தில் பேசப்படும்  செய்திகளை சேர்ப்பது மிக இலகுவானது.

பொதுக்கூட்டம் அறிவித்த தேதியில் இருந்து குறுகிய நாட்களே இருந்த போதும் இடம் அமைப்பு, செய்ய வேண்டிய ஏற்பாடுகள், கலந்து கொள்ளும் மக்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் என அனைத்தையும் மிக சிறப்பாக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தண்ணீர் ஏற்பாடு, குழந்தைகளுக்கான பால் விநியோகம், கழிவறை போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

சரியாக 5:40 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சியில் பெண் ஆலிமா அவர்கள் பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அன்றாட வாழ்க்கையில் மக்கள் செய்து வரும் பித்அத்கள் குறித்து குறிப்பிட்டு அது குறித்த மார்க்கத்தின் எச்சரிக்கையை விளக்கினார்கள்.

சோதனையை சாதனையாக்க சமகால சூழழுக்கான உரை

அதைத் தொடர்ந்து மாநிலப் பேச்சாளர் சகோதரர் M.I.சுலைமான் அவர்கள் சோதனையும் இறுதி வெற்றியும் என்ற தலைப்பில் தற்காலத்தில் முஸ்லிம்கள் சந்திக்கக்கூடிய சோதனைகளையும் அந்தச் சோதனைகளுக்குப் பின்னர் கிடைக்கும் வெற்றிகளையும் விளக்கமாக பேசினார்.

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப சோதனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக அழகான முறையில் உணர்த்தினார்கள்.

நாளைய சமுதாயமே…!

பின்னர் மாநில துணைத் தலைவர் சகோதரர் இ.பாருக் அவர்கள் நாளைய சமுதாயமே விழித்துக்கொள் என்ற தலைப்பின்கீழ் உரையாற்றினார்கள்.

இஸ்லாமிய சமுதாயம் எந்த நிலையில் இருந்தது? இன்றைக்கு அதனுடைய நிலை என்ன? என்பதை கல்வி, பொருளாதாரம், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் வேறுபாடுகளை புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.

எதிர்கால சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்கிற செய்தியை இன்றைக்கு நம் சமுதாயத்தில் நடக்கும் விழிப்புணர்வற்ற சில நிகழ்வுகளுடன் வேறுபடுத்தி விளக்கி பேசியது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.

அடாத கன மழையிலும் விடாத நெஞ்சுறுதி!

எதிர்கால சமுதாயத்தின் விழிப்புணர்வு உரையை முடிக்கும் தருணத்தில் மழைத் துளிகள் எட்டிப்பார்த்தன.

அல்லாஹ்வின் அருள்மழை பொழியத் தொடங்கியது பொதுக்கூட்ட களத்தில் தூரளாக ஆரம்பித்தது கனமழையாக விழத்தொடங்கியது.

மற்ற அரசியல் கூட்டங்கள் பார்த்ததுண்டு. மழையால் நாற்காலிகளை தவிர வேறு யாருமே காண இயலாத சூழல் நிலவியிருக்கும். கனமழையால் நாற்காலிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

ஆனால் இங்கேயும் அதே நிலைதான். ஆனால் அதில் சில மாற்றங்கள் உள்ளன. கன மழையிலும் தலைமேல் நாற்காலிகளை உயர்த்தி அடாத கன மழையிலும் விடாத நெஞ்சுறுதியுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலையாமல் பொதுக்கூட்ட களத்திலேயே நின்றிருந்தது பார்ப்பவர்களின் மனதை உருகச் செய்தது.

குழந்தைகள் வயதான பெண்கள், ஆண்கள் என அனைவருமே நாற்காலிக் குடைகளில் நகராமல் நிமிர்ந்து நின்றது எத்தகைய சூழல் வந்தாலும் நம் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்திட சர்வாதிகாரத்தை வேரறுத்திட உறுதியுடன் இருப்போம் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தியது.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பொழிந்து மழைத் தூறலாக வந்தவுடன் மெல்ல மெல்ல பொதுக்கூட்ட களம் பழைய நிலைக்கு திரும்பியது.

சுதந்திரத்திற்கு பாடுபட்ட முஸ்லிம்களின் இன்றைய நிலை!

பத்திரிகையாளர் சந்திப்பை தொடர்ந்து மாநிலத் தலைவர் சகோதரர் எம்எஸ் சுலைமான் அவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட முஸ்லிம்களுடைய இன்றைய நிலை குறித்து உரை நிகழ்த்தினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அது குறித்த விரிவான விளக்கங்கள் குறித்துப் பேசினார்.

இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகள், அநியாயங்கள், அத்துமீறல்கள் போன்றவற்றைக் கண்டு இஸ்லாமிய சமுதாயம் ஒருபோதும் அஞ்சாது ஜனநாயக வழியில் நின்று போராட்டக் களத்தின் மூலமாக அவை அனைத்தையும் முறியடிக்கும் என்பதை தெரிவித்து, மனதில் எழுந்த ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திப் பேசினார்.

ஹிந்துமத பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சங்பரிவார இந்துத்துவக் கூட்டம் இந்து மதத்தின் சிறப்புகளை நன்மைகளைச் சொல்லி பிற மதத்தவர்களை அழைத்ததை பார்த்ததுண்டா? இன்றைக்கு மற்ற மதத்தவர்கள் அவர்களுடைய மதத்தின் கோட்பாடுகளை சொல்லி மக்களை அழைப்பது போல இந்துத்துவா கூட்டம் அழைக்காமல் இந்துக்களுக்கு எதிராகவே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியதை மேற்கோள்காட்டி வெகுஜன ஹிந்து மக்களே ஒருநாள் இந்த சங்பரிவார இந்துத்துவா கூட்டங்களின் பொய் புரட்டுகளை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடிய நாள் வரும் என்று சகோதரர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் பேசினார்கள்.

அத்துமீறும் அதிகார வர்க்கத்திற்கு அரசியலைமைப்பு குறித்த பாடம்

இறுதியாக மாநில பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் கரீம் அவர்கள் அரசியலமைப்பு சட்டமும் அத்துமீறும் அதிகாரவர்க்கமும் என்ற தலைப்பின்கீழ் உரை நிகழ்த்தினார்கள்.

அதிகார வர்க்கத்தில் அமர்ந்ததில் இருந்து ஆளும் பாஜக அரசின் அநியாயங்களை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விளக்கிப் பேசினார்.

மக்களின் எழுத்துரிமை, பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை பாஜக அரசு நசுக்கி வருகிறது. எதிர்த்து கேள்வி கேட்பவர்களை UAPA சட்டத்தின் மூலம் சிறையில் தள்ளுவது.

குஜராத் கலவர வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்படுவது, என பாஜக அரசின் தொடர்ச்சியான சர்வாதிகார போக்கின் நிலையை விளக்கினார்.

சர்வாதிகார போக்கை தொடர்ந்து கையிலெடுத்து வந்தால் அண்டை நாடான இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் இந்திய நாட்டிற்கும் ஏற்படும் என்று தெரிவித்தார்.

பாசிச பாஜக கும்பல் அரசியல் சாசன சட்டம் மீது கைவைக்கிறார்கள். இந்தியர்கள் இதை ஒருபோதும் வேடிக்கை பார்க்கக்கூடாது.

ஆங்கிலேயர்கள் எப்படி இந்திய நாட்டின் வளங்களை சூறையாடும் போது எப்படி இந்தியர்கள் பொங்கி எழுந்தோமோ! அதேபோல் அரசியல் சாசன சட்டத்தை சங்பரிவாரக் கும்பல் தூக்கி எறிவதற்கு முற்பட்டால் அதை பாதுகாப்பதற்கு நாம் முன் வரவேண்டும்.

ஆங்கிலேயர்களை எப்படி அகிம்சா வழியில் நமது முன்னோர்கள் விரட்டியடித்தார்களோ, அதே வழிமுறையில் ஜனநாயக வழி நின்று சங்பரிவாரக் கும்பலை விரட்டியடிப்போம்.

இந்திய முஸ்லிம்கள், ஜனநாயகவாதிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஆக்கப்பூர்வமான எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர் வருகின்ற தேர்தலிலே சரியான வியூகம் அமைத்து பாஜகவை எதிர்கொள்வோமேயானால் குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படும், காஷ்மீர் இழந்த உரிமைகள் மீண்டும் காஷ்மீருக்கு கிடைக்கும், சிஏஏ என்று முஸ்லிம்களை அச்சுறுத்த முடியாது, முஸ்லிம்கள் இழந்த பாபர் மஸ்ஜித் நிலம் திரும்பக் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட நிலை விரைவில் உருவாகியே தீரும் என மாநில பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் கரீம் அவர்கள் பேசினார்.

குர்ஆன் ஆண்ட்ராய்டு ஆப் வெளியீடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இறுதியாக இந்த சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

மாநிலத் தலைவர் சகோதரர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் வெளியிட திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

பலநாட்கள் எதிர்பார்ப்புடன் இருந்த குர்ஆன் தமிழாக்கத்தின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இப்பொதுக்கூட்டம் வாயிலாக வெளியானது கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here