நாள் : 12.12.2021
இடம் : கோவை
பொதுக்குழு தீர்மானங்கள்
- கொள்கை
அல்குர்ஆன், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான நபிமொழி ஆகிய இரண்டு மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகும்.
இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக ஷிர்க், பித்அத் மற்றும் மூட நம்பிக்கைகளில் முஸ்லிம்களில் சிலர் மூழ்கி கிடக்கின்றனர்.
தர்கா, மவ்லீத், மத்ஹபு போன்ற அனைத்து அனாச்சாரங்களை விட்டும் முஸ்லிம்கள் விலகும் வரை நம்முடைய ஏகத்துவ பிரச்சாரம் ஓயாது என்பதால் இன்ஷா அல்லாஹ் இன்னும் வீரியமாக நம்முடைய ஏகத்துவ பிரச்சாரத்தை கொண்டு செல்ல இம் மாநில பொதுக்குழு வாயிலாக உறுதி ஏற்போம்.
மாநில தலைமை சார்பாக பித்அத் ஒழிப்பு மாநாடு அறிவிப்பு செய்யபட்டுள்ளது.
இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பட்டி தொட்டி எங்கும் இந்த பிரச்சாரத்தை வீரியமாக கொண்டு செல்ல இம் மாநில பொதுக்குழு உறுதி ஏற்கிறது. - சி ஏ ஏ
இந்திய நாட்டை உருவாக்குவதற்கும் , இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது.
அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது.
இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயன்றால் இச்சட்டத்திற்கு எதிராக தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதை இப்பொதுக்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.. - தமிழகத்தில் இட ஒதுக்கீடு
கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார் அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர்
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். - முஸ்லிம் சிறைவாசிகள்
இந்தியாவின் தண்டனை சட்டத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டனை கொடுக்க பட்டு வருகிறார்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அமைதியை விரும்பும் யாரும் மாற்று கருத்து கொள்ள மாட்டார்கள்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் அவர்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்று சொன்னார். தற்போது விடுவிக்க இயலாத அரசாணை வெளிவந்துள்ளது.
குற்றவாளிகள் விடுதலையில் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்ட கூடாது என்றும், இந்த அரசாணையை திருத்தி முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு இம் மாநில பொதுக்குழு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது. - தமிழக அரசுக்கு நன்றி
கருப்பு சட்டமான சிஏஏ விற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு மனதார பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது - புதுவையில் இட ஒதுக்கீடு
பாண்டிச்சேரி மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 6.1 சதவீத விழுக்காடு இடஒதுக்கீட்டு கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்ற படாமல் உள்ளது. உடனடியாக அதை நிறைவேற்றி தரும்படி பாண்டிச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது. - விலை வாசி உயர்வு
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய பாசிச பாஜக அரசு விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி, பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் ஒன்றிய பாசிச பாஜக அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநில பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது. - பொதுத் துறை நிறுவனம்
தற்போது மத்தியில் ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசு, அரசுக்கு சொந்தமான, அதிக வருவாயை ஈட்டித்தருகின்ற தங்க முட்டையிடும் வாத்துக்களைப் போன்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறது. இரயில்வே துறை, விமான நிலையங்கள் என்று வரிசையாக இவர்களின் இத்தாரை வார்ப்பு தொடர்கின்றது. இதை இம் மாநில பொதுக்குழு வன்மையாக கண்டிக்கின்றது. - திருமண பதிவு சான்றிதழ்
முஸ்லிம்கள் திருமண சான்றிதழ் பெறுவதில் சில குளறுபடிகள் உள்ளது. மாவட்ட காஜிகளிடம் சென்று அவர்களிடம் காத்து கிடக்கும் நிலை உள்ளது. மாவட்ட காஜிகளாக இருப்பவர்கள் அவர்கள் சார்ந்த ஜமாஅத்திற்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள். இஸ்லாமிய பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வைக்கும் திருமணத்திற்கு சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கலை தீர்த்து வைக்க ஆவண செய்யுமாறு தமிழக அரசை இப்பொதுக்குழு வாயிலாக கேட்டு கொள்கிறோம். - வார்டு மறு சீரமைப்பு
கடையநல்லூர், காயல்பட்டிணம், கீழக்கரை, மேலப்பாளையம், ஏர்வாடி உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் வார்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு ஒட்டு மொத்த பிரதிநிதித்துவமே பாதிக்கப்படும் சூழல் நேர்ந்துள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கு முன் தமிழக முதல்வர் இதை சரிசெய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது. - சென்னையில் ஹஜ் பயணம்
தமிழகத்தில் இருந்து ஹஜ் செல்லும் பயணிகள் கேரள மாநிலத்தின் கொச்சின், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் சென்று அல்லது வட மாநிலங்களுக்கு சென்றுதான் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயண ஏற்பாட்டை செய்ய ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைக்க வில்லை என்று பாராளுமன்றத்தில் சொல்லபட்ட நிலையில், அதை மறுத்து தமிழக அரசு கோரிக்கை வைத்த ஆதாரங்களை சமர்பித்துள்ளனர்.
தமிழக முஸ்லிம்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்வதற்காக வீரியமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இம் மாநில பொதுக்குழு கேட்டு கொள்கிறது.