4வது மாநிலப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 4வது மாநிலப் பொதுக்குழு 

நாள் : 05.08.2007

இடம் : சாத்தான்குளம் நாடார் உறவின் முறை மஹால், பேகம்பூர், திண்டுக்கல்

தீர்மானங்கள்:

இட ஒதுக்கீடு தொடர்பாக:

1. கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகின்றது. இதற்கென பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. அதன் ஒரு கட்டமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் கடந்த ஜூலை 4 அன்று மாபெரும் சிறை நிரப்புப் போராட்டத்தை நடத்தியது. இதற்குப் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாததை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதே நிலை தொடருமானால் வெகு விரைவில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துவது எனவும் அதற்கான தேதியை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலத் தலைமைக்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

2. ஜூலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய சிறை நிரப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினர் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் இப்பொதுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் அனைத்தும் கடந்த தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தன. தற்போது இந்தக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசாங்க ரீதியில் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், மாநாடுகள் நடத்தி முஸ்லிம்களை ஏமாற்றி வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நிலை நீடித்தால் இந்தக் கட்சிகளை முஸ்லிம்கள் வரும் தேர்தலில் புறக்கணிக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றது.

4. முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு அளித்த ஆந்திர மாநில காங்கிரஸ் அரசாங்கத்தையும், முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களையும் இப்பொதுக்குழு பாராட்டுகின்றது.

பாபர் மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக:

5. கோவை குண்டு வெடிப்பு வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு போன்ற வழக்குகள் அனைத்தும் விசாரணை முடிந்து தீர்ப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பாபர் மஸ்ஜித் இடிப்பு தொடர்பான வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் இருந்து வருவதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
15 ஆண்டுகளாக நீடித்து வரும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு விசாரணையை விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

6. பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும், பாபர் மஸ்ஜித் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரியும், மஸ்ஜிதை இடித்த சங்பரிவார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக:
5. ஆந்திரா மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களே குற்றவாளிகள் என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கோயிலில் குண்டு வெடித்தாலும், பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நடந்தாலும் முஸ்லிம்கள் மீதே குற்றம் சுமத்தும் போக்கைக் கைவிட்டு, பள்ளிவாசல் குண்டு வெடிப்பு தொடர்பாகப் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று ஆந்திர அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக:
6. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அப்துல் நாஸர் மஃதானி உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கும், தண்டனைக் காலத்தை விட அதிகமான காலம் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்களுக்குக் கூட வேலை வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு, சுய தொழில் தொடங்கும் வகையில் கணிசமான நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

8. கோவை குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சொத்துச் சேதம், உயிரிழப்பு ஆகியவற்றுக்கு காவல்துறை அதிகாரிகளின் பாரபட்சமான போக்கே காரணம் என்று இப்பொதுக்குழு கருதுகின்றது. கலவரங்களுக்கும் உயிர்ச் சேதங்களுக்கும் காரணமான இத்தகைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

9. குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையிலிருந்து வெளியாகும் நிலையில், குண்டு வெடிப்புக்குத் தொடர்பில்லாத, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குணங்குடி அனீபா அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக:
10. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கியது போன்று, 1993ல் மும்பை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 900 பேரைக் கொன்று குவிப்பதற்குக் காரணமானவர்கள் என்று கிருஷ்ணா கமிஷனால் கண்டறியப்பட்ட 31 அதிகாரிகளுக்கும், மற்றும் கலவரத்திற்குக் காரணமான சங்பரிவார்களுக்கும் உரிய தண்டனை வழங்காமல் காலம் தாழ்த்துவதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் மேற்படி குற்றவாளிகளுக்கு உடனடியாக அதிகப்பட்சத் தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

துணை ஜனாதிபதி தேர்தல்:
11. துணை ஜனாதிபதி தேர்தலில் டாக்டர் ஹமீத் அன்சாரி அவர்களை வேட்பாளராக அறிவித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை இப்பொதுக்குழு பாராட்டுகிறது.
இராக் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புகள் தொடர்பாக:

13. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இராக்கை ஆக்கிரமித்து, அங்குள்ள அப்பாவி மக்களை அமெரிக்க, பிரிட்டானிய படைகள் அன்றாடம் கொன்று குவித்து வருகின்றது. அதன் உச்சக்கட்டமாக முஸ்லிம்களின் பெருநாளன்று இராக் அதிபர் சதாம் ஹுசைனைப் படுகொலை செய்தது. சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் நடத்தி வரும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை உடனே நிறுத்திக் கொள்வதுடன், உடனடியாக இந்தப் படைகள் இராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

14. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அங்குள்ள அப்பாவி மக்களை தினந்தோறும் கொன்று குவித்து வரும் மனித குல விரோதியான சீயோனிஸ இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக அரபு நாடுகள் ஒன்றிணைந்து போராடி, பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
ஆஸ்திரேலியாவின் மனித உரிமை மீறலைக் கண்டித்து:

15. பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் எந்தக் குற்றமும் செய்யாத இந்திய டாக்டர் ஹனீஃப் அவர்களை பயங்கரவாத வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலிய அரசாங்கம் கைது செய்தது. டாக்டர் ஹனீஃப் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று நீதிமன்றம் கூறிய பின்னரும் அவரது விசாவை ரத்து செய்து, தீவிரவாதி போல் நடத்திய ஆஸ்திரேலிய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here