22வது மாநிலப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 22வது மாநிலப் பொதுக்குழு 

நாள் : 12.12.2021

இடம் : ஆதித்யா கன்வென்சன் செண்டர், கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 22வது மாநிலப் பொதுக்குழு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது.

காலை 08:30 மணிக்கு அழைப்பிதழ் சரிபார்த்து வருகைப்பதிவு செய்யும் பணி துவங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி கௌன்டர்கள் திறக்கப்பட்டு முறையாக அழைப்பிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பொதுக்குழு வளாகத்திற்குள் நுழைவதற்கான பிரத்யோக அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் ஆர்வத்தோடு மக்கள் கலந்து கொண்டனர்.

இனிதான துவக்கம்

காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியை மாநில மேலான்மைக்குழு தலைவர் எம்.எஸ். சுலைமான் அவர்கள் தலைமை ஏற்று நடத்தத் துவங்கினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வின் முதல் நிகழ்வாக மாநில துணைப் பொதுச்செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் சுய பரிசோதனை எனும் தலைப்பில் தவ்ஹீத் கண்ட எழுச்சியும், அதற்காக சந்தித்த எதிர்ப்பும், அந்தச் சூழலில் நம்மிடத்தில் இருக்க வேண்டிய உறுதியையும் விளக்கி ஆற்றிய உரை மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலாண்மைக் குழு தலைவர் உரை

மேலாண்மைக் குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் மேலாண்மைக்குழு அறிக்கையை தாக்கல் செய்தார்கள். இதில் கடும் இக்கட்டான காலத்தில் பொறுப்பேற்ற இந்த நிர்வாகம், கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளையும், எதிரிகளின் பல சூழ்ச்சிகளையும், ஜமாத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட பல அவதூறுகளையும், மனதைக்கிழித்து ரணமாக்கும் பல விதமான விமர்சனங்களையும் துணிவோடும், இறைவனின் துணையோடும்  நிதானத்தோடும் அர்ப்பணிப்போடும் அசராமல் எதிர்கொண்டு இந்தச் சத்தியப் பிரச்சாரத்தை வீரிமாகச் செய்ததையும், நிர்வாக ரீதியாக மேலாண்மைக்குழுவால் சொல்லப்பட்ட ஆலோசனைகளை ஏற்று சிறப்பாக இந்தப் பதவிக்காலத்தை பக்குவமாய் நிறைவேற்றியமைக்கான கூலியை வல்ல இறைவனிடம் இறைஞ்சி தனது அறிக்கையை பொதுக்குழுவில் சமர்ப்பித்தார்.

தணிக்கைக் குழு அறிக்கை

தணிக்கைக் குழு தலைவர் பெங்களூரு கனி அவர்கள் தணிக்கை குழுவின் மூலம் தணிக்கை செய்த இந்த நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகளில், கணக்கு வழக்குகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளதையும், பொருளாதார கணக்குப் பராமரிப்பிறகாக பொருளாளரோடு மற்றுமொரு மாநில செயலாளரை உதவியாளராக நியமிக்கும் நடைமுறையை தொடர்ந்து செயல்படுத்துவது மற்றும் நிர்வாக செலவீனங்களுக்கென ஆண்டிற்கு இரண்டு ஜும்ஆ வசூல்களை பெற்றுக்கொள்வது போன்ற தணிக்கை குழுவின் பரிந்துரையை நடைமுறைப் படுத்தியதற்காக நன்றி தெரிவித்தும் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

வரவு செலவு அறிக்கை

எத்தனையோ அவதூறுகள் பொருளாதரக் குற்றச்சாட்டுகள், திருட்டுப் பட்டங்கள் இவை அனைத்தையும் உடைத்துத் தரைமட்டமாக்கும் விதத்தில் இறைவனின் உதவியால் இந்த ஜமாஅத் பொருளாதர விஷயத்தில் எவ்வளவு கவனமாகவும்,கடுமையாகவும் கையாள்கிறது என்பதை உணர்த்தும் விதத்தில் மாநில பொருளாளர் மயிலை.அப்துர்ரஹீம் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையினை பொதுக்குழுவில் சமர்ப்பித்தார்.

 அதிகமான விளக்கங்களோடும் கூடுதல் தகவல்களோடும்,  ஒவ்வொன்றின் வரவு செலவு விபரங்களை ஒளித்திரை வாயிலாக கூடுதல் நேரம் ஒதுக்கி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார். இந்த நிகழ்வு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் புத்துணர்ச்சியையும் வெளிப்படுத்தியது.

அல்குர்ஆன் தமிழாக்கம் வெளியீடு

ஜமாஅத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் மக்கள் மத்தியில் திருக்குர்ஆன் தமிழாக்கம் குறித்த எதிர்பார்ப்பும், ஆவலும் அதிகரித்தும் வந்தது. இதை மக்கள் மத்தியில் எழுந்த கேள்விகளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இதனை நிறைவேற்றும் விதமாக பல கட்டப் பணிகள் நடைபெற்று இறுதியாக புதுப்பொலிவுடன் திருக்குர்ஆன் தமிழாக்கம் பொதுக்குழு மேடையில் வெளியிடப்பட்ட நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

தடைகளைத் தகர்த்த ஆண்டறிக்கை

ஏகத்துவக் கொள்கையை அடிப்படை நாதமாக முழங்கும் இந்த ஜமாஅத் ஆரம்ப காலத்திலிருந்தே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வளர்க்கப் பட்டிருந்தாலும், கொள்கைப் பகைவர்களைவிட கொடிய பகைவர்களால் நமது கவனத்தையும், நமது பணிகளையும் முடக்குவதற்காக பல சூழ்ச்சிகளை சந்தித்த கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து சூழ்ச்சிகளையும் அல்லாஹ்வின் உதவியால் முறியடித்து நாம் மேற்கொண்ட இந்த இரண்டாண்டுகளுக்கான செயல்பாடுகளை மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது அவர்கள் சமர்ப்பித்தார்.

பல்லாயிரக்கணக்கான மெகாபோன் பிரச்சாரங்கள், லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், சொல்லி முடியாத ஆண்கள் மற்றும் பெண்கள் பயான்கள், வியந்து பார்க்கும் அவசர இரத்த தானங்கள், மலைப்பைத் தந்த மக்தப் மதரசாக்கள், புத்துணர்ச்சி தரும் தர்பியாக்கள், அதிரடியாய் வாங்கப்பட்ட பல ஆம்புலன்ஸ்கள், அசாதாரண சூழலில் மேற்கொள்ளப் பட்ட கொரோனா நிவாரணப் பணிகள், மனித நேயத்தின் உச்சமாய் கொரோனா உடல் அடக்க சேவைகள், அடுத்தடுத்த போராட்டங்கள், இந்தியாவை உலுக்கிய பிரம்மாண்ட பேரணி, உரிமைக்காக முழங்கிய அடுக்கடுக்கான சிகிகி போராட்டங்கள் என செயல்பாடுகளின் எண்ணிக்கையை சொல்லச்சொல்ல மக்கள் தங்கள் இருக்கைகளின் நுனிக்கு வந்து உன்னிப்பாய் கவனிக்கத் துவங்கினார்கள்.

இத்தனை சோதனையான காலகட்டத்திலும் ஏகத்துவத்தை உயிர்மூச்சாய் ஏற்று பயணிக்கும் ஏகத்துவச் சொந்தங்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், சிகிகி போராட்டக் களத்தில் நமது மக்கள் ஆற்றிய பெரும் பங்கும், மாநில தலைமை அலுவலகத்திற்கு ஒரு பிரச்சனை என வரும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டு மொத்தமாய் தமிழகம் முழுவதும் வீதிக்கு வந்து அனைவரையும் விழி உயர்த்திப் பார்க்கச்செய்த ஏகத்துவப் பட்டாளத்தின் போர்க்குணத்தையும் எடுத்துச் சொன்ன விதம் பொதுக்குழு உறுப்பினர்களின் உள்ளத்தில் பெரும் புத்துணர்ச்சியைப் பாய்ச்சியது.

நிர்வாகத் தேர்வு

பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வாக புதிய மாநில நிர்வாக தேர்வு நடைபெற்றது. மேலாண்மைக்குழு தலைவர் எம்.எஸ். சுலைமான் அவர்கள் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துந்நாசர் அவர்களை தேர்தல் அதிகாரியாக நியமித்தார். இவருக்கு உதவியாக மேலாண்மைக்குழு உறுப்பினர் இருவர் உடனிருந்தனர். முன்னாள் நிர்வாகம் கலைக்கப்பட்டதால் அனைத்து மாநில நிர்வாகிகளும் மேடையிலிருந்து கீழே இறங்கினார்கள்.

அமைப்பின் விதிப்படி தொடர்ந்து மூன்று பதவிக்காலத்தை நிறைவு செய்த நிர்வாகிகள் மீண்டும் நிர்வாக பொறுப்பிற்கு வரமுடியாது என்பதால் முன்னாள் நிர்வாகிகளான இ.முஹம்மது, மயிலை அப்துர்ரஹீம், நெல்லை யூசுப் அலி, ஆவடி இப்ராஹிம், பா.அப்துல் ரஹ்மான் ஆகியோ£¢ மீண்டும் நிர்வாகத்திற்கு வர இயலாது என்பதை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்டது.

புதிய நிர்வாகிகளாக தங்களது மாவட்டத்தில் பரிந்துரை செய்யும் நபர்கள் குறித்த விபரங்களை மாவட்ட வாரியாக ஏற்கனவே மேலாண்மைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும் என மேலாண்மைக்குழுவின் சார்பாக அறிவிக்கப்பட்டு அதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாவட்டங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலைப் பரிசீலித்து அதில் மேலாண்மைக்குழு சார்பாக சிலரை தேர்வு செய்து அதேபோல் ஏற்கனவே மாநில நிர்வாகத்தில் திறம்பட பணியாற்றி மீண்டும் நிர்வாகத்தில் தொடர்வதற்கான தகுதியுள்ள முன்னால் நிர்வாகிகளையும் தேர்தல் அதிகாரி நாசர் அவர்கள் மேலாண்மைக்குழு சார்பில் பரிந்துரைத்தார். அவரது பரிந்துரை பொதுக்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக அங்கீகரிக்கப்பட்டு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்

அடுத்தது என்ன?

இறுதியாகப் பேசிய மாநில தலைவர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் உலகமே வியந்து பார்க்கும் உன்னத வேதமான திருமறைக் குர்ஆனை ஏற்று வழி நடக்கவேண்டிய முஸ்லிம்களின் இன்றைய நிலை இஸ்லாத்திற்கு எதிராக முன்னோர்களும் மூதாதையர்களும் சொன்னதை வேத வாக்காக ஏற்று பல அனாச்சாரமான நிகழ்வுகளையும், மவ்லீது, மீலாது போன்ற இஸ்லாத்தில் இல்லாத மூடத்தனமான பல செயல்களை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அவலத்தையும் விளக்கியதோடு, ஏகத்துவப் பிரச்சாரத்தை இன்னும் வீரியத்தோடும் மிகுந்த சிரத்தையோடும் எடுத்துச் செல்லும் அடுத்த கட்ட செயல்திட்டத்தை அறிவித்தார்கள்.

இணைவைப்புக் கலாச்சாரத்திற்கு எதிராக லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி இணைவைப்பை ஆதரிக்கும் போலி முஸ்லிம்களுக்கு ஒரு பேரிடியை ஏற்படுத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப்போல்…

பணத்திற்க்காக மக்களை மடையர்களாக்கி நபிகளாரின் போதனைகளுக்கு மாற்றமாய் மார்க்கத்தில் இல்லாத மதஹபுக் கூட்டத்தை கதி கலங்கச்செய்த முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டைப்போல்…

உலகத்தின் உன்னத வேதமாம் திருமறைக்குர் ஆனை குக்கிராமத்திற்கும் கொண்டு சென்ற திருக்குர்ஆன் மாநாட்டைப்போல்…

இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்களை ஒழித்துக்கட்டி, ஏகத்துவ ஜோதியை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்யும் பித்அத் ஒழிப்பு மாநாட்டை விரைந்து நடத்தும் புத்துணர்ச்சியூட்டும் செயல் திட்டத்தை அறிவித்தார்.

இறுதியில் மாநில துணை தலைவர் இ.பாரூக் நன்றியுரை நிகழ்த்த பயணக் களைப்பிற்கு மத்தியில் நெடு நேரம் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் புதிய உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் எதிரிகள் ஆயிரமாயிரம் சூழ்ச்சிகளை முன்னெடுத்தாலும் இறை உதவியை மட்டுமே நம்பி அவனது திருப்தியை மட்டுமே நாடி இறுதிவரை உறுதியுடன் பயணிக்க வல்ல ரஹ்மானை இறைஞ்சியவர்களாக கலைந்து சென்றனர்.

தீர்மானங்கள்

  1. கொள்கை

அல்குர்ஆன், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான நபிமொழி ஆகிய இரண்டு மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகும்.

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக ஷிர்க், பித்அத் மற்றும் மூட நம்பிக்கைகளில் முஸ்லிம்களில் சிலர் மூழ்கி கிடக்கின்றனர்.

தர்கா, மவ்லீத், மத்ஹபு போன்ற அனைத்து அனாச்சாரங்களை விட்டும் முஸ்லிம்கள் விலகும் வரை நம்முடைய ஏகத்துவ பிரச்சாரம் ஓயாது என்பதால் இன்ஷா அல்லாஹ் இன்னும் வீரியமாக நம்முடைய ஏகத்துவ பிரச்சாரத்தை  கொண்டு செல்ல  இம் மாநில பொதுக்குழு வாயிலாக உறுதி ஏற்போம்.

மாநில தலைமை சார்பாக பித்அத் ஒழிப்பு மாநாடு அறிவிப்பு செய்யபட்டுள்ளது.

இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பட்டி தொட்டி எங்கும் இந்த பிரச்சாரத்தை  வீரியமாக கொண்டு செல்ல இம் மாநில பொதுக்குழு உறுதி ஏற்கிறது.

  1. சிஏஏ

இந்திய நாட்டை உருவாக்குவதற்கும் , இந்திய  நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது.

அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது.

இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயன்றால் இச்சட்டத்திற்கு எதிராக தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதை இப்பொதுக்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்..

  1. தமிழகத்தில் இட ஒதுக்கீடு

கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார் அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர்

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

  1. முஸ்லிம் சிறைவாசிகள்

இந்தியாவின் தண்டனை சட்டத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டனை கொடுக்க பட்டு வருகிறார்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அமைதியை விரும்பும் யாரும் மாற்று கருத்து கொள்ள மாட்டார்கள்.

முன்னாள் முதல்வர்  அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்று சொன்னார். தற்போது விடுவிக்க இயலாத அரசாணை வெளிவந்துள்ளது.

குற்றவாளிகள் விடுதலையில் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்ட கூடாது என்றும்,  இந்த அரசாணையை திருத்தி முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு இம் மாநில பொதுக்குழு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது.

  1. தமிழக அரசுக்கு நன்றி

கருப்பு சட்டமான சிஏஏ விற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு மனதார பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது

  1. புதுவையில் இட ஒதுக்கீடு

பாண்டிச்சேரி மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 6.1 சதவீத விழுக்காடு இடஒதுக்கீட்டு கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்ற படாமல் உள்ளது.  உடனடியாக அதை நிறைவேற்றி தரும்படி பாண்டிச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

  1. விலை வாசி உயர்வு

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய பாசிச பாஜக அரசு விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி, பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் ஒன்றிய பாசிச பாஜக அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநில பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

  1. பொதுத் துறை நிறுவனம்

தற்போது மத்தியில் ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசு,  அரசுக்கு சொந்தமான, அதிக வருவாயை ஈட்டித்தருகின்ற தங்க முட்டையிடும் வாத்துக்களைப் போன்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறது.  இரயில்வே துறை, விமான நிலையங்கள் என்று வரிசையாக இவர்களின் இத்தாரை வார்ப்பு தொடர்கின்றது. இதை இம் மாநில பொதுக்குழு  வன்மையாக கண்டிக்கின்றது.

  1. திருமண பதிவு சான்றிதழ்

முஸ்லிம்கள் திருமண சான்றிதழ் பெறுவதில் சில குளறுபடிகள் உள்ளது. மாவட்ட காஜிகளிடம் சென்று அவர்களிடம் காத்து கிடக்கும் நிலை உள்ளது. மாவட்ட காஜிகளாக இருப்பவர்கள் அவர்கள் சார்ந்த ஜமாஅத்திற்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள். இஸ்லாமிய பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வைக்கும் திருமணத்திற்கு சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கலை தீர்த்து வைக்க ஆவண செய்யுமாறு தமிழக அரசை இப்பொதுக்குழு வாயிலாக கேட்டு கொள்கிறோம்.

  1. வார்டு மறு சீரமைப்பு

கடையநல்லூர், காயல்பட்டிணம், கீழக்கரை, மேலப்பாளையம், ஏர்வாடி உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் வார்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு ஒட்டு மொத்த பிரதிநிதித்துவமே பாதிக்கப்படும் சூழல் நேர்ந்துள்ளது.  விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கு முன் தமிழக முதல்வர் இதை சரிசெய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

  1. சென்னையில் ஹஜ் பயணம்

தமிழகத்தில் இருந்து ஹஜ் செல்லும் பயணிகள் கேரள மாநிலத்தின் கொச்சின், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் சென்று அல்லது வட மாநிலங்களுக்கு சென்றுதான் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயண ஏற்பாட்டை செய்ய ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைக்க வில்லை என்று பாராளுமன்றத்தில்  சொல்லபட்ட நிலையில், அதை மறுத்து தமிழக அரசு கோரிக்கை வைத்த ஆதாரங்களை சமர்பித்துள்ளனர்.

தமிழக முஸ்லிம்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்வதற்காக வீரியமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இம் மாநில பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here