18வது மாநிலப் பொதுக்குழு 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 18வது மாநிலப் பொதுக்குழு 

நாள் : 26.03.2017

இடம் : பிளாட்டினம் மஹால், ஈரோடு

தீர்மானங்கள்

இட ஒதுக்கீடு
1. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதனை அதிகப்படுத்தித் தருவதாக கடந்த தேர்தல்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.அதை நம்பி முஸ்லிம்களும் வாக்களித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. தற்போது இருக்கும் அரசோ அவரது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனக் கூறி வருகின்றது. அதனடிப்படையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டினை 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

  1. அதே போன்று புதுச்சேரி மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று, அங்குள்ள இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக வழங்க வேண்டும் என்று, அம்மாநிலத்தை ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
  2. பருவமழை பொய்த்துப் போனதால் குடிநீருக்கும் மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி, மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கிட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று. தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
  3. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் .இதனால் பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் இதே நிலைதான் இருந்தது. அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த பா.ஜ.க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்ப்போம் என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை அதற்கான எந்த ஒரு முயற்சியையும் ஆளும் பா.ஜ.க அரசு செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியை விட மிக மோசமான நிலையே இருந்து வருகிறது . இதன் மூலம் மோடி அரசாங்கத்தின் இரட்டை வேடம் நன்கு புலப்படுகின்றது. இதனை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
  4. பக்தியின் பெயரால் மக்களை முட்டாளாக்கும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பக்தியை மூலதனமாக்கி கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் கார்ப்பரேட் சாமியார்களால் மனித உயிர்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக ஈஷா யோகா மையத்தை நடத்திவரும் ஜக்கி வாசுதேவ் என்னும் கார்ப்பரேட் சாமியாரின் ஆசிரமத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. காடுகளை அழித்தும், வனவிலங்குகளைக் கொன்றும் இயற்கை வளங்களை ஜக்கி வாசுதேவ் அழித்து வருகின்றார். மேலும் அவரது ஆசிரமத்தில் மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. தனது ஆசிரமத்திற்கு வரும் பெண்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்து, மூளைச்சலவை செய்து, அவர்களுக்கு மொட்டையடித்து சாமியார்களாக்கும் கொடூரச் செயல்களும் அங்கு நடக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஜக்கியின் நிகழ்ச்சிகளில் இந்தியப் பிரதமரும்,தமிழக முதல்வரும் கலந்து கொள்வது, கண்டிக்கத்தக்க செயலாகும். மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் நடக்கும் மர்மங்களை மத்திய, மாநில அரசாங்கங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். அவரிடமிருந்து மக்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
  5. கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்னும் நாடகத்தை மத்திய அரசு நடத்தியது.ஆனால் அரசின் நடவடிக்கைகளால் ஒரு சதவீத கருப்புப் பணம் கூட ஒழியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.மாறாக பொதுமக்கள் அனைவரும் வங்கிகளிளும், ஏ.டி.எம் வாசல்களிளும் நின்று தங்களது உயிரை இழந்ததுதான் மிச்சம். இதோடு நின்றுவிடாமல் வங்கி என்னும் வட்டிக் கடைக்குள் மக்களைச் சிக்க வைத்து, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தற்போது இறங்கியுள்ளது. அரசின் இப்போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
  6. மோடி அரசின் ஆட்சியில் இந்திய அளவில் தலித்துகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட MP, MLA ஆகியோரும் இந்தத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here