19வது மாநிலப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 19வது மாநிலப் பொதுக்குழு 

நாள் : 24.09.2017

இடம் : பிளாட்டினம் மஹால், ஈரோடு

தீர்மானங்கள்

முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி, பொருளாதாரம், வேலையின்மை ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிஷன், மற்றும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் தங்களது அறிக்கைகளை அரசுக்கு தாக்கல் செய்து ஆண்டுகள் பல ஓடி விட்டன. அந்த அறிக்கையில் செய்யப்பட்ட பரிந்துரைப்படி மிகவும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் 10 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தமிழக அளவில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை மூன்றரை சதவிகிதத்திலிருந்து உயர்த்தித் தருவதாக காலம் சென்ற முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அதை நம்பி முஸ்லிம்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வைத்தனர். அந்த தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம் சமுதாயத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தித் தரவேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை வதை செய்யும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வானது நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும். சி.பி.எஸ்.இ பாடப்பிரிவின் கீழ் படிக்கும் வசதி படைத்தவர்களும், உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களும் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற இந்த அவலநிலையை கலைந்து அனைவரும் மருத்துவராக முடியும் என்ற நிலையை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மியான்மரில் நடக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கொலை வெறித் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்க உலக நாடுகளும், ஐ.நா.மன்றமும் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மேலும் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

மேலும் இந்தியா வந்திருக்கும் மியான்மர் அகதிகளைத் திருப்பி அனுப்ப முயற்சிக்கும் மத்திய பாஜக அரசின் மனிதாபிமானமற்ற இப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்கள் மற்றும் பல கோடி நடுநிலையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மியான்மரில் சகஜ நிலை திரும்பும்வரை அகதிகளை அரவணைத்து பாதுகாக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

அகதிகள் அனுமதி பெற்று இந்தியாவுக்குள் வரவில்லை என்று மத்திய அரசின் சார்பில் ராஜ் நாத் சிங் கூறுவது பொறுப்பற்றது என்று இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது. சுற்றுலா வருபவர்களும், வேலை தேடி வருவோரும் முறையாக அனுமதி பெற்று வர வேண்டும் என்றால் அதில் நியாயம் உள்ளது. உயிருக்கு பயந்து அணிந்திருக்கும் ஆடையுடன் ஓடி வரும் மக்கள் எப்படி அனுமதி பெற்று வருவார்கள்? உலகம் முழுவதும் அகதிகள் இப்படித்தானா பிற நாடுகளுக்கு வருவார்கள்?. இந்த அடிப்படையைக்கூட உணராமல் மனிதாபிமானமில்லாமல் மத்திய அமைச்சர் கூறுவதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

மியான்மரில் இருந்து தீவிரவாதிகள் தான் அகதிகளாக வருகிறார்கள் என்ற மத்திய அரசின் கூற்று உலக நாடுகள் மத்தியில் இந்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. அகதிகளாக ஓடி வருவோர் அப்பாவி பொது மக்கள் தான் என்று ஐ.நா. சபையும் இன்னபிற நாடுகளும் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காகவே மத்திய அரசு பாரபட்சமாக நடக்கிறது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

அகதிகளைப் பராமரிக்க பொருளாதாரம் தடையாக இருந்தால், மத்திய அரசு அனுமதி அளித்தால், இதற்காக ஆகும் மொத்தச் செலவுகளையும் பொதுமக்களிடம் திரட்டி வழங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதியளிக்கிறது.

பிற்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றால் அவர் முஸ்லிம் சமுதாயத்தின் பிற்பட்ட பிரிவில் சேர்க்கப்படுவதுதான் முறையாகும். இவ்வாறு இஸ்லாத்தைத் தழுவிய பிற்பட்ட மக்களை முன்னேறிய சமுதாயத்தில் சேர்த்து அவர்களின் உரிமை தமிழகத்தில் பறிக்கப்படுகிறது. எனவே இஸ்லாத்தை தழுவும் பிற்பட்ட மக்களை முஸ்லிம்களுக்கான பிற்பட்ட பிரிவில் சேர்க்க அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

மாட்டின் பெயரால் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் இதுவரை தண்டிக்கப்படவில்லை. மேலும் ராஜஸ்தானில் நடைபெற்ற பெஹ்லு கான் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது குற்றம் நிரூபணம் ஆகவில்லை எனக்கூறி வழக்கில் இருந்து அவர்களை ராஜஸ்தான் காவல்துறை விடுவித்து இருப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் விலை குறைந்து வருகிறது. ஆனால் அதன் பலன் மக்களுக்குக் கிடைக்காமல் வரிக்கு மேல் வரி போட்டு பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ஏற்றிக் கொண்டே வருகிறது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள விலையைவிட இந்தியாவில் இரு மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. எரி பொருட்களின் விலை உயர்ந்ததால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் கொடுமையான வரியை நீக்கி உலக நாடுகளின் விலையில் பெட்ரோலியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க ஆவண செய்ய மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தமிழக பள்ளிக்கூடங்களில் யோகா வகுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். யோகா என்பது சூரிய வழிபாடு உள்ளிட்ட பல அம்சம் கொண்ட இந்து மதப் பயிற்சி முறையாகும். ஒரு இறைவனை மட்டுமே வணங்குவதைக் கொள்கையாக கொண்ட முஸ்லிம்கள் யோகாசனத்தைச் செய்ய முடியாது. இது இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரானதாகும். எனவே இதை முதல்வர் திரும்பப்பெற வேண்டும். யோகாவை முஸ்லிம்கள் மீது திணித்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அதை எதிர்த்து களமிறங்கும் நிலை உருவாகும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு எச்சரிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here