21வது மாநிலப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 21வது மாநிலப் பொதுக்குழு 

நாள் : 22.09.2019

இடம் : பிளாட்டினம் மஹால், ஈரோடு

தீர்மானங்கள்

1.சத்தியத்தைச் சொல்லும் சத்திய இயக்கம்

தமிழகமெங்கும் பல லட்சக்கணக்கான உறுப்பினர்களையும், ஆயிரக்கணக்கான கிளைகளையும் உள்ளடக்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்னும் மாபெரும் மக்கள் பேரியக்கம், மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் முன்னின்று செய்து வருகின்றது.

திருக்குர்ஆனின் போதனைகளையும், உலக மக்களின் வழிகாட்டியாகத் திகழும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் எவ்வித சமரசமுமின்றி பின்பற்றும் இந்த இயக்கத்தில் தவறு செய்யக்கூடியவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்தப் பாரபட்சமும் காட்டுவதில்லை என்ற கொள்கையைப் பலமுறை செயல்படுத்திக் காட்டியுள்ளது இந்த இயக்கம்.

எவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்தாலும் சத்தியத்தைக் கைவிடமாட்டோம் என்ற கொள்கையில் பிடிப்புடன் இருக்கும் இந்த ஜமாஅத்தின் வெற்றிக்கு இறைவனின் அருளும் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளின் செயல்பாடுகளுமே காரணம். எந்தச் சோதனை வந்தாலும் அதை எதிர்கொண்டு  சத்திய மார்க்கத்தை உறுதியுடன் கடைப்பிடிக்கும் நமது ஜமாஅத்தின் நிர்வாகிகள் மேலும் வீரியத்துடன் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

2.இணைவைப்பில் வீழ்ந்து கிடக்கும் மக்களை மீட்டெடுக்கும் அழைப்புப் பணிகளை மென்மேலும் செய்ய வேண்டும் என்பதையும், மக்களைக் காக்கும் இரத்ததானம், பேரிடர் மீட்பு போன்ற பணிகளிலும் இன்னும் வீரியத்துடன் செயல்பட வேண்டும் என்பதையும், தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ள மூன்று மாத தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தின் கால அவகாசம் நிறைவுற்றாலும் இந்த இயக்கத்தில் இருக்கும் சகோதரர்கள் கடைசி வரைக்கும் தீவிரவாதத்தை எதிர்த்து மக்களைக் காக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் நிர்வாகிகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

3.புதிய கல்விக் கொள்கை

அனைவருக்கும் கிடைக்க வேண்டிய கல்வியை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் மாற்றி வடிவமைத்து, மாணவர்களின் கல்வியை நாசமாக்கி அவர்களை குலத்தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளிவிடும் நோக்கில் மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கை திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது.

ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வியை எளிமையாக்கி அதன்மூலம் அவர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் யாருமே இந்த புதியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாணவர்களை கல்வியை விட்டு தூரப்படுத்தும் புதிய கல்விக் கொள்கையை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.  இதை தமிழகத்தில் எந்த நிலையிலும் அமுல்படுத்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

4.அஸ்ஸாம் பிரச்சினை

அஸ்ஸாம் மாநிலத்தில் அந்நிய நாட்டவர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று சொல்லி கிட்டத்தட்ட 19 லட்சம் மக்களை ஒரே இரவில் அகதிகளாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது. பல ஆண்டுகளாகப் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வந்த இஸ்லாமிய மக்களை, நீங்கள் அஸ்ஸாமியர்கள் அல்ல என்றும், இந்தியர்களே அல்ல என்றும் கூறி குடியுரிமை மறுக்கப்படுள்ளது. இந்தக் கொடுமையில் அதிகமதிகம் இஸ்லாமிய மக்களே பாதிக்கப்படுள்ளனர்.

கார்கில் போரில் பங்கேற்று இந்திய அரசிடம் இருந்து பல பதக்கங்களை வாங்கிய முன்னாள் ராணுவ வீரர் முஹம்மது சனாவுல்லாவை போல பலரை, அந்நிய நாட்டவர்கள்  என்று  கூறி தடுப்பு முகாமில் அடைத்து வைக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்வுகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன்,  சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டிருக்கும் இந்த 19 லட்சம் இந்தியர்களையும் மீண்டும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு முறை கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களைப் பின்பற்றாதவர்கள் அனைவரையும் அந்நியப்படுத்தும் நோக்கில் இந்தத்  திட்டத்தை மத்திய பாஜக அரசு செயல்படுத்துகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பைக் கொண்ட இந்திய நாட்டைப் பல கூறுகளாப் பிரிக்கும் பாஜகவின் இந்தத் திட்டத்தை நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

5.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம்

இந்தியாவில் உள்ள சிக்கிம், மிசோராம், நாகலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பல்வேறு வகையான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களைக் குறிவைத்து, நாடு  சுதந்திரம் அடைந்தது முதல் அம்மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரிவு – 370 மற்றும் 35 ஏ ஆகிய சிறப்பு அந்தஸ்துகளை நீக்கியதும், காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதுமட்டுமின்றி காஷ்மீர் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களை வீட்டுக்காவலில் சிறை வைப்பதும், காஷ்மீர் மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலை போல நடத்துவதும், தங்கள் உரிமை கோரிப் போராடும் மக்களை பெல்லட் குண்டுகளைக் கொண்டு சுடுவதும் போன்ற சம்பவங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.

ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளைப் பறித்து, சோதனை என்ற பெயரில் வீடுகளுக்குள் நுழைவதும் மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவுவதும், உண்மைச் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை மிரட்டுவதும், தொலைத்தொடர்புகளை முடக்குவதும் என காஷ்மீர் மக்கள் மீது ஏவப்படும் சர்வாதிகாரப் போக்கினை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

காஷ்மீர் மக்களின் எண்ணத்திற்கு எதிரான செயல்களை மத்திய அரசு செய்துவரும் நிலையில் இது நாட்டிற்கே எதிரான போக்கினை அந்த மக்களிடம் விதைத்து விடும் என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதுடன்  அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட , அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35-ஏ ஆகிய பிரிவுகள் வழங்கிய சிறப்புச் சலுகைகளை மீண்டும் வழங்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

6.முத்தலாக் தடைச் சட்டம்

மதச்சார்பற்ற இந்திய நாட்டில் மத உரிமைகளைப் பேணுவதும் குறிப்பிட்ட மதச் சட்டங்களை பின்பற்றுவதும் இந்நாட்டுக் குடிமக்களுக்கு உள்ள உரிமையாகும். அதன் அடிப்படையில் இஸ்லாமியர்களின் மூன்று தவணை தலாக் சட்டத்தை ரத்து செய்து மசோதா நிறைவேற்றியுள்ள செயல் அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச் சுதந்திரங்களுக்கு எதிரானதாகும். இஸ்லாமிய ஆண்களை சிறைக்கு அனுப்பி அவனது குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துவதற்காகக்  கொண்டு வரப்பட்டுள்ள  முத்தலாக் தடைச்சட்டத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இஸ்லாம் கூறும் விவாகரத்துச் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல! உலகில் வாழும் ஒட்டுமொத்த பெண்களுக்குமே அது பாதுகாப்பாக விளங்கும் என்பதை உணர்ந்து, மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் தடைச் சட்டத்தை உடனே நீக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

7.பொருளாதாரப் பின்னடைவு

இந்தியாவில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியால் இந்தியா கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. பொருளாதாரத்தை மேம்படுத்த குறைந்த பட்ச செயல்திட்டங்கள் எதையும் செய்யாமல் இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களை மட்டுமே நிறைவேற்றி வரும் மத்திய அரசின் செயலை இப்பொதுக்குழு கண்டிக்கின்றது. தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சீர்படுத்த வேண்டுமானால் ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்து பழைய வரி முறையை அமுல்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ள 5 அம்சத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

8.மாட்டிறைச்சி, ஜெய்ஸ்ரீராம் படுகொலைகள்

இந்தியாவில் பசு பயங்கரவதிகளால் மாட்டிறைச்சியின் பெயராலும், ஜெய்ஸ்ரீராம் கோசத்தின் பெயராலும் ஏராளமான அப்பாவிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களைப் படுகொலை செய்யும் நிலை தொடர்ந்து வருகின்றது. மனிதர்களை இரக்கமின்றி அடித்தே கொலை செய்த காட்டுமிராண்டிகள் போலியான  மருத்துவ அறிக்கைகள் வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படும் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.

மனிதர்களை அடித்துக் கொலை செய்யும் கொடூரங்களைக் கண்டிக்க வேண்டிய அரசாங்கம் அவர்களை ஊக்குவிக்கும் போக்கில் செயல்படுவதை இப்பொதுக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மாட்டிறைச்சி, ஜெய்ஸ்ரீராம் படுகொலைகள் இனியும் தொடராமல் ஆளும் அரசு தடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

9.வாக்குச் சீட்டு முறை

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் நடத்தப்படும் தேர்தல்கள் மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளிலும் தனியார் விடுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பல இடங்களில் தெருக்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடந்தன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் ஒரு தேர்தல் இவ்வளவு கேலிக்கூத்தாக நடைபெற்றது இதுவே முதன்முறையாகும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பல வழிமுறைகளில் மோசடி செய்யலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்துவதன் மூலம் நாட்டின் இறையாண்மையைக் காத்து, மக்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

10.ஜெர்மானிய தேர்தல் முறை

தற்போதுள்ள இந்தியத் தேர்தல் முறையில், பெரும்பான்மை மக்களின் எண்ணங்கள் தோற்று, மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான  வாக்குகள் பெறும் கட்சிகளே அதிக நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றி,  ஆட்சியமைத்து விடுகின்றன. இது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகும். எனவே இந்தத் தேர்தல் முறையை மாற்றி ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அமுல்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

11.புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்கள்

மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் பல திட்டங்களில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதே இல்லை. இதைக் கண்டறிந்து இஸ்லாமிய மக்களுக்கும் பயனடையும் வகையில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப் படவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

12.முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி, பொருளாதாரம், வேலையின்மை ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிஷன், மற்றும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் தங்களது அறிக்கைகளை அரசுக்கு தாக்கல் செய்து ஆண்டுகள் பல ஓடி விட்டன. அந்த அறிக்கையில் செய்யப்பட்ட பரிந்துரைப்படி மிகவும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் 10 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

13.தமிழக அளவில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை மூன்றரை சதவிகிதத்திலிருந்து உயர்த்தித் தருவதாக காலம் சென்ற முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அதை நம்பி முஸ்லிம்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வைத்தனர். அந்த தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் ஜெயலல்லிதா அவர்கள் முஸ்லிம் சமுதாயத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தித் தரவேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

  1. மோடி பொறுப்பு ஏற்ற நாள் முதல் முஸ்லிம்கள் திட்ட மிட்டு தாக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தூண்டப்பட்டு மாட்டு இறைச்சி, ஜெய் ஸ்ரீராம் பெயரை சொல்லி  முஸ்லிம்கள் படு கொலை செய்யப்படுகிறார்கள். முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.

முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 2020 ஜூலை 7 ம் தேதி லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here