பெண்ணின் திருமண வயது வரம்பை 21 ஆக உயர்த்தத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்:

18 வயதாக இருந்த பெண்களின் திருமண வயதை 21 வயதாக உயர்த்த துடிக்கும் ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் பேசுகையில் பெண்களின் திருமண வயது வரம்பை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்திருந்தார்.

இதற்காக ஜெயா ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் சிறப்பு குழு தான் இப்போது 21 எனும் வயது வரம்பை பரிந்துரைத்துள்ளது.

இப்பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு விரைவில் அதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து இதை சட்டமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அறிவுக்கு பொருந்தாத நடைமுறைக்கும் சாத்தியமற்ற, அவசியமும் இல்லாத இவ்விவகாரத்தை ஒன்றிய அரசு தற்போது கையில் எடுத்துள்ளதாகவே வெகுஜன மக்கள் பார்க்கிறார்கள்.

18 வயதில் திருமணம் செய்வதால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்தின் போது பெண்கள் பலர் இறக்கிறார்கள் என்றெல்லாம் தவறான செய்திகளைக் கூறி வரும் ஒன்றிய அரசு 21 எனும் வயது வரம்பை விதிப்பதால் ஏற்படப் போகும் மோசமான விளைவுகளைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?

தனி நபர் விவகாரத்தில் தலையிடுவது ஏன்.?

ஒரு பெண் உடலாலும் மனதாலும் திருமணத்திற்கு தயாராகிவிட்டால் அவள் மணமுடித்துக் கொள்ளலாம். இது அந்தப் பெண் மற்றும் அவளின் குடும்பத்தார் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இதில் அரசு தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அது ஏற்புடையதும் அல்ல.

நேற்று சட்டப் பூர்வமானது ! இன்று சட்ட விரோதமானதா?

இந்தியாவில் 1929 ஆண்டு கொண்டு வரப்பட்ட சார்தா சட்டத்தின் படி ஆணின் திருமண வயது 18 பெண்ணின் திருமண வயது 14 என சட்டம் இயற்றப்பட்டது, அது வரையில் 14 வயது பூர்த்தியடைந்த பெண்ணை மணப்பது சட்டப்பூர்வமானதே.

பின்பு 1978 ல் இந்தச் சட்டம் திருத்தப்பட்டு ஆணின் திருமண வயது 21 என்றும் பெண்ணின் வயது 18 என ஆனது.

தற்போது இதையும் மாற்றி பெண்ணுக்கு திருமண வயது 21 என சட்டம் இயற்றப் பட உள்ளது.

இப்படி காலத்திற்கு காலம் ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் திருமண வயது என்று மாறுபட்டு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஒரு நேரத்தில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட திருமண வயது என்றும் அதையே பிந்தைய நாட்களில் சட்ட விரோதம் என்றும் கூறியுள்ளனர்.

நாசத்தை அனுமதித்து நல்லதை தடுக்கும் ஒன்றிய அரசு.

18 வயது நிரம்பிய பெண் திருமணம் ஆகாவிட்டாலும் ஒரு ஆணுடன் உறவில் ஈடுபட்டால் அது சட்ட விரோதம் அல்ல என்கிறது இந்தியச் சட்டம்.

அது போன்று ஓரினச் சேர்க்கை குற்றமல்ல. கணவன் இருந்தாலும் மற்றொரு ஆணுடன் கள்ள உறவில் ஈடுபட்டாலும் குற்றமல்ல.

இவற்றையெல்லாம் சட்டவிரோதம் என்று குறிப்பிடாத ஒன்றிய அரசு, பெண்ணின் திருமண வயது விவகாரத்தில் மட்டும் அவசியமற்ற கெடுபிடி காட்டி 21 வயது பூர்த்தியடையாத பெண்ணை திருமணம் செய்வது சட்ட விரோதம் என்பது நாசத்தை அனுமதித்து நல்லதை தடுக்கும் செயலாகும்.

20 வயதில் ஒரு பெண், உடலாலும் மனதாலும் திருமணத்திற்கு தயாராகி பெற்றோரும் அப்பெண்ணிற்கு திருமண ஏற்பாட்டை செய்வதை ஒன்றிய அரசு சட்டம் போட்டு தடுப்பது முறையாகுமா?

குழந்தையா? பெரியவளா?

நம் நாட்டு சட்டப்படி ஒரு ஆணோ பெண்ணோ 18 வயது பூர்த்தியாகிவிட்டால் வாக்களிக்கும் உரிமை பெறுகிறார்கள்.

இப்பருவத்தில் நல்ல பக்குவமடைந்து விட்டார்கள் என்ற அடிப்படையில்தான் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியாகிவிட்டால் அவர்கள் பெரியவர்கள் என அரசு கருதுவதுதான் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் காரணம்.

ஆனால் திருமண விஷயத்தில் தலைகீழ் நிலைக்குச் சென்று 21 வயது பூர்த்தியாகாதவர்களை மணப்பது குழந்தைத் திருமணம், அது சட்ட விரோதம் என்று கூறுகிறது.

வாக்குரிமை விஷயத்தில் பெரியவர்கள் என்றும் அதே வயதுடையவர்களை திருமண விஷயத்தில் குழந்தை என்றும் வரையறுப்பது ஒன்றிய அரசின் இரட்டை நிலையைக் காட்டுகிறது.

பாலியல் குற்றங்கள் பெருகும் அபாயம்.

சினிமா, ஆபாசங்கள் போன்றவைகளால் நாட்டில் ஏற்கனவே ஒழுக்ககேடுகள் பரவிக் கிடக்கின்றன. பச்சிளம் குழந்தைகளும், பருவப் பெண்களும், மூதாட்டிகளும் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுவருகின்றனர்.

தகாத உறவுகளும் பெருகி வருகின்றது. இவற்றை எல்லாம் தடுத்து சமூகத்தை ஒழுக்க ரீதியாக சரிசெய்வதற்கு திருமணம் ஒரு முக்கிய ஆயுதமாகும் .

ஒருவன் திருமணம் செய்து மனைவியுடன் வாழத் துவங்கினால் இக்கேடுகளிலிருந்து விடுபட்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

தற்போது ஒன்றிய அரசோ அதற்கும் வேட்டு வைக்கப் பார்க்கின்றது.

பெண்ணின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் செயல் பெண்களுக்கு கண்டிப்பாக நன்மை பயக்கப் போவதில்லை .

கண்டிப்பாக அது அவர்களை பாதிக்கவே செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசின் கெடுபிடியால் திருமணங்களில் ஏற்படப் போகும் அவசியமற்ற கால தாமதங்கள் பல பாலியல் குற்றங்களுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் வழிவகுத்து விடும்.

எனவே பெண்ணின் திருமண வயது வரம்பை உயர்த்தும் இம்முடிவை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.

இப்படிக்கு:
ஆர். அப்துல் கரீம்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here