சாமியார்களின் தேச விரோதப் பேச்சு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.!!

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் தர்ம சன்சத் என்ற மாநாடு ஒன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பாஜக உட்பட பல இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இதில் முஸ்லிம்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்றும் இன்னும் தேச இறையாண்மைக்கும் , மதச்சார்பின்மைக்கும் எதிராகவும் பல நச்சுக்கருத்துக்களைப் பேசியுள்ளனர். இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

இவர்களின் விண்ணை விஷமாக்கும் பேச்சுக்களால் இந்தியாவின் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காகச் சண்டையிடுவோம், தேவை ஏற்பட்டால் கொலையும் செய்வோம் என்றும் கொக்கரித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பூஜா சகுன் பாண்டே என்ற பெண் சாமியார் எங்களுக்கு 100 இளைஞர்கள் தேவை. அவர்களை வைத்து 20 இலட்சம் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும் என்று விஷம் கக்கியிருக்கிறாள்.

பிரபோதானந்த கிரி என்பவன் பேசும் போது பர்மாவில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் மாமிசங்கள் சாப்பிடப்பட்டது .

இந்தியாவிலும் இஸ்லாமியர்களைக் கொன்று அவர்களின் மாமிசங்களையும் உண்ண வேண்டும் என்றும் சபாய் அப்யான் அதாவது ஒட்டுமொத்தமாக இன அழிப்பு செய்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் திமிர்ப் பேச்சு பேசியுள்ளான்.

தரம் தாஸ் என்பவன் பேசும் போது, இந்தியாவின் வளங்களைப் பெறுவதில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருந்தால் கோட்சே காந்தியைக் சுட்டது போல் நான் மன்மோகன் சிங்கை சுட்டிருப்பேன். எனது துப்பாக்கியில் உள்ள 6 குண்டுகளையும் அவர் மார்பில் செலுத்தியிருப்பேன் என்று பேசியுள்ளான்.

இவ்வாறு பேசியது மட்டுமல்ல இவற்றை நடைமுறைப் படுத்துவோம் என உறுதிமொழியும் எடுத்துள்ளனர்.

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு நான் தலை வணங்குகிறேன் என காளிச்சரண் மகராஜ் என்பவன் பேசியுள்ளான்.

காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு புகழாரம் சூட்டியதை எந்த இந்தியனும் ஏற்க முடியாது!

இத்தகைய தேசவிரோதப் பேச்சுக்கள் பேசிய சாமியார்கள் யார் மீதும் இது வரை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அவர்களைப் பாதுகாக்கும் வேலையைத்தான் ஒன்றிய அரசு செய்து வருகிறது.

ஆனால் இந்த வெறுப்புப் பேச்சுக்களை மூத்த வழக்கறிஞர்கள் கண்டித்துப் பேசியுள்ளனர் . இந்த இனஒழிப்புப் பேச்சுக்களால் இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கு 76 மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாக கடிதமும் எழுதியுள்ளனர்.

ஹரித்வார் மாநாட்டில் வெறுப்புப் பேச்சுக்களைப் பேசியவர்கள் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே ஜனநாயகத்திற்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரான தேச விரோதக் கருத்துக்களை சங்பரிவாரத்தினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். வட மாநிலங்களில் இந்த நோய் மிக அதிகமாக உள்ளது.

இச்செயலை ஒன்றிய, மாநில அரசுகள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இதைச் செய்ய அரசு தவறும் பட்சத்தில் உளப்பூர்வமாக இந்தியாவை நேசிக்கக் கூடிய உண்மையான இந்தியர்கள் கிளர்ந்தெழுந்து
இத்தகைய சங்பரிவாரத்தினருக்கும் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக அரசுக்கும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு.
ஆர். அப்துல் கரீம்.
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here