கோடான கோடி இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகத்தைப் பற்றி தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ ராஜாசிங் என்பவன் அவதூறாகப் பேசியுள்ளான்.
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் கைது செய்யப்பட்ட ராஜாசிங் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.
உலகம் உற்று நோக்கும் பிரச்சனையாக இது மாறிவிடக்கூடாது என்பதற்காக பாஜகவிலிருந்து அவன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளான் என்ற கண்துடைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகளார் குறித்து அவதூறு கருத்தைக் கூறி உலகை உலுக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக அது மாறிய போதும் இப்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை.
இது போன்று இஸ்லாத்தைப் பற்றி அவதூறு கூறி வன்முறையைத் தூண்டுவோருக்கு நம்நாட்டில் நியாயமான தண்டனை கிடைப்பதே இல்லை.
அவர்களில் பலர் மீது வழக்கு, கைது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மிகச்சில நேரங்களில் இவை மேற்கொள்ளப்பட்டாலும் அது குற்றவாளிகளை காப்பாற்றும் கண்ணோட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது.
எந்த மதத்தைப் பற்றி அவதூறு செய்யப்பட்டாலும் அது கண்டிக்கப்படவேண்டிய தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் தான்.
இருப்பினும் இந்துமதத்தைப் பற்றி ஒருவர் விமர்சித்தால் அவர்கள் மீது கடும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது. ஒன்றிய அரசு குறித்த விமர்சனத்தை ஒருவர் முன்வைத்தால் அவர் மீது தேச விரோத வழக்குகள் போன்ற கடுமையான வழக்குகள் போடப்பட்டு ஆண்டுக் கணக்கில் சிறையில் தள்ளப்படுகின்றனர்.
ஆனால் இஸ்லாத்தைப் பற்றியோ, இஸ்லாமியர்களைப் பற்றியோ, நபிகள் நாயகம் பற்றியோ ஒருவர் அவதூறு கூறினால் அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
இஸ்லாத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் அவதூறு கூறலாம். அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பது தான் இந்தியாவின் தற்போதைய நிலையாக உள்ளது. இது கடும் கண்டனத்திற்குறிய செயலாகும்.
பூமிப் பந்தில் மதச்சார்பற்ற நாடாக அறியப்பட்ட இந்திய தேசம். இத்தகைய மதவாதிகளால் மதச்சார்பின்மை எனும் தன் அழகிய அடையாளத்தை இழந்து வருகின்றது.
குழப்பம் கொலையை விடக் கொடியது என்கிறது திருமறைக் குர்ஆன். அமைதியான முறையில் வாழக்கூடிய சமூக மக்கள் மத்தியில் சமூக விரோதிகள் குழப்பம் ஏற்படுத்தும் கருத்தைக் கக்குவது நம் நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல.
மதத்தால் வேறுபட்டிருப்பினும் அண்ணன், தம்பிகளாக வாழும் இந்திய நாட்டில் இத்தகையவர்களை வளர விடுவது நல்லதல்ல . இத்தகைய குற்றவாளிகள் மீது கடும் வழக்குகள் போடப்பட வேண்டும். அவர்கள் சிறைக் கொட்டத்தில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா அமைதியான தேசமாக இருக்கும் என்பது தான் நடுநிலையாளர்களின் பார்வையாக உள்ளது.
எனவே நபிகளார் குறித்து அவதூறு பேசிய ராஜாசிங் மற்றும் நுபுர் சர்மா ஆகியோருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.
இப்படிக்கு:
ஆர். அப்துல்கரீம்.
பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.