ஷிவ்மோகா கலவரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

ஷிவ்மோகாவில் இந்துத்துவ வாதிகள் இஸ்லாமியர்களின் வீடு, கடை, வாகனம் போன்ற உடமைகளை சேதப்படுத்தியும் , தீயிட்டுக் கொளுத்தியும் வன்முறை வெறியாட்டாம் ஆடி வருகின்றனர். இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.

சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற பிரச்சனையை இந்துத்துவ பயங்கரவாதிகள் கிளப்பி விட்டனர்.

உலகமே திரும்பிப் பார்க்கும் பிரச்சனையாக இது மாறி தரணியெங்குமுள்ள நடுநிலையாளர்கள் ஹிஜாப் முஸ்லிம்களின் உரிமை, அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை தடை செய்வதை ஏற்க முடியாது என சங்பரிவார வகையறாக்களுக்கு மூக்குடைப்பை ஏற்படுத்தினார்கள்.

இதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணத்தினால் மக்களைத் திசை திருப்புவதற்காக தங்களது வழக்கமான கலவர யுக்தியை சங்பரிவாரத்தினர் கையில் எடுத்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகா என்ற பகுதியில் இந்துத்துவ இயக்கமான பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கொல்லப்படுகின்றார்.

வன்முறை ஒருபோதும் நன்முறை ஆகாது. எந்த ரூபத்தில் இது போன்ற செயல்கள் நடந்தாலும் அது ஏற்க முடியாததும் கண்டித்தக்கதும் ஆகும்.

கொலையாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால் இக்கொலையை திசை திருப்பி வன்முறையை தூண்டியுள்ளனர் இந்த பயங்கர வாதிகள்.

கொலை செய்யப்பட்ட ஹர்ஷா ஹிஜாபுக்கு எதிராக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார் . எனவே தான் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனக் கூறி ஷிவ்மோகாவில் சீகே ஹட்டி, கலார் பேட், பாரதி காலணி, NT ரோடு, ஆஜாத் நகர், டெம்போ ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.

இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது. இதையும் மீறி ஹர்ஷாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது. அப்போது வழிநெடுகிலும் உள்ள இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடைபெறுகின்றது. முஸ்லிம்களின் வாகனங்கள் தீக்கிறையாக்கப்படுகின்றன. இன்னும் அவர்களின் பல உடமைகள் சேதப்படுத்தப் பட்டிருக்கின்றன. வழிபாட்டுத் தலங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் கண்முன்னே இந்த கொடூரங்கள் நடந்தேறியுள்ளது. இந்த அநியாயத்தை தடுத்த நிறுத்த முடியாத வக்கற்ற நிலையில் தான் கர்நாடகா காவல் துறை இருந்துள்ளது.

முன்விரோதம் காரணமாகவே இக்கொலை நடந்தததாக கர்நாடக காவல்துறை கூறியுள்ளது, ஹிஜாப் விவகாரத்திற்கும் இந்தப் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கர்நாடகா அமைச்சர் அரக ஞானேந்திரா குறிப்பிட்டுள்ளார்

ஆனால் மற்றொரு கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா என்பவர் இறந்த ஹர்ஷாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு பின் இதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என இந்துத்துவ வெறியர்களை தூண்டிவிடுகின்றார்.

இதன் விளைவாக மிகப்பெறும் வன்முறை ஷிவ்மோகாவில் நடந்து வருகின்றது.

இது நாடா? அல்லது சுடுகாடா? என்பது போன்று நாளுக்கு நாள் இந்துத்துவ பயங்கர வாதிகளின் வன்முறை வெறியாட்டங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்ப இவர்கள் மிகப்பெரும் கலவரத்தைக் கட்டவிழ்த்து முஸ்லிம்களை கொன்று குவித்து இஸ்லாமியர்களின் கோடிக் கணக்கான செல்வங்களையும் சூறையாடினர்.

இவர்களின் இது போன்ற செயல்களால் இந்தியா சர்வதேச அளவில் தலை குனிந்து நிற்கின்றது. இந்தியா ஒரு பாதுகாப்பற்ற வன்முறை நிறைந்த நாடு எனும் நிலையை இந்த இந்துத்துவ வாதிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இவர்களின் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் சம்பந்தப்பட்ட வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீட வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதுடன் இந்துத்துவ வாதிகளின் இந்த வன்முறைப் போக்கு தொடர்வதை ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது உலக அரங்கில் இந்திய தேசத்திற்கே அவமானம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு:
ஆர். அப்துல் கரீம்.
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here