சென்னையைச் சார்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் பகுதி நேரமாக மருந்து கடையில் வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் நேரத்தில் மாஸ்க் சரியாக அணியாததற்காக காவல்துறை அழைத்து அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
அந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மாஸ்க் போடாத காரணத்திற்காக கைது செய்து இரவு முழுவதும் கொலைவெறி தாக்குதல் நடத்துவதும், முகத்தில் சிறுநீர் கழிப்பதும் எதார்த்தமாக நடைபெற்றதாக தெரியவில்லை.
இஸ்லாமியர் என்றாலே தாக்குதல் தொடுக்கும் சங்பரிவார சிந்தனை தமிழக காவல்துறையில் ஊடுருவியுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எந்த குற்றம் செய்கிறார்களோ அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் மாஸ்க் சரியாக போடாததால், முகத்தில் தையல் போடும் அளவிற்குத் தாக்குவது சர்வாதிகார செயலாகும்.
சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் செய்வது போன்ற ஒரு நடைமுறையை தமிழக காவல்துறை செய்வது காவல்துறையின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நன்மதிப்பை இழக்கச் செய்துள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தொடர்பு கொண்ட போது உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும் நடந்த நிகழ்வை ஒரு போதும் ஏற்க முடியாது.
சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது ஒரு கண் துடைப்பாகும். அவர்களை பணி நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
தமிழக அரசும், காவல்துறையும் இதை கவனத்தில் கொண்டு இனி இது போன்ற இழி செயல்கள் நடைபெறா வண்ணம் செயலாற்றுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஆர். அப்துல் கரீம்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்