இளைஞர்களை படிப்பறிவு இல்லாமல் ஆக்கும் அக்னிபத் திட்டம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்:

ஒன்றிய அரசு அக்னிபத் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 17 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த ஊழியர்களாக பணி செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொன்னான திட்டம் என பாஜக இதைச் சொல்லிக் கொண்டாலும் ஓட்டைகளும், ஆபத்துகளும், இத்திட்டத்தின் பின்னணியில் உள்ளன.

பொதுவாக இராணுவத்தில் சேர இளைஞர்கள் விரும்புவார்கள். ஆனால் இதை அனேக இந்திய இளைஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர் என்பதிலிருந்தே இத்திட்டதின் விபரீதம் புரிகின்றது. உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரசேதம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம் , தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

இப்போரட்டங்களை இளைஞர்கள் தான் முன்னெடுத்து வருகின்றனர். சில இடங்களில் வன்முறையும் கலவரங்களும் நடைபெற்று வருகின்றது. இதுவரை 15 இரயில்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 200க்கும் அதிகமான இரயில்கள் ரத்து செய்யப்பட்டு இரயில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்முறை ஒருபோதும் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. எனவே அறவழிநின்று தான் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதே சமயம் அக்னிபத்திட்டம் ஏன் இவ்வாறு எதிர்க்கப்படுகின்றது என்பதை நாம் உற்று கவனிக்க வேண்டும்.

இராணுவ கட்டமைப்பை நாசமாக்கும் திட்டம்:

பொதுவாக இராணுவ வீரர்கள் நிரந்தரப்பணி என்ற அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். ஆனால் அக்னிபத் திட்டத்தின் படி 4 ஆண்டுகள் ஒப்பந்தப்பணி வீரர்களால் இராணுவத்தின் கட்டமைப்பு சீர்குலைந்து போகும் .இராணுவத்தில் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னேற்றத்திற்கு முட்டுகட்டை போடும் திட்டம்.

பொதுவாக 17 வயது முதல் 21 வயது வரை உள்ள பருவம் என்பது இளைஞர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர் கல்வி படிக்க கல்லூரிகளை நாடும் முக்கியமான காலகட்டம்.
இக்காலகட்டத்தில் 4 ஆண்டுகள் இராணுவ பணிக்கு சென்று விடுவதால் அவர்களின் கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோகின்றது.அவர்களின் எதிர்காலம் பாழாகின்றது.

இளைஞர்கள் உயர் படிப்பு படித்து விடக்கூடாது என்பதற்காகவே பாஜக இத்திட்டத்தை கொண்டு வருவதாக பல்வேறு அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

காலத்தை வீணடிக்கும் திட்டம்:

இது ஒரு நிரந்தரப் பணி அல்ல. இத்திட்டத்தின் படி இராணுவ பயிற்சியில் இணைபவர்கள் ஆறுமாதங்கள் பயிற்சியளிக்கப்பட்டு ஒப்பந்த முறையில் 4 ஆண்டுகள் பணியில் இருப்பர். நான்கு ஆண்டுகளின் முடிவில் 25 சதவீதம் பேர் மட்டும் இராணுவத்தில் தக்கவைக்கப்படுவர். மற்ற 75 சதவீதம் பேர் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் . அதன் பிறகு அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படாது.

இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு பின் திரும்பிய அந்த முக்கால் வாசி பேர்களுக்கும் வேறு ஏதேனும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்குமா? அதற்கு வாய்ப்பே இல்லை. இராணுவ பயிற்சி பெற்றதை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வது? அவர்களின் எதிர்காலம் என்னாவது?

விபரீதங்கள் நிறைந்த திட்டம்:

கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு கடுமையான இராணுவப் பயிற்சிகளை அளித்துவிட்டு அவர்களை எல்லையில் நிறுத்தாமல் நாட்டுக்குள் அனுப்பி வைத்தால் இந்த தேசம் தாங்குமா?
அதுவும் வேலை வாய்ப்பு, வருமானம் போன்றவை இன்றி கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் சூழ்நிலையில் சமூகத்தில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? இதன்மூலம் பல விபரீதங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

துப்பாக்கி வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்கித்தான் வைத்திருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது .ஏனெனில் ஆளாளுக்கு துப்பாக்கி வைத்திருப்பது தேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு கருதுகின்றது. எனில் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியளித்து குறுகிய கால ஒப்பந்த வேலை வழங்கி விட்டு அவர்களை மீண்டும் நாட்டுக்குள் அனுப்பி வைப்பதை எப்படி ஏற்க முடியும்.?

இப்பணி முடிந்து திரும்பிய அக்னி வீரர்களை சட்டவிரோத கும்பல்கள் அணுகினால் அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த தேசம் தாங்குமா?

அரசு செலவில் ஆயுதப் பயிற்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் அரசு செலவில் தங்கள் வகையறாக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அதன் மூலம் சமூகத்திற்கு கடும் கேடுகளை விளைவிப்பதற்கான அபாயங்களும் இதன் பின்னணியில் உள்ளது.

என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றன.

பிஜேபி அரசால் முன்னெடுக்கப்படுகிற, இத்தகைய விபரீதங்கள் நிறைந்த திட்டமாக அக்னிபத் இருக்கின்ற காரணத்தினால் தான் பிஜேபியைத் தவிர அனைவரும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இத்திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதுடன், இளைஞர்களை படிப்பறிவற்றவர்களாக ஆக்கி வன்முறை பாதைக்கு அழைத்துச் செல்ல துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கின்றது.

இப்படிக்கு:
ஆர். அப்துல்கரீம்.
பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here