இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் 3000 முஸ்லிம்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று எந்த பாகுபாடும் பார்க்கப்படாத படுகொலைகள் இந்துத்துவ வெறியர்களால் மூர்க்கத்தனமாக குஜராத்தில் நடத்த பட்டது.
இந்த இனப்படுகொலை நடைபெற்ற சமயத்தில் குஜராத்தின் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. இதில் நரேந்திர மோடிக்கும் பங்கிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் மூலம் சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு குஜராத் இனப்படுகொலையில் மோடிக்கும் குஜராத் அமைச்சர்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி அறிக்கையை சமர்பித்தது.
கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பியான இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடினார். ஜாக்கியா ஜாஃப்ரி உடன் டீஸ்டா செடல்வாட் என்ற சமூக செயற்பாட்டாளரும் இணைந்து கொண்டார். இவர் ஒரு இந்திய ஊடகவியலாளர்.
டீஸ்டா செடல்வாட் மனித உரிமைகளுக்குப் போராடும் ஓர் இந்தியப் பெண்மணி ஆவார். மதவாதத்துக்கு எதிராகவும், பெண்களுக்காகவும், தலித் இன மக்களுக்காகவும், இசுலாமியர்களுக்காகவும் பாடுபட்டு வருபவர். குடியுரிமை இழந்த பலருக்காக சட்டப்போராட்டம் நடத்தி குடியுரிமை பெற்றுத்தந்தவர். அந்த வகையில்தான் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்காக நீதி கேட்டு ஜாக்கியா ஜாஃப்ரியுடன் சேர்ந்து உதவினார்.
இந்த மேல் முறையீட்டிற்கான தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கை சரிதான் என்றும் மோடி குற்றமற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கிலிருந்து நரேந்திர மோடி விடுவிக்கப்படுகிறார்.
ஜூஹுவில் இருந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் வீட்டிற்கு “குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை வந்து அவரை கைது செய்து சாண்டாகுரூஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. ஐபிசியின் பிரிவுகள் 468 மற்றும் 471 ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமித்ஷாவின் பேட்டிக்குப் பிறகு டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
பாஜகவினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளை பாதுகாக்க சட்டப்போராட்டம் நடத்தி உதவி வந்த டீஸ்டா செடல்வாட்டின் கைது நடவடிக்கை அவரை போன்ற சமூக செயற்பாட்டாளர்களை முடக்குவதாகவே பார்க்கப்படுகிறது.
தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதினால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு நீதிமன்றம் செல்வது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டிருப்பது அதற்கும் கூட மறைமுக அச்சுறுத்தல் விடுப்பதாகவே உள்ளது. இது ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும்.
குஜராத் இனப்படுகொலை வழக்கில் முக்கிய காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வாக்கு மூலங்கள் கூட எற்றுக் கொள்ள மறுக்கபட்டுள்ளது. ஜக்கியா ஜாஃப்ரி அவர்கள் கொடுத்த போன் உரையாடல்கள் ஆதாரமாக எடுத்து கொள்ளபட வில்லை. தெஹல்காவின் புலனாய்வு தகவல்கள் புறந்தள்ளப்பட்டு இருக்கிறது.
அனைத்து ஆதாரங்களை கொண்டு தொடுக்கபட்ட இந்த வழக்கையும் பாசிச சக்திகள் திசை மாற்றுவார்கள் என்று சொன்னால், சிறுபான்மை சமுதாயத்தின் எதிர்காலம் என்ன என்ற கவலை சமுக சிந்தனையாளார்களிடம் எழுந்துள்ளது.
மோடிக்கு எதிராக செயல் பட்டதால் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர்களுக்கு எதிராக செயல்பட்டால் கைது செய்வோம் என்று சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்த ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. டீஸ்டா செடல்வாட் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
அநீதிக்கு எதிராக களம் இறங்கும் சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கி சிறுபான்மை சமுதாயத்தை தனிமைப்படுத்த ஆளும் ஒன்றிய அரசு முயன்று வருகிறது. அதற்கு இந்திய மக்கள் ஒரு போதும் இடம் அளிக்க மாட்டார்கள். சட்டத்தின் துணை கொண்டு சதிகளை முறியடிப்பார்கள்.
இப்படிக்கு:
ஆர். அப்துல்கரீம்.
பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.