மாநிலச் செயற்குழு – டிசம்பர் 25 2018 – உளுந்தூர்பேட்டை

மனித சமுதாயத்திற்கே வழிகாட்டியாகவும் ஆசானாகவும் திகழும் திருக்குர்ஆனை உலக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உன்னதப் பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டங்களில் கிளைகளில் தினந்தோறும் பல சகோதரர்களுக்கு திருமறைக் குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டு தாவா செய்யப்படுகின்றது.

மார்க்கப் பணிகளை ஒரு கண்ணாகவும் சமுதாயப் பணிகளை மறு கண்ணாகவும் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உலகப் பொதுமறை என்று அனைத்து மக்களாலும் போற்றப்படுகின்ற திருமறைக் குர்ஆனை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் வருகின்ற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் இறைவன் நாடினால் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான செயல்திட்டங்களும் முன்வரைவுகளும் மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளில் திருக்குர்ஆன் மாநாட்டிற்கான அழைப்புப் பணிகள் வீரியமெடுக்கின்றன. தவ்ஹீத் சகோதரர்கள் தினசரி பிரச்சாரங்களின் மூலம் தொப்புள் கொடி உறவுகளை நேரில் சென்று மாநாட்டுக்கு அழைத்து வருகின்றார்கள்.

திருக்குர்ஆன் மாநாட்டிற்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யவும் செயல்திட்டங்கள் வகுக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயற்குழு ஏற்பாடு செய்யப்பட்டது..

ஜனவரி 27 ல் உளுந்தூர்பேட்டையில் நடைபெற இருக்கும் திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்து கடந்த 25.12.2018 செவ்வாய்கிழமையன்று உளுந்தூர்பேட்டையில் மாநில தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் மாநில செயற்குழு நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது, பொருளாளர் காஞ்சி.சித்திக், துணைத் தலைவர் பா.அப்துல் ரஹ்மான், துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம், மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், இ. பாரூக், சையத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலை 10.30 செயற்குழு நிகழ்ச்சிகள் துவங்கியது. முதல் அமர்வில் மாநிலச் செயலாளர் அப்துல் கரீம், “இறைப்பணியில் திருப்தி கொள்வோம்” என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார்.
இறைப்பணிக்கு நாம் சஹாபாக்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும், இறைப்பணிக்காக சஹாபாக்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அதுபோன்ற பணிகளைச் செய்து மார்க்கத்தை வளர்த்துள்ளார்கள்.

அதை ஒப்பிடும் போது நமது துயரங்கள் குறைவுதான். யாராவது ஜமாத்திற்கு எதிராக எதையாவது செய்தால் நாம் துவண்டு போய் விடுகின்றோம். ஆனால் இறைப் பிரச்சாரத்திற்கு நாமெல்லாம் சஹாபாக்களின் தியாகங்களை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும் என்ற கருத்தில் உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச்செயலாளர் இ.முஹம்மது, “மாநாட்டை நோக்கிய நமது பயணம்” என்ற தலைப்பில் பேசினார். இந்த ஜமாஅத்தில் இருந்து குற்றம் நிருபிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களெல்லாம் இந்த மாநாடு எப்படி நடந்து விடும்? என பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுபோல் கொள்கை எதிரிகளும், முக்கியத் தலைவர்களெல்லாம் வெளியே போய் விட்டார்கள். இவர்களால் எப்படி மாநாட்டை நடத்தி விட முடியும்? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இறைவனின் அருளால் நாம் மாநாட்டை நெருங்கி விட்டோம். இந்த மாநாட்டிற்கு பிரச்சாரமே நமது இலக்கு என்றும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் பேசினார்.
ஸ்டிக்கர்கள், பிட் நோட்டீஸ்கள் தெருமுனைப் பிரச்சாரங்கள் மற்றும் தனிநபர் சந்திப்புகள் மூலம் மக்களை மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், மக்களை மாநாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

உணவு இடைவேளை நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேட்டியளித்த மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா., செயற்குழுவின் தீர்மானங்களை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். இஸ்லாமியர்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் செயற்குழுத் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு பேசிய மாநிலச் செயலாளர் ஆவடி இப்ராஹீம், “ஜமாஅத் மீதான அவதூறுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீது வைக்கப்படும் சமீபத்திய அவதூறுகள் குறித்து தெளிவான விளக்கம் கொடுத்தார்.

துளசியாபட்டினம், சிதம்பரம் பள்ளிவாசல் போன்ற விவகாரங்களில் ஜமாஅத் மீது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகள் குறித்து பேசினார். துளசியாபட்டினம் பள்ளிவாசல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமானது என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து மாநாடு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது. வானக ஏற்பாடுகள் குறித்தும் மற்றைய செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகிகளின் கருத்து திருப்திகரமாக இருந்தது. இறைவன் நாடினால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு வந்த மக்களை விட அதிகமான மக்களை மாநாட்டிற்கு அழைத்து வருவோம் என்று மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய மாநிலச் செயலாளர் ஐ.அன்சாரி, மாநாட்டிற்கு அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்வது குறித்தும் வழிகள் மற்றும் டோல்கேட்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாவட்ட வாரியாக வைக்கப்பட்ட எழுத்து மற்றும் கிராத் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் செய்யப்பட்டன.

மாநிலச் செயலாளர் இ.பாரூக், மாநாட்டுக் கண்காட்சி சம்பந்தமாக விளக்கினார். கண்காட்சிகள் எப்படி இருக்க வேண்டும், கண்காட்சிகள் அமைக்க வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி உரையாற்றினார்.

இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று பலரும் முயற்சிக்கும் இந்த நேரத்தில் தவ்ஹீத் கொள்கையைப் பின்பற்றும் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் உரையாற்றினார். சத்தியக் கொள்கையில் இருப்பவர்கள் பல நேரங்களில் சோதிக்கப்படுவார்கள். அதுபோன்ற நேரங்களில் சத்தியக் கொள்கைக்கே அல்லாஹ் வெற்றியைத் தருவான்.

சத்தியம் இருப்பவர்கள் கூட இந்தச் சோதனையில் வீழ்ந்து விடுவார்கள். அதற்கு சிறந்த உதாரணம் நபி மூசா (அலை) அவர்களின் சமுதாயம். அல்லாஹ்வின் உதவியை நேரில் பார்த்த மக்கள், ஷாமிரி உண்டாக்கிய காளைக் கன்றை கடவுளாக்கிய நிகழ்வுகள் உதாரணமாகத் திகழ்கின்றது.

சத்தியக் கொள்கையில் இருப்பவர்கள் கூட மூசா நபியின் சமுதாயத்தவர்களைப் போல சோதனை வரும் போது சறுக்கி விடுவார்கள். அதுபோலத்தான் ஜமாஅத்தில் பலவிதமான சோதனைகளில் பலர் வீழ்ந்தார்கள். அதற்கெல்லாம் ஆதாரங்கள் கைப்புண்ணிற்கு கண்ணாடி போல இருக்கின்றது. அவர்களெல்லாம் இல்லாமல் இந்த ஜமாஅத் சுருங்கிப் போய் விடாது., அழிந்து விடாது. சத்தியத்திற்கே அல்லாஹ் இறுதி வெற்றியைத் தருவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்து போன நேரத்தில் உமர் (ரலி) போன்ற தோழர்களே நபியவர்கள் இறந்து போகவில்லை என்று சொன்னார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்தியத்தை எடுத்துச் சொன்னதுமே மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். சத்தியவாதிகள் என்பவர்கள் அதைப்போலத்தான் இருக்க வேண்டும் என்கிற கருத்தில் ஷம்சுல்லுஹா உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹாவின் உரை மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

மாநிலச் செயலாளர் காஞ்சி இப்ராஹீம் நன்றியுரையாற்றினார். எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி சொல்லி செயற்குழு முடித்து வைக்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தீர்மானங்கள்

  1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் 2019 ஜனவரி 27 ல் விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டிற்கு பல லட்சம் மக்களை குடும்பத்துடன் கலந்து கொள்ளச் செய்வதோடு அனைத்து மக்களும் திருக்குர்ஆன் காட்டிய தூய வழியில் நடப்பதற்கு பாடுபட வேண்டும் என இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  2. ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துவதாக சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, முந்தைய தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 7% சதவிகிதமாக உயர்த்தி வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. கணினிகளைக் கண்காணிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து தனி நபர்களின் சுய விவரங்கள், ரகசியங்களில் கைவைக்கும் மத்திய மோடி அரசை செயற்குழு வன்மையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  4. முத்தலாக் அவசரச் சட்டத்தை நிறைவேற்றி அதன்மூலம் இஸ்லாமியர்களின் ஷரிஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து திட்டமிட்டே முஸ்லிம்களை பழிவாங்கும் போக்கை கையாளும் மத்திய அரசின் செயல்பாடுகளை இச்செயற்குழு மூலம் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  5. மாட்டிறைச்சியின் பெயரால் பலர் அடித்தே கொலை செய்யப்படுகின்றார்கள். அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக நடந்தால் அவர்களும் கொல்லப்படுகின்றார்கள். இதுபோன்ற செயல்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மட்டுமின்றி அதை ஊக்கப்படுத்தும் விதமாகவும் நடந்து வரும் செயல்களை கண்டித்து இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here