மாநிலச் செயற்குழு & தர்பியா – 25&26.03.2019 – ஊட்டி

சத்தியப் பிரச்சாரத்தை அதன் தூய வடிவில் எந்த சமரசமும் இன்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் உன்னதமான பணியை செய்து வருகின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இருளில் மூழ்கியிருந்த மக்களை வெளிச்சத்திற்கு அழைத்து மார்க்கத்தின் பெயரால் மக்களை மாற்றுப்பாதையில் திருப்பி வைத்திருந்த அசத்தியவாதிகளுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு அதன்மூலம் மக்களை சத்தியப் பாதைக்கு அழைத்து வந்த சாதனையைச் செய்த அமைப்பென்றால் அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும்தான்.

இறையச்சமுள்ள நிர்வாகிகள்:

தமிழகத்தில் எத்தனையோ மார்க்க அமைப்புகள் அரசியல் அமைப்புகள் இருந்தாலும் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இந்த அமைப்பில் எந்த ஒரு தனி நபருக்கும் தனி ஆளுமைக்குமோ எந்தவிதமான சிறப்புகளும் இல்லை என்பதை அனுபவப் பூர்வமாகவே செயல்முறைப் படுத்திக் காட்டியுள்ளது தவ்ஹீத் ஜமாஅத். கொள்ளை மட்டுமே தலைவன் என்ற உயரிய முழக்கத்தை உரக்கச் சொல்லும் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும்தான்.

இந்த அமைப்பில் உள்ள மாநில நிர்வாகிகளும் சரி மாவட்ட கிளை நிர்வாகிகளும் சரி, இறையச்சத்திலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் எப்போதுமே தூய்மையானவர்களாக வீற்றிருப்பவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள்.

நிர்வாகிகள் தர்பியா மற்றும் செயற்குழு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளின் இறையச்சத்தையும், நிர்வாகப் பொறுப்புகளையும், மார்க்க மற்றும் சமுதாயப்பணிகளையும் மேலும் மெருகேற்றி பட்டை தீட்டிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் வருடந்தோறும் மாநில அளவிலான செயற்குழு மற்றும் தர்பியா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் மாநிலத் தலைமையின் சார்பில் நடத்தப்படும் செயற்குழு மற்றும் தர்பியா கடந்த 25 மற்றும் 26/03/2019 ஆகிய இரண்டு நாட்களும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அருணகிரி மஹாலில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் கேரளா, மும்பை மற்றும் கர்நாடக மாநிலத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

பைலா மற்றும் நிலைப்பாட்டின் நன்மைகள்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு., மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் காலை 10 மணிக்கு துவங்கியது. செயற்குழுவின் முதல் அமர்வில் மாநிலப் பேச்சாளர் கோவை. ரஹ்மத்துல்லாஹ் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரைக்கும் நீதி செலுத்துவதில் எப்போதுமே நேர்மையாக இருக்கும் என்றும்,
அதனால்தான் கட்டுப்பாடுகளைக் கொண்ட பைலா விதிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைத்துக் கொண்டுள்ளது. இந்த விதிகளுக்கு தலைவராக இருந்தாலும் சாதாரண அடிப்படை உறுப்பினராக இருந்தாலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதுபோல ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக நிர்வாகிகள் இருக்க வேண்டும்.

அதுபோல யார் தவறு செய்தாலும் யாருக்கும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதில் தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்காது. அந்த வகையில்தான் கடந்த காலங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டை நாம் எடுத்ததன் காரணமாகவே அல்லாஹ்வின் கிருபையால் ஜமாஅத் காப்பாற்றப்பட்டது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்த நிலைப்பாட்டின் காரணமாகவே ஜமாஅத் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதையும் அல்லாஹ் நமக்கு அருள் செய்துள்ளான் என்பதையும் அனுபவப்பூர்வமாகவே உணர்ந்துள்ளதாகவும் அவரது உரையில் தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கை மற்றும் உறுப்பினர் அட்டை:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் மாநிலப் பொருளாளர் காஞ்சி சித்திக் உரையாற்றினார். ஜமாஅத்தின் நிதிநிலை அறிக்கை, மற்றும் பேரிடர் நிவாரணம் குறித்த அறிக்கைகளை செயற்குழுவில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிய உறுப்பினர் அட்டை வழங்குவது குறித்தும் அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் தெரிவித்தார்.

நிர்வாகிகளின் பண்புகள்:

மாநிலச் செயற்குழுவில் மேலாண்மைக் குழுத்தலைவர் எம்.எஸ். சுலைமான், “நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் என்றால் யார்? அவர்கள் எப்படி இருக்க வேண்டும், அவர்களுக்கு இருக்கக்கூடிய பண்புகள் குறித்தும், நிர்வாகிகள் நடந்து கொள்ளும் முறைகள் குறித்தும் மிகத்தெளிவாக தனது உரையில் சுட்டிக் காட்டினார். அதனுடன் செயற்குழுவின் முதல் அமர்வு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து லுஹர் அசர் தொழுகை மற்றும் உணவிற்கான இடைவேளை விடப்பட்டது.

இனிய மார்க்கத்தை அதிகப்படுத்துதல்:

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாநில செயற்குழுவின் இரண்டாவது அமர்வு துவங்கியது. மாநிலத் துணைத்தலைவர் பா. அப்துல் ரஹ்மான் தாவா முறைகள் பற்றி உரையாற்றினார். இஸ்லாமல்லாத மக்களை மிகவும் ஈர்க்கும் நிகழ்ச்சியான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியை மிகக் குறைந்த செலவில் நடத்துவது பற்றியும், இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதுபோல குழந்தைகளுக்கு நடத்தப்படும் மக்தப் வகுப்புகள் குறித்தும், அதன் அவசியம் பற்றியும், அதை அதிகப்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளிடம் சுட்டிக் காட்டினார்.

மாணவரணி மருத்துவரணியின் அவசியம்:

மாநில செயற்குழுவில் அடுத்த நிகழ்வாக மாநில துணைப்பொதுச்செயலாளர் மைலை. அப்துல் ரஹீம் “மாணவரணி மற்றும் மருத்துவரணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் முக்கிய சேவையான இரத்ததான சேவையில் ஒருங்கிணைக்கும் மருத்துவ அணிகள் குறித்தும் அதை மேம்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர் அணிகளின் பணிகள் குறித்தும் தெளிவாகச் சுட்டிக் காட்டினார்.

இத்துடன் இரண்டாம் அமர்வு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன, அத்துடன் மக்ரிப் தொழுகையும் நிறைவேற்றப்பட்டது.

இலவச திருக்குர்ஆன்:

மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மூன்றாம் அமர்வு துவங்கியது. இதில் மாநிலச் செயலாளர் முஜிப் ரஹ்மான் உரையாற்றினார். மாற்று மதச் சகோதரர்களுக்கு கொடுக்கப்படும் திருக்குர்ஆன் குறித்து தனது உரையில் தெரிவித்தார். ஒரு போஸ்ட் கார்டு அனுப்பினால் போதும் மாற்று மதச் சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் அனுப்பி வைக்கப்படும் என்றும், இன்னும் அதிக அதிகமான மக்களின் கைகளில் திருக்குர்ஆனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் சி.வி.இம்ரான் இமாம்களின் பற்றாக்குறை தொடர்பாக உரையாற்றினார். மாநிலச் செயலாளர் கைசர் பேசும் போது, வரக்கூடிய ரமலானில் நிர்வாகிகள் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் ரமலானில் நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் இ.பாரூக், ரமலான் மற்றும் கோடைகால பயிற்சி வகுப்புகளுக்கான பேச்சாளர்கள் கோருவது குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் ஆவடி இப்ராஹீம், பத்திரங்கள், பதிவுகள், ஆவணங்கள் குறித்து நிர்வாகிகளிடம் விளக்கினார்.

அமல்களின் அவசியம்:

மாநிலச் செயற்குழுவின் முத்தாய்ப்பாக மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, “அமல்களின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த ஜமாஅத்தில் பயணிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் இறையச்சம் மிக்கவர்கள் என்றும், அமல்களை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இறைவனின் பொருத்தத்தை அடைய முடியும் என்பது குறித்தும் தெரிவித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் இறைவன் நாடினால் விரைவில் வெளியாக இருக்கும் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு குறித்தும் தனது உரையில் தெரிவித்தார். அமல்களில் கவனம் செலுத்துவதும் ஆர்வப்படுத்தும் குறித்து மாநிலத் தலைவர் பேசிய பேச்சுகள் நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.

இஷா தொழுகைக்குப் பிறகு மாநிலச் செயற்குழு இனிதே நிறைவடைந்தது.

தஹஜ்ஜத் தொழுகையுடன் துவங்கிய தர்பியா:

மாநில செயற்குழுவின் இரண்டாம் நாள் அமர்வான நிர்வாகிகளுக்கான தர்பியா மறுநாள் காலை 4 மணியளவில் தஹஜ்ஜத் தொழுகையுடன் துவங்கியது. அத்துடன் பஜ்ர் தொழுகையும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. தொழுகையின் நிறைவில் மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி., சுவனத்தில் கிடைக்கும் இன்பங்கள் குறித்து சிற்றுரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் சிவி. இம்ரான்., திருக்குர்ஆன் வாசிக்கும் முறைகள் மற்றும் அதனை நம் வாழ்வில் நடைமுறைப் படுத்துவது குறித்தும் சிற்றுரையாற்றினார்.
அத்துடன் காலை உணவிற்கான இடைவேளை விடப்பட்டது.

தர்பியாவின் முதலாம் அமர்வு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளுக்கான செயற்குழு மற்றும் தர்பியாவின் இரண்டாம் நாள் நிகழ்வின் முதல் அமர்வு 26/03/2019 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் துவங்கியது. முதல் அமர்வின் துவக்கத்தில் மாநிலச் செயலாளர் திருச்சி சையது, தாவா செண்டர்களைக் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் யாசிர்., உணர்வு மற்றும் ஏகத்துவம் இதழ்கள் தொடர்பான அறிவிப்புகளை எடுத்துரைத்தார்.

தர்பியாவின் முதல் அமர்வின் அடுத்த நிகழ்வாக மாநிலச் செயலாளர் அப்பாஸ்., இரத்ததானம் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தான அறிவிப்புகளையும், நடைமுறைகளையும் பற்றி விளக்கினார். அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் நெல்லை யூசுப் அலி., காவல்துறையை அணுகும் முறைகள் குறித்தும் ஜனாஸா போன்ற பிரச்சனைகளில் நிர்வாகிகள் செயல்படும் முறைமைகள் குறித்தும் தெளிவாக விளக்கமளித்தார்.

இஸ்லாம் கூறும் நிர்வாகவியல்:

தர்பியாவின் முதலாம் அமர்வின் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக மாநிலப் பொதுச்செயலாளர் இ.முஹம்மது., “இஸ்லாம் கூறும் நிர்வாகவியல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நிர்வாகம் என்பது என்ன? இஸ்லாம் கூறும் வழியில் நேர்மையான நிர்வாகம் செய்வது குறித்தும், நிர்வாக மசூராக்கள் குறித்தும், நிர்வாகம் தொடர்பான பின்பற்றும் முறைமைகள் குறித்தும் தெளிவாக விளக்கமளித்தார்.

கொள்கையில் தடம் புரண்டவர்கள்:

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாநிலச் செயலாளர் அப்துல் கரீம், “கொள்கையில் தடம் புரண்டவர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த ஜமாஅத்தில் இருந்து குற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், ஜமாஅத்தை விட்டு வெளியே போன பிறகு தங்களின் சுயநலனிற்காக எப்படியெல்லாம் மார்க்கத்தை வளைத்தார்கள் என்றும், எப்படியெல்லாம் கொள்கையில் தடம் புரண்டு போனார்கள் என்பதைப் பற்றியும் ஆதாரமான வீடியோ கிளிப்புகளுடன் விளக்கிக் காட்டினார்.

இந்த ஜமாஅத்தில் இருக்கும் போது மாபெரும் அறிஞர்களாகப் பார்க்கப்பட்டவர்கள் இன்றைக்கு வெளியே போய் எந்த அளவிற்கு மோசமாக மாறி கொள்கையில் தலைகீழாய் தடம்புரண்டு விட்டார்கள் என்பதை அவர்கள் அன்றும் இன்றும் பேசிய வீடியோ கிளிப்புகளை ஆதாரமாய் போட்டுக் காட்டினார். முன்னாள் அறிஞர்களின் முரண்பாடுகளைப் பார்த்த நிர்வாகிகள், ஜமாஅத்தில் இருந்து வெளியேறியவர்களின் நிலையைப் பற்றி மிகத் தெளிவாக அறிந்து கொண்டனர்.

தர்பியாவின் தொடர் நிகழ்வாக மாநிலச் செயலாளர் வடசென்னை அன்சாரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்துப் பேசினார். வரக்கூடிய ரமலானில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்தும் அதற்கான விளம்பரங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பிறை குறித்த நிலைப்பாடுகள்:

அதனைத் தொடர்ந்து ,மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துந்நாசிர் பிறை குறித்த நிலைப்பாடுகளை மக்களிடத்தில் விளக்கினார். பிறை குறித்து சர்ச்சைகள், பிறை தீர்மானிக்கப்படும் முறைகள் குறித்து திருக்குர்ஆன் ஹதீஸ் இலக்கணத்தின் அடிப்படையில் மிகத்துல்லியமாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் காஞ்சி இப்ராஹீம், குலா தொடர்பான முறைகள் குறித்தும் அதில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்தும் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் மாநிலச் செயலாளர் செங்கோட்டை பைசல் நன்றியுரையாற்றினார். இரண்டு நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்துக் கொடுத்த எல்லாம் வல்ல ரஹ்மானுக்கு நன்றி சொல்லி நிகழ்ச்சி முடித்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இரண்டு நாள் நிகழ்விலும் கலந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு கலைந்து சென்றனர். ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்துவதற்கும் நிர்வாகம் செய்வதற்கும், பிரச்சினைகளை அணுகுவதற்கும், அவதூறு பிரச்சாரங்களை மாய்ப்பதற்கும் இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் தங்களுக்கு பேருதவி புரிந்ததாக அவர்கள் தெரிவித்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here